அரையிறுதிக்கு தகுதிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி

473

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடாத்தப்படும் 13 வயதிற்கு உட்பட்ட பிரிவு இரண்டு (டிவிஷன்-2) அணிகளுக்கு இடையிலான 2017/18 பருவகாலத்திற்கான போட்டித்தொடர் தற்போது இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது.

கடந்தவாரம் இடம்பெற்ற காலிறுதிக்கு முந்தைய போட்டியில் கண்டி திருத்துவக் கல்லூரி (B) அணியை முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்றிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணி, காலிறுதிப்போட்டியில் கொழும்பு றோயல் கல்லூரி (B) அணியை எதிர்த்து  போட்டியிட்டது. போட்டியானது முடிவுகளேதுமின்றி நிறைவிற்கு வர சென். ஜோன்ஸ் கல்லூரி உதிரிப் புள்ளிகள் அடிப்படையில் (Bonus Points) அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

அநுராதபுர மாவட்ட கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் (16) இடம்பெற்ற இப்போட்டியானது ஒரு நாளில் நான்கு இன்னிங்சுகளைக் (One Day 4 Innings) கொண்டதாக அமைந்திருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற றோயல் கல்லூரி அணித்தலைவர் ஹீசன் பெரேரா முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.

பங்களாதேஷுடனான மோதலுக்கு அஞ்செலோ மெதிவ்ஸ் சந்தேகம்

ஆரம்பத்திலேயே மிகவும் நிதானமாக ஆடிய அசேந்த்ர, ஹீசன் பெரேரா ஜோடி 14.4. ஓவர்கள் வீசப்பட்டிருந்த நிலையில் 47 ஓட்டங்களை சேகரித்திருந்தவேளை  அசேந்த்ர (12) ரன் அவுட் முறை மூலம் தனது விக்கெட்டினைப் பறிகொடுக்க, அடுத்த பந்திலேயே அணித்தலைவர் ஹீசன் பேரேரா பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து  ஓமல் திஸ்ஸாநாயக்க ரன் அவுட் மூலமாகவும், சசிந்து பெரேரா LBW முறை மூலமாகவும் ஆட்டமிழக்க றோயல் கல்லூரி 4 விக்கெட்டுக்களை இழந்து 72 ஓட்டங்களை பெற்றிருந்தது. 30 ஓட்டங்களை 5ஆவது விக்கெட்டிற்காக பகிர்ந்திருந்தவேளையில் ஓமல் திஸ்ஸாநாயக்க (24) ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த வீரர்களும் ஓரளவு பங்களிக்க, 6ஆவது இலக்கத்தில் களம் நுழைந்து 90 பந்துகளில் 44 ஓட்டங்களைச் சேகரித்திருந்த நீதுள் தென்னக்கோன் சுழல் பந்து விச்சாளர் யுகேந்திரனால் போல்ட் (Bowled) செய்யப்பட  52.1 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 163 ஓட்டங்களை பெற்றிருந்தவேளையில், றோயல் கல்லூரி தமது ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

வடக்கு வீரர்களின் பந்துவீச்சுத் துறையில் யுகேந்திரன் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

பின்னர் தமது முதலாவது இன்னிங்சிற்காக களமிறங்கிய சென். ஜோன்ஸ் கல்லூரி, சபேசன்(13), சச்சின் கணபதி ஆகியோரது விக்கெட்டுக்களை ஆரம்பத்திலேயே இழந்திருந்தது. 36 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்தவேளையில் தமது மூன்றாவது விக்கெட்டையும் 58 ஓட்டங்களுக்கு இழந்தது. எபனேசர், அன்ரன் அபிஷேக் ஆகியோரால் 5ஆவது விக்கெட்டிற்காக 76 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட, 31 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்து எபனேசர் ஆட்டமிழந்தார். நிதானமாக ஆடிய அன்ரன் அபிஷேக் அரைச்சதம் (87) கடந்திருந்தவேளையில் ஓமல் திஸ்ஸாநாயக்கவின் பந்துவீச்சில் ஸ்டம்ப் முறையில் ஆட்டமிழந்தார்.  

வடக்கு வீரர்கள் 54 ஓவர்களை எதிர்கொண்டு 6 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில், ஆட்ட நேரம் நிறைவிற்கு வர போட்டியானது முடிவேதுமின்றி நிறைவிற்கு வந்தது. புள்ளிகள் அடிப்படையில் வெற்றிபெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரியானது அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளது.

சென். ஜோன்ஸ் கல்லூரி அரையிறுதிப் போட்டியில் கொழும்பு மஹாநாம கல்லூரி (B) அணியை எதிர்கொள்ளவுள்ளது.

முதல்தரமான கிரிக்கெட் விளையாடினால் வெற்றி பெறலாம் – மெதிவ்ஸ்

சென். ஜோன்ஸ் கல்லூரியின் 13 வயதிற்கு உட்பட்ட அணியானது 2012/13 பருவகாலத்தில் பிரிவு 2 இல் இருந்து, பிரிவு 3 இற்கு தரவுயர்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த பருவகாலத்தில் இரண்டாவது இடத்தினை பெற்றிருந்த சென். ஜோன்ஸ் கல்லூரி அணியானது தற்போது சிரேஷ்ட அணியில் அங்கம் வகிக்கிறது. குறித்த அணிக்கு தற்போதைய சிரேஷ்ட அணித்தலைவர் வசந்தன் யதுசன் தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வயதுப் பிரிவில் ஒரேயொரு அணியாக பிரிவு 2 இல் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

றோயல் கல்லூரி B, கொழும்பு (முதலாவது இன்னிங்ஸ்) – 164/8d (52.1) – நீதுள் தென்னக்கோன் 44, கீவன் பனப்பிட்டிய 24, ஹீசன் பெரேரா 23, N யுகேந்திரன் 3/12

சென். ஜோன்ஸ் கல்லூரி, யாழ்ப்பாணம் (முதலாவது இன்னிங்ஸ்) – 162/6 (54) – அன்ரன் அபிஷேக் 87, எபனேசர் ஜசியல் 31, ஓமல் திஸ்ஸாநாயக்க 2/25

முடிவு – புள்ளிகள் அடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி