19 வயதிற்கு உட்பட்ட பாடசாலை அணிகளுக்கு இடையிலான “சிங்கர்” கிரிக்கெட் தொடரில் இன்று நிறைவடைந்த போட்டிகளில், லும்பினி கல்லூரியை தோற்கடித்து புனித பெனடிக்ட் கல்லூரி அணி இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களினால் இலகு வெற்றியைப் பெற்றுக்கொண்டது.
இன்று நிறைவுற்ற ஏனைய போட்டிகளில் ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி அணி மற்றும் டி மெசனோட் கல்லூரி எதிர் புனித பேதுரு கல்லூரி, றோயல் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி இடையிலான போட்டிகள் சமநிலையில் முடிவடைந்தமையினால் ஸாஹிரா கல்லூரி அணி, டி மெசனோட் கல்லூரி மற்றும் றோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியினைப் பெற்றுக்கொண்டன.
லும்பினி கல்லூரி எதிர் புனித பெனடிக்ட் கல்லூரி
நேற்று ஆரம்பித்த குழு B இன் முதல் சுற்றுக்கான இந்த போட்டியில் தங்களது முதலாவது இன்னிங்ஸை ஏற்கனவே 94 ஓட்டங்களைப் பெற்று லும்பினி கல்லூரி முடித்துக் கொண்டது. இதனைத் தொடர்ந்து தமது முதலாவது இன்னிங்ஸிற்காகத் துடுப்பெடுத்தாடிய புனித பெனடிக்ட் கல்லூரி அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவின் போது 53 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று பலமான நிலையில் இருந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தமது முதலாவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த புனித பெனடிக்ட் கல்லூரி அணியினர் 79.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது முதலாவது இன்னிங்ஸை முடித்துக்கொள்வதாக அறிவித்தனர். துடுப்பாட்டத்தில் புனித பெனடிக்ட் கல்லூரி அணி சார்பாக மகேஷ் தீக்ஷன 61 ஓட்டங்களையும், திணித்த பஸ்நாயக்க 53 ஓட்டங்களையும், நேற்று உபாதைக்குள்ளான துலந்த லூயிஸ் 51 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்து வீச்சில் லும்பினி கல்லூரி சார்பாக கனிஷ்க மதுவந்த 69 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து, புனித பெனடிக்ட் கல்லூரியை விட 154 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இருந்த லும்பினி கல்லூரி தங்களது இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 36.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மாத்திரமே லும்பினி கல்லூரி பெற்றதன் காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 58 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது. துடுப்பாட்டத்தில் லும்பினி கல்லூரி சார்பாக அதிகபட்சமாக தனுக தாபரே 22 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட புனித பெனடிக்ட் கல்லூரியின் கவிஷ ஜயதிலக்க 24 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
முதல் இன்னிங்ஸ்
லும்பினி கல்லூரி : 94/10(39.4) – கனிஷ்க மதுவந்த 27, ரேஷான் கவிஷ்க 7/60, மகேஷ் தீக்ஷன 2/5
புனித பெனடிக்ட் கல்லூரி : 248/8d 79.5 – துலந்த லூயிஸ் 51, தினித்த பஸ்நாயக்க 53, மகேஷ் தீக்ஷன 61, கனிஷ்க மதுவந்த 5/69
இரண்டாவது இன்னிங்ஸ்
லும்பினி கல்லூரி : 96/10(36.5) – தனுக்க தாபரே 22, கவிஷ ஜயத்திலக்க 5/24
போட்டி முடிவு – புனித பெனடிக்ட் கல்லூரி ஒரு இன்னிங்கஸ் மற்றும் 58 ஓட்டங்களால் வெற்றி
புனித பேதுரு கல்லூரி எதிர் டி மெசனோட் கல்லூரி
நேற்று ஆரம்பித்த இந்தப் போட்டியில், புனித பேதுரு கல்லூரி 143 ஓட்டங்களைப் பெற்று தங்களது முதல் இன்னிங்ஸை நிறைவு செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய டி மெசனோட் கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது நேற்றைய நாள் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்திருந்தது.
இதனைத் தொடர்ந்து, இன்று தங்களது முதலாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த டி மெசனோட் கல்லூரி அணியினர், 67 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றனர். துடுப்பாட்டத்தில் டி மெசனோட் கல்லூரி சார்பாக அதிகபட்சமாக சங்கித் தேசன் 41 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் புனித பேதுரு கல்லூரி சார்பாக முஹம்மட் அமீன் 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 21 ஓட்டங்கள் பின்னடைந்த நிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்சிஸை ஆரம்பித்த புனித பேதுரு கல்லூரி அணியினர், 58.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. துடுப்பாட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட மனேகர் டி சில்வா சததத்தைக் கடந்து 169 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில், டி மெசனோட் கல்லாரி சார்பாக மிதில கீத் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
முதல் இன்னிங்ஸ்
புனித பேதுரு கல்லூரி : 143(54) – சந்துஷ் குணத்திலக்க 65*, அஷன் பெர்னாந்து 3/2, சஷன் பெர்னாந்து 2/13
டி மெசனோட் கல்லூரி : 164/10(67) – சங்கித் தேஷன் 41, முஹம்மட் அமீன் 4/35
இரண்டாவது இன்னிங்ஸ்
புனித பேதுரு கல்லூரி : 275/8(58.4) – மனேகர் டி சில்வா 169, மிதில கீத் 2/22
போட்டி முடிவு: போட்டி சமநிலையில் நிறைவடைந்தது. டி மெசனோட் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி
ஸாஹிரா கல்லூரி எதிர் தர்மராஜ கல்லூரி
நேற்று ஆரம்பித்த இந்தப் போட்டியில் தங்களது முதல் இன்னிங்ஸிற்காக ஸாஹிரா கல்லூரி 204 ஓட்டங்களைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது முதலாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த தர்மராஜ கல்லூரி அணியினர் 4 விக்கெட்டுகளை இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் நேற்றைய நாள் போட்டியின் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.
