மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி முதல் இன்னிங்சில் வெற்றி

278
school cricket

ஹோலி கிராஸ் கல்லூரி மற்றும் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரிகளுக்கிடையில் இடம்பெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி சமநிலையில் முடிவுற்றது. எனினும், முதல் இன்னிங்சில் பெற்றுக்கொண்ட ஓட்டங்களின் அடிப்படையில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றியை சுவீகரித்து. இன்று இடம்பெற்ற ஏனைய போட்டிகளின் முதல் நாள் நிறைவில் வத்தளை புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் மஹாநாம கல்லூரி ஆகிய அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

ஹோலி கிராஸ் கல்லூரி எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி

சர்ரே விலேஜ் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மாரிஸ் ஸ்டெல்லா அணித்தலைவர் எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தார்.

அதன்படி, தனது முதல் இன்னிங்சிற்காக களமிறங்கிய ஹோலி கிராஸ் கல்லூரி 67.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 259 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பாட்டத்தில் மலிந்த ஜயோத் (58)  மற்றும் லஹிரு அங்கவிட்ட (63) அரைச்சதம் விளாசினர். பசிந்து பெரேரா 45 ஓட்டங்களையும் நதீர மதுவந்த 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

சிறப்பாக பந்து வீசிய சச்சிந்து கொலம்பகே 48 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களையும் லசித் ப்ரூஸ்புள்ளே 74 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களயும் என தமக்கிடையே 9 விக்கெட்டுக்களை பங்கிட்டுக் கொண்டனர்.

பதிலுக்கு களமிறங்கிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 81 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 347 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக அபாரமாக துடுப்பெடுத்தாடிய சங்க பூர்ண 99 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதேபோன்று, நவீன் நிர்மால் 44 ஓட்டங்களையும், அஷான் தக்ஷித 33 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் சிறப்பித்த  ரெஹான் வாஸ் 61 ஓட்டங்களைக் கொடுத்து 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய ஹோலி கிராஸ் கல்லூரியின் வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை.

ஆட்ட நேர முடிவின் போது 7 விக்கெட்டுக்களை இழந்து 117 ஓட்டங்களை பெற்றிருந்த ஹோலி கிராஸ் அணியினர் தோல்வியை தவிர்த்துக் கொண்டனர். மீண்டுமொருமுறை துடுப்பாட்டத்தில் அசத்திய மலிந்த ஜயோத் தனியாளாக போராடி 62 ஓட்டங்களைக் குவித்தார். பந்துவீச்சில் பசிந்து மற்றும் சச்சிந்து தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

போட்டியின் சுருக்கம்

ஹோலி கிராஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)259/10 (67.3) – மலிந்த ஜயோத் 58, லஹிரு அங்கவிட்ட 63, பசிந்து பெரேரா 45, நதீர மதுவந்த 36, சச்சிந்து கொலம்பகே 5/48, லசித் ப்ரூஸ்புள்ளே 4/74

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்)347/10 (81) – சங்க பூர்ண 99, சச்சிந்து கொலம்பகே 85, நவீன் நிர்மால் 44, அஷான் தக்ஷித 33, ரெஹான் வாஸ் 4/61, அவிஷ்க பெரேரா 2/44

ஹோலி கிராஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்)117/7 (41) – மலிந்த ஜயோத் 62, அவிஷ்க பெரேரா 25*, பசிந்து உஷேத 3/22, சச்சிந்து கொலம்பகே 3/11


மஹாநாம கல்லூரி எதிர் லும்பினி கல்லூரி

கோல்ட்ஸ் கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மஹாநாம கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி முதலில் இன்னிங்சில் அணித்தலைவர் தனுக அரைச்சதம் அடிக்க, லும்பினி கல்லூரி 70.5 ஓவர்களில் 216 ஓட்டங்களைக் குவித்தது.

சரித் மிஹிரங்க 36 ஓட்டங்களையும் ரவிந்து சஞ்சீவ 34 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்து வீச்சில் நிதுக வெளிகல  3 விக்கட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மஹாநாம கல்லூரி முதல் நாள் நிறைவின் போது 2 விக்கெட்டுக்களை இழந்து 51 ஓட்டங்களை பெற்றிருந்தது. கவிந்து முனசிங்க ஆட்டமிழக்காது 31 ஓட்டங்களை பெற்று களத்திலிருந்தார்.

லும்பினி கல்லூரி – 216/10 (70.5) – தனுக தபரே  50, சரித் மிஹிரங்க 36, ரவிந்து சஞ்சீவ 34, நிதுக வெளிகல 3/48

மஹாநாம கல்லூரி – 51/2 (16) – கவிந்து முனசிங்க 31*