இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் நடாத்தும் 2017ஆம் ஆண்டுக்கான பிரிவு ஒன்று கால்பந்து தொடரின் இறுதிப் போட்டிக்கு கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகள் தெரிவாகியுள்ளன.
மொறகஸ்முல்ல ஜனக ரனவக்க மைதானத்தில் நேற்று (25) இடம்பெற்ற தொடரின் அரையிறுதிப் போட்டிகளில் பலம் மிக்க அணிகளான ஸாஹிரா மற்றும் புனித பேதுரு கல்லூரி அணிகளை வெற்றிகொண்டதன் மூலமே அவர்கள் இறுதி மோதலுக்கான வாய்ப்பைப் பெற்றனர்.
புனித ஜோசப் கல்லூரி, கொழும்பு எதிர் ஸாஹிரா கல்லூரி, கொழும்பு
போட்டியின் முதலாவது முயற்சியாக 14ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் எதிரணியின் பரப்பில் தொடர்ச்சியான பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு அதன் நிறைவில் பெனால்டி பெட்டியினுள் இருந்து அணித் தலைவர் மொஹமட் முர்ஷிட் பந்தை கோல் நோக்கி உதைந்தார். எனினும் புனித ஜோசப் அணியின் கோல் காப்பாளர் பந்தைப் பிடித்துக்கொண்டார்.
அரையிறுதிக்குள் முதலில் நுழைந்த புனித ஜோசப், ஸாஹிரா அணிகள்
இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம்..
தொடர்ந்து அடுத்த நிமிடங்களிலும் ஸாஹிரா வீரர்களான நஸ்ருடீன் மற்றும் ஹம்மாட் மூலம் கோலுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அவர்களது இலக்கு சிறந்த முறையில் அமையவில்லை.
புனித ஜோசப் கல்லூரி வீரர்களின் முதல் முயற்சியாக அசேல மதுஷான் மத்திய களத்தில் இருந்து எதிரணியின் கோல் பகுதிக்குள் பந்தை எடுத்துச் சென்று, கோல் வரை நெருங்கிச் சென்றுகொண்டிருக்கையில், ஸாஹிரா அணியின் தடுப்பு வீரர்கள் வேகமாக அவரைத் தொடர்ந்து வந்து அசேலவின் கட்டுப்பாட்டில் இருந்து பந்தை திசை திருப்பினர்.
எனினும் போட்டியின் 34ஆவது நிமிடம் தமது அணியின் பகுதியில் இருந்து பந்தைப் பெற்ற அசேல மதுஷான் அதனை மைதானத்தின் மத்தியில் இருந்த அணித் தலைவர் ஜேசன் பெர்னாண்டோவுக்கு வழங்கினார். பந்தைப் பெற்று எதிரணியின் பின்கள வீரர்களைவிட முன்னோக்கி ஓடிச் சென்ற ஜேசன், ஸாஹிரா கோல் காப்பாளர் முன்னோக்கி வந்துகொண்டிருக்கையில் பந்தை உருட்டி கோலுக்குள் செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் அசேல மதுஷான் இரண்டு முயற்சிகளை கோல் நோக்கி உதைந்தார். அதில் முதல் முயற்சி வெளியே செல்ல, இரண்டாவது முயற்சியை ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிர் தடுத்தார்.
ஆட்டத்தின் 43ஆவது நிமிடத்தில் பெனால்டி எல்லையினுள் புனித ஜோசப் அணியின் பின்கள வீரரின் கையில் பந்து பட்டமையினால் ஸாஹிரா அணிக்கு பெனால்டிக்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அணித் தலைவர் முர்ஷிட் கோலாக்கினார்.
முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 1 – 1 ஸாஹிரா கல்லூரி
இரண்டாம் பாதி ஆரம்பத்தில் ஸாஹிரா வீரர்கள் சிறந்த பந்துப் பரிமாற்றத்துடன் வேகமாக ஆட ஆரம்பித்தனர்.
அதன் பயனாக ஆட்டத்தில் 50ஆவது நிமிடத்தில் எதிரணியின் கோல் எல்லையின் இடதுபுறம்வரை பந்தை எடுத்துச் சென்ற ஹம்மாட் பந்தை உள்ளனுப்பினார். அனைத்து வீரர்களையும் தாண்டி தனியே இருந்த தன்னிடம் வந்த பந்தை நஸ்ருடீன் வேகமாக கம்பங்களுக்குள் செலுத்தி அணியை முன்னிலைப்படுத்தினார்.
இப்போட்டியின் வீடியோ
மீண்டும் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் மத்திய களத்தில் இருந்து தமது தரப்பினரால் மிக நீண்ட தூர உதை மூலம் உள்ளனுப்பப்பட்ட பந்தைப் பெற்ற அணித் தலைவர் ஜேசன் பெர்னாண்டோ, அதனை வேகமாக கோல் நோக்கி உதைந்தார். பந்து ஸாஹிரா கோல் காப்பாளர் ஸாகிரின் கைகளில் பட்டு கோலின் மேல் கம்பத்தில் பட்டு கோலுக்குள் சென்றது.
ஆட்டத்தின் 73ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் பந்தைப் பெற்ற பிங்கோ, அதனை எடுத்து முன்னே நகர்ந்து மீண்டும் அசேலவுக்கு வழங்கினார். கோல் நோக்கி முன்னேறி வந்த அசேலவைத் தடுக்க ஸாகிர் முன்னே வர, அதையும் தாண்டிச் சென்ற அசேல மற்றொரு வீரருக்கு பந்தை பரிமாற்றம் செய்தார். எனினும் அங்கிருந்த ஸாஹிரா பின்கள வீரர்கள் அதனை அங்கிருந்து வெளியேற்றினர்.
மீண்டும் 79ஆவது நிமிடத்தில் புனித ஜோசப் வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கின் போது உள்ளனுப்பப்பட்ட பந்து மற்றொரு வீரரின் தலையில் பட்டு சன்தேஷ் குரேயிடம் வந்தது. அவர் தனது கட்டுப்பாட்டுக்குள் பந்தைக் கொண்டுவந்து, தடுக்க வந்த வீரரின் தடையையும் தாண்டி பந்தை கோலுக்குள் செலுத்த, ஜோசப் அணி மீண்டும் முன்னிலை பெற்றது.
அதன் பின்னர் ஆட்டத்தின் மேலதிக நிமிடத்தில் எதிரணியின் கோணர் எல்லைக்கும் கோலுக்கும் இடையில் வைத்து ஸாஹிரா அணி பெற்ற ப்ரீ கிக்கின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை புனித ஜோசப் கோல் காப்பாளர் பிடிக்கும்பொழுது அது கைதவறி கீழே விழுந்தது. இதனை ஸாஹிரா அணித் தலைவர் கோலாக்கினார்.
எனவே, விறுவிறுப்பாக இடம்பெற்ற இப்போட்டியின் இறுதி நேரத்தில் பெறப்பட்ட கோல்களினால் போட்டி சமநிலையில் நிறைவுற்றது.
முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 3 – 3 ஸாஹிரா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித ஜோசப் கல்லூரி – ஜேசன் பெர்னாண்டோ 34’ & 61’, சன்தேஷ் குரே 79’
ஸாஹிரா கல்லூரி – மொஹமட் முர்ஷிட் 43’ & 80+3’, நஸ்ருடீன் 50’
பின்னர் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்காக இடம்பெற்ற பெனால்டி உதையின்போது 5 – 4 என்ற கோல்கள் கணக்கில் புனித ஜோசப் கல்லூரி வெற்றி பெற்று முதல் அணியாக இம்முறை தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது
புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் எதிர் புனித பேதுரு கல்லூரி, கொழும்பு
இந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தின் இரண்டாவது நிமிடத்திலேயே எதிரணியின் கோல் பரப்பில் இருந்து பந்தைப் பெற்ற புனித பேதுரு கல்லூரியின் டெனியல் மெக்ராத் கம்பங்களுக்கு மிகவும் அண்மையில் இருந்து பந்தை கோல் நோக்கி உதைந்தார். எனினும் எதிரணி வீரரின் உடம்பில் பட்டு அது அங்கிருந்து வெளியேறியது.
அதன் பின்னர் இரு அணி வீரர்களும் சம அளவிலான ஆதிக்கத்துடன் ஆடினர்.
ஆட்டத்தின் 26 நிமிடங்கள் கடந்த நிலையில் கொழும்பு தரப்பினருக்கு எதிரணியின் பெனால்டி எல்லைக்கு சற்று வெளியில் வைத்து கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை ஷெஹான் லியனபத்திரன பெற்றார். அவர் உதைந்த பந்து கோல் கம்பங்களை விட உயர்ந்து செல்ல மிக நீண்ட நேரத்தின் பின்னர் கிடைத்த வாய்ப்பு வீணாகியது.
அரையிறுதி மோதலில் புனித பத்திரிசியார், புனித பேதுரு கல்லூரிகள்
யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும்…
34ஆவது நிமிடத்தில், மைதானத்தின் மத்தியில் இருந்து பந்தைப் பெற்ற ஹைன்ஸ் அதனை எடுத்துச் சென்று கோலை அண்மித்த நிலையில் பந்தை கிறிஸ்டீபனுக்கு வழங்கினார். இதன்போது கிறிஸ்டீபன் கோல் நோக்கி உதைந்த பந்து கம்பங்களை விட்டு வெளியே சென்றது.
