19 வயதின் கீழ்ப்பட்டோருக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று (01) ஆப்கானிஸ்தானை எதிர்கொண்ட இலங்கை இளம் வீரர்கள் ஆப்கானை 131 ஓட்டங்களால் வீழ்த்தியிருப்பதோடு, தொடரில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் முன்னேறுகின்றது.
>>ஜெரால்ட் கோட்ஸி இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம்<<
ஆசியக் கிண்ணத் தொடரின் முதல் போட்டியில் நேபாளத்தினை வெற்றி கொண்டு தொடரினை ஆரம்பித்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி வீரர்கள் குழு B அணிக்காக ஆப்கானை எதிர்கொண்ட போட்டி ஷார்ஜாவில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை 19 வயதின் கீழ் அணியின் தலைவர் விஹாஸ் தேவ்மிக்க முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார். இதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை வீரர்கள் ஆரம்ப வீரர் புலிந்து பெரேராவின் அரைச்சதத்துடன் வலுப்பெற்றது.
புலிந்து பெரேராவின் பின்னர் இலங்கை அணிக்கு சாருஜன் சண்முகநாதன் சதம் விளாசி பெறுமி தந்தார். கடந்த போட்டியில் அரைச்சதம் விளாசிய சாருஜன் இப்போட்டியில் பெற்ற சதத்தோடு இலங்கை அணியானது 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 243 ஓட்டங்கள் எடுத்தது.
இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் சாருஜன் சண்முகநாதன் மொத்தமாக 7 பௌண்டரிகளோடு 102 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் புலிந்து பெரேரா 5 பௌண்டரிகளோடு 53 ஓட்டங்களைக் குவித்தார்.
ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அல்லா கசான்பார் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்த்திருக்க அப்துல் அசீஸ், நூரிஸ்தானி ஓமர்சாய், நசீர் கான் மற்றும் மஹ்பூப் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தனர்.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 244 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியானது வெறும் 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 112 ஓட்டங்களை மட்டும் எடுத்து போட்டியில் படுதோல்வி அடைந்தது.
ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக நசீபுல்லா அமிரி 33 ஓட்டங்கள் எடுக்க, இலங்கை பந்துவீச்சில் பிரவீன் மனீஷ 3 விக்கெட்டுக்களையும், நியூட்டன் ரஞ்சித்குமார், விரான் சாமுதித மற்றும் விஹாஸ் தேவ்மிக்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.
போட்டியின் ஆட்டநாயகன் விருதினை இலங்கை சார்பில் சதம் விளாசிய சாருஜன் சண்முகநாதன் பெற்றுக்கொண்டார்.
போட்டியின் சுருக்கம்
இலங்கை U19 – 243/7 (50) சாருஜன் சண்முகநாதன் 102, புலிந்து பெரேரா 53, அல்லா கசான்பார் 35/3
ஆப்கானிஸ்தான் U19 – 112 (28.2) நசீபுல்லா அமிரி 33, பிரவீன் மனீஷ 16/3, விஹாஸ் தேவ்மிக்க 10/2, ரஞ்சித்குமார் நியூட்டன் 28/2
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<