ஐக்கிய அரபு இராச்சியத்திடம் வீழ்ந்த இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி

U19 Asia Cup 2023

173
U19 Asia Cup 2023

இளையோர் ஒருநாள் ஆசியக் கிண்ணத் தொடரில் இன்று (11) இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியினை எதிர் கொண்ட ஐக்கிய அரபு இராச்சியம், இலங்கை வீரர்களை 2 விக்கெட்டுக்களால் வீழ்த்தியிருக்கின்றது.

>>ஐசிசி அறிமுகப்படுத்தவுள்ள புதிய விதிமுறை!

மேலும் இந்த வெற்றியோடு ஐக்கிய அரபு இராச்சிய அணி இலங்கை வீரர்களை இளையோர் ஒருநாள் போட்டியொன்றில் முதன் முறையாக வீழ்த்தி வரலாற்று சாதனை ஒன்றினையும் பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இளையோர் ஆசியக் கிண்ணத் தொடரில் குழு B இல் காணப்படும் இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி தமது முதல் போட்டியில் ஜப்பானுக்கு எதிராக இலகு வெற்றியினைப் பதிவு செய்த நிலையில், இன்று (11) ஐக்கிய அரபு இராச்சிய அணியினை எதிர் கொண்டிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இலங்கை வீரர்களுக்கு வழங்கியது.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி துடுப்பாட்டம் சார்பில் தினுர கலுப்பகன அதிகபட்சமாக ஆட்டமிழக்காது 56 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவர் சினேத் ஜயவர்தன 49 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

ஐக்கிய அரபு இராச்சிய அணியின் பந்துவீச்சில் ஒமிட் ரஹ்மான் மற்றும் அயான் அப்சால் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

>>மே.தீவுகள் வீரர்கள் ஒப்பந்தத்திலிருந்து விலகிய பூரன், ஹோல்டர்

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 221 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணி போராட்டத்தினை காண்பித்ததோடு போட்டியின் வெற்றி இலக்கை 48.2 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களுடன் அடைந்தது.

ஐக்கிய அரபு இராச்சிய 19 வயதின் கீழ் கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் வெற்றியினை உறுதி செய்த தனீஷ் சூரி 88 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் பெற்றிருந்தார்.

இலங்கை பந்துவீச்சு சார்பில் கருக்கா சங்கேத் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை சாய்த்திருந்த போதும் அவரது பந்துவீச்சு வீணாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<