19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில், நேற்று (03) பங்களாதேஷினை எதிர்கொண்ட இலங்கை அணியானது 07 ஓட்டங்களால் த்ரில் வெற்றியினைப் பதிவு செய்துள்ளது.
குழு B அணிகளான இலங்கை – பங்களாதேஷ் ஆகியவற்றின் மோதல் துபாயில் ஆரம்பமாகியது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இளம் வீரர்கள் விமத் டின்சாரவின் அசத்தல் சதத்தோடு 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்கள் பெற்றனர்.
>>“எமது மோசமான துடுப்பாட்டமே தோல்விக்குக் காரணம்” – சந்திமால்<<
இலங்கை துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்சமாக விமத் டின்சார 10 பௌண்டரிகள் அடங்கலாக 132 பந்துகளில் 106 ஓட்டங்கள் பெற்றார். பங்களாதேஷ் பந்துவீச்சில் அல் பஹாட் 50 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ரிசான் ஹொசைன் 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களையும் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 229 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய பங்களாதேஷ் இளம் வீரர்கள் சிறந்த ஆரம்பத்தினை பெற்றதோடு ஒரு கட்டத்தில் 172 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து காணப்பட்டிருந்தனர்.
இந்த நேரத்தில் பங்களாதேஷிற்கு நம்பிக்கை வழங்கிய கலாம் சித்தீக்கி சதத்தினை நெருங்கிய நிலையில் 95 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். கலாமின் விக்கெட்டினை அடுத்து இலங்கைப் பந்துவீச்சாளர்களினை எதிர் கொள்ள முடியாமல் தடுமாறிய பங்களாதேஷ் வீரர்கள் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 221 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் சுழல்வீரரான விஹாஸ் தேவ்மிக்க 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார். மறுமுனையில் விரான் சாமுதித, பிரவீன் மனீஷ மற்றும் குகதாஸ் மாதுளன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது 19 வயதின்கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ணத் தொடரில் குழுநிலைப் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற்றுள்ள இலங்கை இளம் அணியானது அடுத்ததாக ஆசியக் கிண்ணத் தொடரின் அரையிறுதிப் போட்டிகளுக்கும் தோல்வியுறாத அணியாக முன்னேறியுள்ளது.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 – 228 (49.2) விமத் டின்சார 106, அல் பஹாட் 50/4, ரிசான் ஹொசைன் 40/3
பங்களாதேஷ் U19 – 221 (49.3) கலாம் சித்திக்கீ 95, விஹாஸ் தேவ்மிக்க 37/3
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<