இதனை தொடர்ந்து இன்று தங்களது முதலாவது இன்னிங்ஸைத் தொடங்கிய தர்மராஜ கல்லூரி அணியினர், 52.5 ஓவர்கள் முடிவில் சகலவிக்கெட்டுகளையும் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று முதல் இன்னிங்ஸினை முடித்துக்கொண்டனர். துடுப்பாட்டத்தில் தர்மராஜ கல்லூரி சார்பாக அதிகபட்சமாக நிவேந்த ஹேரத் 57 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் சிறப்பாக செயற்பட்ட ஸாஹிரா அணியின் சஜித் சமீர 71 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளையும், ருவான் நஸீர் 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து 5 ஓட்டங்கள் முன்னிலையில் தங்களது இரண்டாவது இன்னிங்ஸினை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி அணியினர் 70 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 275 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டம் நேரம் முடிவடைந்ததாக நடுவர்களால் அறிவிக்கப்பட்டது. இதனால் இப்போட்டி சமநிலையில் நிறைவுற்றது. துடுப்பாட்டத்தில் அதி சிறப்பாக செயற்பட்ட ஸாஹிரா கல்லூரி அணியின் மொஹமட் நஜாத் சதத்தைக் கடந்து 120 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றதோடு இவரோடு சேர்த்து மொஹமட் தில்ஹான், சஜீத் சமீர ஆகியோர் அரைச்சதத்தைக் கடந்தனர். பந்து வீச்சில் தர்மராஜ கல்லூரி அணி சார்பாக ருக்மல் திசநாயக்க 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சுருக்கம்
முதல் இன்னிங்ஸ்
ஸாஹிரா கல்லூரி : 204/10(55.3) – சஜித் சமீர 78, முஹம்மட் சமாஷ் 65, ருக்மல் திஷநாயக்க 4/69
தர்மராஜ கல்லூரி : 199/10(52.5) – நிவேந்த ஹேரத் 57, தேஷான் குணசிங்க 34, சஜீத் சமீர 5/71, ருவான் நஸீர் 3/46
இரண்டாவது இன்னிங்ஸ்
ஸாஹிரா கல்லூரி : 275/9(70) – முஹம்மட் நஜாத் 120*, முஹம்மட் தில்ஹான் 68, சஜீத் சமீர 53, ருக்மல் திஷநாயக்க 5/83
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவுற்றது, ஸாஹிரா கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் வெற்றிபெற்றது
றோயல் கல்லூரி எதிர் புனித செபஸ்டியன் கல்லூரி
நேற்று ஆரம்பித்த முதல் சுற்றுக்கான இந்தப் போட்டியில், நேற்றைய ஆட்டத்தின் போது 227 ஓட்டங்களைப் பெற்று றோயல் கல்லூரி அணியானது தங்களது முதலாவது இன்னிங்ஸினை நிறைவு செய்திருந்தது. இதனைத் தொடர்ந்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய புனித செபஸ்டியன் கல்லூரி 16 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் நேற்றைய போட்டியின் ஆட்ட நேரம் முடிவிற்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து இன்று தங்களது முதலாவது இன்னிங்ஸினைத் தொடர்ந்த புனித செபஸ்டியன் கல்லூரி 48.3 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் செபஸ்டியன் கல்லூரி சார்பாக அஷீர் வர்ணகுலசூரிய 40 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாந்து 25 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் றோயல் கல்லூரி சார்பாக ஹெலித விதானகே 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், ஹிமேஸ் ராமநாயக்க 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸைத் துடுப்பெடுத்தாடிய றோயல் கல்லூரி அணியினர் 71.5 ஓவர்கள் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 264 ஓட்டங்களைப் பெற்ற போது போட்டியின் இன்றைய ஆட்டநேரம் முடிவிற்கு வந்தது. றோயல் கல்லூரி அணி சார்பாக துடுப்பாட்டத்தில் சிறப்பாக ஆடி திவிந்து சேனாரத்ன 94 ஓட்டங்களையும், ஹெலித விதானகே 61 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் புனித செபஸ்டியன் கல்லூரி சார்பாக பிரவின் ஜயவிக்ரம 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், அவிஷ்க பெர்னாந்து 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
போட்டியின் சுருக்கம்
முதல் இன்னிங்ஸ்
றோயல் கல்லூரி : 227/10(62.1) – லகிந்து நாணயக்கார 50, கவிந்து மதரசிங்க 49, பிரவின் ஜயவிக்ரம 4/50, நிமேஷ் பண்டார 4/56
புனித செபஸ்டியன் கல்லூரி : 152/10(48.3) – அஷீர் வர்ணகுலசூரிய 40, அவிஷ்க பெர்னாந்து 25, ஹெலித விதானகே 3/25, ஹிமேஸ் ராமநாயக்க 2/38
இரண்டாவது இன்னிங்ஸ்
றோயல் கல்லூரி : 264/10(71.5) – திவிந்து சேனாரத்ன 94, ஹெலித விதானகே 61, பிரவீன் ஜயவிக்ரம 3/80, அவிஷ்க பெர்னாந்து 2/32
போட்டி முடிவு – போட்டி சமநிலையில் நிறைவடைந்ததது றோயல் கல்லூரி முதல் இன்னிங்ஸில் வெற்றி பெற்றது.