பிரித்தானியா தமிழ் கிரிக்கெட் லீக் அனுசரணையில் யாழ் மாவட்ட பாடசாலைகள் கிரிக்கெட் சங்கம் 13 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையே நடத்திய ‘ஒரு நாள் நான்கு இன்னிங்சுகள்’ கொண்ட போட்டித் தொடரின் இறுதிப் போட்டி இன்று புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இப்போட்டித் தொடரில் யாழ் மாவட்ட பாடசாலை கிரிக்கெட் அணிகள் பங்கெடுத்திருந்தன.
தொடரின் அரையிறுதி மோதலிற்கு சென். ஜோன்ஸ் கல்லூரியின் A, சென். ஜோன்ஸ் கல்லூரி B, புனித பத்திரிசியார் கல்லூரி மற்றும் யாழ் இந்துக் கல்லூரி ஆகிய அணிகள் தகுதி பெற்றிருந்தன. மழையால் கழுவப்பட்டிருந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் உதிரிப்புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி A அணியும், சென். ஜோன்ஸ் கல்லூரி B அணியை இன்னிங்சால் வீழ்த்திய யாழ் இந்துக் கல்லூரியும் இன்று இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டன.
நிம்ன பெர்னாண்டோவின் சிறப்பாட்டத்தால் மெசனொட் கல்லூரிக்கு முதல் இன்னிங்ஸ் வெற்றி
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்துக் கல்லூரி அணித் தலைவர் ஜோகீசன் முதலில் களத்தடுப்பைத் தேர்வுசெய்தார். முன் வரிசைத் துடுப்பாட்ட வீரர்கள் நிதானமான ஆரம்பத்தினை வழங்கியபோதும், 13 ஓவர்கள் நிறைவில் சென். ஜோன்ஸ் கல்லூரி 44 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 5 ஆவது விக்கெட்டிற்காக அன்ரன் அபிஷேக்குடன் இணைந்து 93 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்திருந்த வேளையில் 23 ஓட்டங்களை பெற்று கிந்துசன் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அரைச் சதம் கடந்திருந்ந்த அபிஷேக்குடன் இணைந்த எபனேசர் 56 பந்துகளில் அரைச் சதம் கடந்திருந்த வேளையில் ஆட்டமிழந்திருந்தார். தொடர்ந்தும் அதிரடி காட்டிய அணித் தலைவர் அன்ரன் அபிஷேக் 15 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உள்ளடங்கலாக 100 பந்துகளில் 149 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.
52 ஓவர்களை எதிர்கொண்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 7 விக்கெட்டுகளை இழந்து 292 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. யாழ் இந்துக் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் பிரியந்தன் மற்றும் கபிவர்மன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தனர்.
பின்னர் தமது முதலாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய யாழ் இந்துக் கல்லூரி அணி அன்ரன் அபிஷேக், விதுசன் மற்றும் அஷ்நாத் ஆகியோரது பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் ஆரம்பம் முதலே தடுமாறியது. ஒன்பதாம் இலக்கத்தில் களம் நுழைந்திருந்த சந்தூஷ் மட்டுமே இரட்டை இலக்க ஓட்ட எண்ணிக்கையைப் பெற்றிருந்தார். இறுதியில் யாழ் இந்துக் கல்லூரி 22.5 ஓவர்களில் 58 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
234 ஓட்டங்கள் பின்னிலையில் பலோவ் ஒன் (follow on) முறையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக களமிறங்கிய யாழ். இந்துக் கல்லூரியின் விக்கெட்டுக்கள் விரைவாக சரிக்கப்பட்டபோதும் ஜோகீசன் (13) மற்றும் கபிவர்மன் (20) ஆகியோர் ஓரளவு நிதானமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டினர். 18 ஓவர்கள் நிறைவில் இந்துக் கல்லூரி 57 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த வேளையில் ஆட்ட நேரம் நிறைவிற்கு வந்தது.
கடைசி வார பிரீமியர் லீக் போட்டிகளில் துறைமுக அதிகாரசபை, NCC வெற்றி
புள்ளிகள் அடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி சம்பியன் பட்டத்தை தமதாக்கியது. அதேவேளை, சென். ஜோன்ஸ் கல்லூரி அணித் தலைவர் அன்ரன் அபிஷேக் இன்றைய போட்டியில் பெற்றுக் கொண்ட சதம் (149) இந்த பருவகாலத்தில் அவர் பெற்றுக் கெண்ட இரண்டாவது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பருவகாலத்தில் இரண்டு சதங்கள், 10 அரைச் சதங்கள் உள்ளடங்கலாக இவர் 1000 ஓட்டங்களைக் கடந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.
போட்டியின் சுருக்கம்
சென். ஜோன்ஸ் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 292/7 (51) – அன்ரன் அபிஷேக் 149, எபனேசர் ஜசியல் 51, கிந்துசன் 23, சபேசன் 21, பிரியந்தன் 3/57, கபிவர்மன் 3/67
யாழ் இந்துக் கல்லூரி (முதலாவது இன்னிங்ஸ்) – 58 (22.5) – சந்தூஷ் 14, அன்ரன் அபிஷேக் 4/2 , அஷாந்த் 3/9, எபனேசர் ஜசியால் 3/13
யாழ் இந்துக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 57/5 (13) – கபிவர்மன் 20, ஜோகீசன் 13, அஷாந்த் 2/12, அன்ரன் அபிஷேக் 2/17
முடிவு – முதல் இன்னிங்ஸ் புள்ளிகள் அடிப்படையில் சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி
இறுதிப் போட்டி விருதுகள்
- ஆட்ட நாயகன் – அன்ரன் அபிஷேக் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
- எதிரணியின் சிறந்த வீரர் – கபிவர்மன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)
- சிறந்த துடுப்பாட்ட வீரர் – அன்ரன் அபிஷேக் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
- இரண்டாம் இடம் – எபனேசர் ஜசியால் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
- சிறந்த பந்துவீச்சாளர் – அன்ரன் அபிஷேக் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
- இரண்டாம் இடம் – அஷாந்த் (சென். ஜோன்ஸ் கல்லூரி)
- சிறந்த களத்தடுப்பாளர் – டதுசன் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)
- இரண்டாம் இடம் – அஷாந்த் (யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி)