ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் இளையோர் ஆசிய கிண்ணத்தின் அரையிறுதிப்போட்டியில், பாகிஸ்தான் U19 அணியை 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு இலங்கை U19 அணி தகுதிபெற்றுள்ளது.
டுபாயில் அமைந்துள்ள ஐசிசி அகடமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை U19 அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.
இலங்கை கிரிக்கெட்டிற்கு 2021ஆம் ஆண்டு எப்படி??
அதன்படி, களமிறங்கிய இலங்கை U19 அணிக்கு சவால் கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் U19 வீரர்கள் பந்துவீசியிருந்தனர். முதல் சுற்று போட்டிகளில் துடுப்பாட்டத்தில் இரண்டு தடவைகள் 300 ஓட்டங்களை கடந்த இலங்கை அணியால், இந்த போட்டியில் ஓட்டங்களை குவிக்க முடியவில்லை.
தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை U19 அணி, 70 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும், யசிரு ரொட்ரிகோ மற்றும் மதீஷ பதிரண ஆகியோர் இணைந்து 9 விக்கெட்டுக்காக 47 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, இலங்கை அணி 100 ஓட்டங்களை கடந்தது. தொடர்ந்து 10வது விக்கெட்டுக்காக களமிறங்கிய டிரவீன் மெதிவ் 12 ஓட்டங்களையும், யசிரு ரொட்ரிகோ 31 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுக்க, இலங்கை அணி 44.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மதீஷ பதிரண 31 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததுடன், பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் ஷீஷான் ஷமீர் 4 விக்கெட்டுகளையும், அஹ்மட் கான் மற்றும் அவைஸ் அலி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் U19 அணி, டிரவீன் மெதிவின் அபார பந்துவீச்சின் காரணமாக முதல் 3 விக்கெட்டுகளையும் 10 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியது. எனினும், இதற்கு அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் கசிம் அக்ரம் மற்றும் முஹமட் ஷேஷாட் ஆகியோர் சிறந்த இணைப்பாட்டம் ஒன்றை பகிர்ந்து இலங்கை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர்.
ஆனால் இவர்களின் விக்கெட்டுகளை முறையே ஷெவோன் டேனியல் மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோர் வீழ்த்தி அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர். தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்களில் அஹ்மட் கான் மாத்திரம் அதிகபட்சமாக 36 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, இலங்கை U19 பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்தியும், ஓட்டங்களை கட்டுப்படுத்தியும் நெருக்கடி கொடுத்தனர்.
எனவே கடுமையான அழுத்தத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான் U19 அணியால், 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. இதன்காரணமாக, 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பாகிஸ்தான் U19 அணி தொடரிலிருந்து வெளியேற, இலங்கை U19 அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இலங்கை அணியின் பந்துவீச்சை பொருத்தவரை டிரவீன் மெதிவ் 4 விக்கெட்டுகளையும், அணித்தலைவர் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியதுடன், ரவீன் டி சில்வா, மதீஷ பதிரண மற்றும் ஷெவோன் டேனியல் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்தனர்.
எனவே இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இலங்கை U19 அணி பெற்றுக்கொண்டுள்ள நிலையில், குறித்த இந்த இறுதிப்போட்டியில் இந்திய U19 அணியை நாளைய தினம் (31) எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுருக்கம்
இலங்கை U19 – 147/10 (44.5), யசிரு ரொட்ரிகோ 31, மதீஷ பதிரண 31, ஷீஷான் ஷமீர் 4/32
பாகிஸ்தான் U19 – 125/10 (49.3), அஹ்மட் கான் 36, முஹமட் சேஷாட் 30, டிரவீன் மெதிவ் 4/14, துனித் வெல்லாலகே 3/31
முடிவு – இலங்கை U19 அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<