அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் வலைப்பயிற்சிகளில் இணைந்து கொள்ளுமாறு இலங்கை அணியின் இரண்டு இளம் பந்துவீச்சாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ள 14-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 9ஆம் திகதி சென்னையில் ஆரம்பமாகவுள்ளது. அதற்காக தயாராகும் பணியில் ஒவ்வொரு அணியினரும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
>> ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் IPL தொடர்?
கடந்த முறை சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, ப்லே ஓப் சுற்றுக்குக்கூட செல்லாமல் வெளியேறியது. ஆனால் இந்த முறை மீண்டும் சம்பியன் பட்டத்தை வெல்லும் ஆவேசத்துடன் ஐ.பி.எல் தொடரில் களமிறங்க உள்ளதுடன், இந்த வாரம் முதல் சென்னையில் பயிற்சியைத் தொடங்க உள்ளது.
இதில் பங்கேற்கவுள்ள அந்த அணியின் தலைவர் எம்எஸ் தோனி கடந்த வாரம் சென்னையை வந்தடைந்தார். இதன்படி, இந்த வாரம் முதல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் பயிற்சியில் தோனி, அம்பதி ராயுடு உள்ளிட்ட அணி வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதுஇவ்வாறிருக்க, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியுடன் வலைப் பயிற்சிகளில் ஈடுபட இலங்கை அணியின் இளம் பந்துவீச்சாளர்களான மஹீஷ் தீக்ஷன மற்றும் மதீஷ பத்திரன ஆகிய இருவருக்கும் சென்னை அணி நிர்வாகத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இறுதியாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற அபுதாபி T10 லீக் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற நொதர்ன் வொரியர்ஸ் அணியில் இடம்பிடித்த அவர், இறுதிப் போட்டியில் பந்துவீச்சில் அசத்தி ஆட்டநாயகன் விருதினை தட்டிச் சென்றார்.
>> Video – தோல்வியிலும் சாதித்துக் காட்டிய இலங்கை வீரர்கள்..!|Sports RoundUp – Epi 152
மறுபுறத்தில் இறுதியாக நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட இளையோர் உலகக் கிண்ணத்தில் இலங்கைக்காக விளையாடியவரும், லசித் மாலிங்கவின் பந்துவீச்சுப் பாணியைக் கொண்டவருமான 19 வயதுடைய மதீஷ பத்திரன, இறுதியாக நடைபெற்ற அபுதாபி T10 லீக் தொடரில்
பங்ளா டைகர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
இதனிடையே, மஹீஷ் தீக்ஷன தற்போது உள்ளூர் முதல்தர கழகங்களுக்கிடையிலான T20 தொடரில் இராணுவ கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடி வருவதுடன், மதீஷ பத்திரன, கண்டி திருத்துவக் கல்லூரி அணிக்காக 19 வயதுக்குட்பட்ட போட்டித் தொடரில் களமிறங்கவுள்ளார்.
இதனால் குறித்த இரண்டு வீரர்களுக்கும் சென்னை அணியுடனான வலைப்பயிற்சியில் இணைந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
>> தொடரும் துரதிஷ்டங்களால் வாய்ப்புகளை இழக்கும் வருண் சக்கரவர்த்தி?
முன்னதாக இம்முறை ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை சார்பில் 29 வீரர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்திருந்தாலும், இறுதியில் 9 வீரர்களே குறும்பட்டியலில் இடம்பெற்றனர். ஆயினும் எந்தவொரு வீரரும் ஏலத்தில் வாங்கப்படவில்லை.
எதுஎவ்வாறாயினும், ஐ.பி.எல் குறும்பட்டியலில் இடம்பெற்றிருந்த சுழல் பந்துவீச்சாளர் மஹீஷ் தீக்ஷன தற்போது சென்னை அணிக்கு வலைப் பந்துவீச்சாளராக அழைத்துள்ளமை சிறப்பம்சமாகும்.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<