அதன் பின்னர் புனித பத்திரிசியார் வீரர்களுக்கு கிடைத்த அடுத்தடுத்த ப்ரீ கிக் வாய்ப்புக்களை அவ்வணியின் ஹைன்ஸ் பெற்றார். அதில், கோலுக்கு மிகவும் தொலைவில் இருந்து பெற்ற முதலாவது உதையின்போது பந்து இடதுபுற கோல் கம்பத்தை அண்மித்த வகையில் வெளியேறியது. இரண்டாவது உதையை அவர் உயர்த்தி கோல் காப்பாளரின் கைகளுக்கே உதைந்தார்.
இவ்வாறு கிடைத்த வாய்ப்புக்கள் வீணடிக்கப்பட முதல் பாதி கோல்கள் ஏதுமின்றி நிறைவுற்றது.
முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 0 – 0 புனித பேதுரு கல்லூரி
போட்டியின் 45 நிமிடங்கள் கடந்த நிலையில் புனித பேதுரு கல்லூரியின் கோல் எல்லைக்கு உள்ளனுப்பப்பட்ட பந்தை நோக்கி, இரு அணி வீரர்கள் வேகமாய் வந்துகொண்டிருந்த நிலையில் பேதுரு கல்லூரி கோல் காப்பாளர் வேகமாக முன்னே வந்து பந்தை அங்கிருந்து தட்டி விட்டார்.
அதன் பின்னர் சில நிமிடங்கள் யாழ் தரப்பினர் தமக்கான சில வாய்ப்புக்களை உருவாக்குவதற்கான சிறந்த முயற்சிகளை மேற்கொண்டனர். எனினும் அவற்றுக்கு எதிர் தரப்பின் மத்தியகள வீரர்கள் இடம் கொடுக்கவில்லை.
எனினும், 60ஆவது நிமிடத்தில் மைதானத்தின் மத்திய கோட்டில் வைத்து புனித பத்திரிசியார் கல்லூரி வீரர்களுக்கு ப்ரீ கிக் ஒன்றுக்கான வாய்ப்பு கிடைத்தது. இதன்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அணித் தலைவர் அபீஷன் பெற்று, அதே வேகத்தில் கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதலாவது கோலைப் பதிவு செய்தார்.
இப்போட்டியின் வீடியோ
மேலும் 5 நிமிடங்கள் கடந்த நிலையில் பத்திரிசியார் அணியின் கோலுக்கு நேர் எதிரே கிடைத்த ப்ரீ கிக்கை பேதுரு கல்லூரியின் முன்னணி வீரர் சபீர் பெற்றார். அவர் கோல் நோக்கி வேகமாக அடித்த பந்தை கோல் காப்பாளர் கிஜுமன் சிறந்த முறையில் தடுத்தார்.
தொடர்ந்த சில நிமிடங்களில் கோல் கிக்கிற்காக வெளியே சென்ற பந்தை எடுப்பதில் தாமதப்படுத்தியமைக்காக பத்திரிசியார் வீரர் ப்ரீசனுக்கு நடுவரால் மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. அது இப்போட்டியில் ப்ரீசன் பெறும் இரண்டாவது மஞ்சள் அட்டை என்பதால் அவர் சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டு மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இரண்டாவது பாதியில் புனித பேதுரு கல்லூரிக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பாக மத்திய களத்தில் பந்தைப் பெற்ற ஷெஹான் லியனபத்திரன பந்தை வேகமாக எதிரணியின் கோல் திசைக்கு உதைந்தார். மிக வேகமாக சென்ற சபீர் பந்தைப் பெற்று, போன வேகத்திலேயே கோல் நோக்கி உதைந்தார். கோல் காப்பாளர் முன்னே வர எதிர் திசைநோக்கி அவர் உதைந்த பந்து வலதுபுற கோல் கம்பத் திசையால் வெளியே சென்றது.
அதன் பின்னரும் தொடர்ச்சியாக பல வாய்ப்புக்களை கொழும்பு தரப்பினர் மேற்கொண்டபோதும், யாழ் வீரர்களுக்கு எதிராக சிறந்த முடிவைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போனது.
இவ்வாறான நிலையில் ஆட்டம் நிறைவடைய, அபீஷனின் கோலுடன் போட்டியை வென்ற யாழ் வீரர்கள், தாம் பிரிவு ஒன்றுக்கு தரமுயர்த்தப்பட்ட முதல் வருடத்திலேயே இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 1 – 0 புனித பேதுரு கல்லூரி
கோல் பெற்றவர்கள்
புனித பத்திரிசியார் கல்லூரி – அபீஷன் 60’