அஷேன் பண்டார இரட்டைச் சதம்: புனித அலோசியஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி

283
Ashen Bandara
සාන්ත ඇලෝසියස් ක්‍රීඩක අශේන් බණ්ඩාර ©ThePapare.com

19 வயதிற்கு உட்பட்டோருக்கான ‘சிங்கர்‘ கிரிக்கெட் தொடரில் அநுராதபுரம் மத்திய கல்லூரியுடனான போட்டியில், புனித அலோசியஸ் கல்லூரி முதல் இனிங்ஸ் வெற்றியை பெற்றுக் கொண்டது.

இன்று நிறைவடைந்த மற்றும் ஆரம்பமான அனைத்து போட்டிகளிலும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஒதுக்கப்பட்ட ஓவர்களை விடக் குறைவான ஓவர்களே வீசப்பட்டன.

புனித அலோசியஸ் கல்லூரி எதிர் அநுராதபுரம் மத்திய கல்லூரி

அதிகாலை பெய்த அடை மழையின் காரணமாக இரண்டாம் நாள் ஆட்டம் தாமதமாகியே ஆரம்பமாகியது. முதல் நாள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 91 ஓட்டங்களைப் பெற்றிருந்த புனித அலோசியஸ் கல்லூரி, முதல் இனிங்ஸில் முன்னிலை பெற மேலும் 96 ஓட்டங்களைப் பெற வேண்டிய நிலையில் களமிறங்கியது.

19 வயதிற்கு உட்பட்டோருக்கான இலங்கை அணியின் வீரர் அஷேன் பண்டார மற்றும் நவிது நிர்மால் 3 ஆவது விக்கெட்டுக்காக பாரிய இணைப்பாட்டமொன்றை பகிர்ந்து கொண்டனர். அற்புதமாக துடுப்பெடுத்தாடிய அஷேன் பண்டார ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களைக் குவித்ததுடன் நவிது நிர்மால் 105 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் ஆட்டமிழந்தார். அதன்படி 3 விக்கெட்டுகளை இழந்து 355 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்ட புனித அலோசியஸ் கல்லூரி ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய அநுராதபுரம் மத்திய கல்லூரி, போட்டி நிறைவடையும் போது 2 விக்கெட்டுகளை இழந்து 31 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. புனித அலோசியஸ் கல்லூரி சார்பாக 2 விக்கெட்டுகளையும் ஹரீன் வீரசிங்க பெற்றுக் கொண்டார். அதன்படி போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

அநுராதபுரம் மத்திய கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 186 (69.1) லஹிரு லியனகே 54, ஹேஷான் சேனார 43, ஹரீன் வீரசிங்க 6/70, நிதுக மல்சித் 3/24

புனித அலோசியஸ் கல்லூரி (முதல் இனிங்ஸ்) – 355/3d (82.3) அஷேன் பண்டார 200*, நவிது நிர்மால் 105

அநுராதபுரம் மத்திய கல்லூரி (இரண்டாவது இனிங்ஸ்) – 31/2 (12.5) ஹரீன் வீரசிங்க 2/18

முடிவு – போட்டி சமநிலையில் முடிவடைந்தது. புனித அலோசியஸ் கல்லூரி முதல் இனிங்ஸில் வெற்றி.


ரிச்மண்ட் கல்லூரி எதிர் ரோயல் கல்லூரி

மழை காரணமாக தாமதமாகி ஆரம்பித்த இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் கல்லூரி முதலில் களத்தடுப்பினைத் தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய ரிச்மண்ட் கல்லூரி, ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

ரிச்மண்ட் கல்லூரி சார்பாக தனஞ்சய லக்ஷான் 61 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். கமிந்து மெண்டிஸ் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார். ரோயல் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் கனித் சந்தீப 43 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நாளை போட்டியின் இரண்டாவது நாளாகும்.

போட்டியின் சுருக்கம்

ரிச்மண்ட் கல்லூரி – 189/3 (42.2) தனஞ்சய லக்ஷான் 61, கமிந்து மெண்டிஸ் 45*, சாமிக ஹேவகே 33, கனித் சந்தீப 2/43

தர்ஸ்டன் கல்லூரி எதிர் புனித ஜோசப் வாஸ் கல்லூரி

மழையின் காரணமாக நாணய சுழற்சியின் முன்னரே போட்டி கைவிடப்பட்டதுடன், பிறிதொரு நாளிற்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.