இடதுகை சுழற்பந்து வீச்சாளர் பவித் ரத்னாயக்கவின் அசத்தல் பந்து வீச்சின் உதவியுடன் புனித தோமஸ் கல்லூரி 2016/2017 பருவகாலத்திற்கான தமது முதல் போட்டியில் அபார வெற்றியை ஈட்டிக்கொண்டது.
கல்கிசை புனித தோமஸ் கல்லூரி எதிர் பன்னிப்பிட்டிய தர்மபால கல்லூரி புனித தோமஸ் கல்லூரி பெற்ற 339 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் களமிறங்கிய தர்மபால கல்லூரி முதல் நாள் நிறைவில் 3 விக்கட்டுகளை இழந்து 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். புனித தோமஸ் கல்லூரி சார்பாக இஷேன் பெரேரா மற்றும் மந்தில விஜேரத்ன சதங்களை விளாசியிருந்தனர்.
வலதுகை வேகப்பந்து வீச்சாளர் தினுற குணவர்தன மற்றும் பவித் ரத்நாயக்க தலா 3 விக்கட்டுகள் வீதம் சாய்க்க, தர்மபால கல்லூரி 111 ஓட்டங்களுக்கு சுருண்டது. புனித தோமஸ் கல்லூரியின் தலைவர் எதிரணியை மீண்டும் துடுப்பெடுத்தாடும்படி பணித்தார். அதன்படி இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய தர்மபால கல்லூரி 104 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது. அதன்படி புனித தோமஸ் அணியினர் இனிங்ஸ் மற்றும் 124 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்தனர்.
மிகவும் சிறப்பாகப் பந்து வீசிய பவித் ரத்நாயக்க 47 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 7 விக்கட்டுகளைக் கைப்பற்றினார். இதன்படி அவர் போட்டியில் மொத்தமாக 10 விக்கட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்க விடயமாகும். மற்றுமொரு இடதுகை சுழற்பந்து வீச்சாளரான டெலோன் பீரிஸ் 2 விக்கட்டுகளைக் கைப்பற்றியதுடன் தர்மபால கல்லூரி சார்பில் ஹசந்த விஸ்வஜித் 30 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
தர்மபால கல்லூரி தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியுள்ளது. புனித தோமஸ் கல்லூரி எதிர்வரும் 22ஆம் மற்றும் 23ஆம் திகதிகளில் மொரட்டுவ பிரின்ஸ் ஆப் வேல்ஸ் கல்லூரியை எதிர்த்து விளையாடவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
புனித தோமஸ் கல்லூரி
முதல் இன்னிங்ஸ் – 339/7d (80.2 ஓவர்களில்) – இஷான் பெரேரா 107, மந்தில விஜேரத்ன 102, ரவிந்து கொடிதுவக்கு 62, மஹிம வீரக்கோன் 2/86, சமிந்து சமரசிங்க 2/89
தர்மபால கல்லூரி
முதல் இனிங்ஸ் – 111/10 (41.2 ஓவர்களில்) – கனிஷ்க ஜயசுந்தர 23, கிம்ஹான முனசிங்க 21, பவித் ரத்நாயக்க 3/29, தினுற குணவர்தன 3/30
தர்மபால கல்லூரி
இரண்டாவது இனிங்ஸ் – 104/10 (34.3 ஓவர்களில்) – துலாஜ் எகொடகே 28, ஹசந்த விஸ்வஜித் 30, பவித் ரத்நாயக்க 7/47, டெலோன் பீரிஸ் 2/20
கண்டி திரித்துவக் கல்லூரி எதிர் மாத்தறை புனித சேர்வேஷஸ் கல்லூரி
கண்டி அஸ்கிரிய மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டி சமநிலையில் முடிவுற்றதுடன், முதல் இனிங்ஸில் கண்டி திரித்துவக் கல்லூரி வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
திரித்துவக் கல்லூரி முதல் இனிங்ஸில் பெற்றுக் கொண்ட 188 ஓட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில் துடுப்பெடுத்தாடிய சேர்வேஷஸ் கல்லூரி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 4 விக்கட்டுகளை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்றைய தினம் இடதுகை சுழற்பந்து வீச்சாளரான விமுக்தி நெதுமால் 4 விக்கட்டுகளை வீழ்த்த, புனித சேர்வேஷஸ் அணியினர் 166 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தனர்.
19 வயதிற்குட்பட்ட இலங்கை அணி வீரரான திலான் பிரஷான் 53 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். திரித்துவக் கல்லூரி சார்பாக இடதுகை பந்துவீச்சாளர்களான விமுக்தி, அணித்தலைவர் ஷனொகீத் சண்முகநாதன் மற்றும் திசரு டில்ஷான் ஆகியோர் தமக்கிடையே 9 விக்கட்டுகளைப் பங்கிட்டுக் கொண்டமை சிறப்பம்சமாகும்.
இரண்டாவது இனிங்ஸிற்காக களமிறங்கிய திரித்துவக் கல்லூரி சிறப்பாக துடுப்பெடுத்தாடி ஒரு விக்கட்டை மாத்திரமே இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. உபதலைவர் ஹசித போயகொட மற்றும் கலன டி சொய்சா ஆகியோர் ஆட்டமிழக்காது அரைச்சதங்கள் பெற்றுக் கொண்டனர்.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி
முதல் இனிங்ஸ் – 188/10 (67.1 ஓவர்களில்) – ஹசிந்த ஜயசூரிய 58, திசரு டில்ஷான் 30, ஷெவோன் பெர்சிவல் 25, திலான் பிரஷான் 2/27, சஷிக டில்ஷான் 4/44
புனித சேர்வேஷஸ் கல்லூரி
முதல் இனிங்ஸ் – 166/10 (76.5 ஓவர்களில்) – திலான் பிரஷான் 53, பசிந்து மனுப்பிரிய 35, திசரு டில்ஷான் 3/70, விமுக்தி நெதுமால் 4/37, ஷனொகீத் சண்முகநாதன் 2/28
திரித்துவக் கல்லூரி
இரண்டாவது இனிங்ஸ் – 163/1 (39.2 ஓவர்களில்), ஹசித போயகொட 68*, கலன டி சொய்சா 57*, ஷனொகீத் சண்முகநாதன் 33
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்