மகளிர் T20 உலகக் கிண்ண கடமையில் 2 இலங்கை பெண் நடுவர்கள்

212

தென்னாப்பிரிக்காவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான நடுவர்கள் குழாத்தில் இலங்கையைச் சேர்ந்த இரண்டு பெண் நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, மிட்;செல் பெரேரா போட்டி மத்தியஸ்தராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஐசிசியின் அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிருக்கான T20 உலகக் கிண்ணத் தொடர் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருவதுடன், இந்த தொடர் நிறைவடைந்தவுடன், ஐசிசியின் 8ஆவது மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடர் தென்னாப்பிரிக்காவில் பெப்ரவரி 10ஆம் திகதி தொடங்குகிறது.

10 அணிகள் பங்குபற்றவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் போட்டியை நடத்தும் வரவேற்பு நாடான தென்னாப்பிரிக்காவும், இலங்கையும் மோதுகின்றன.

இந்த நிலையில், 2023 ஐசிசி மகளிர் T20 உலகக் கிண்ணத் தொடருக்கான நடுவர்கள் குழுவை ஐசிசி அறிவித்துள்ளது.

இதில் புதிய முயற்சியாக முற்றிலும் பெண் நடுவர்களை இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் களமிறக்க ஐசிசி முடிவு செய்துள்ளது. இதன்படி, 3 போட்டி மத்தியஸ்தர்களும் 10 கள நடுவர்கள் என மொத்தம் 13 பேர்கள் கொண்ட பெண் நடுவர்கள் இம்முறை T20 உலகக் கிண்ணத்தில் பணியாற்றவுள்ளனர்.

இதில் சிறப்பம்சம் என்னவெனில் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் பெண்கள் மாத்திரம் மத்தியஸ்தர்களாக செயற்படவிருப்பது இதுவே முதல் தடவையாகும்

அத்துடன், இந்த நடுவர்கள் குழாத்தில் இலங்கையைச் சேர்ந்த இருவர் இடம்பெற்றுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். மிட்செல் பெரேரா போட்டி மத்தியஸ்தராகவும், நிமாலி பெரேரா கள நடுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியில் கள நடுவர்களாக பணியாற்றிய ஜனனி, ரதி முதன் முறையாக உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நடுவர்களாக செயல்பட உள்ளனர்.

நடுவர்கள் விபரம்:

போட்டி மத்தியஸ்தர்கள்: ஜீ.எஸ். லக்ஷ்மி (இந்தியா), ஷண்ட்ரே ஃப்ரிஸ் (தென்னாப்பிரிக்கா), மிட்செல் பெரேரா (இலங்கை).

கள நடுவர்கள்: சூ ரெட்ஃபேர்ன் (இங்கிலாந்து), எலொய்ஸ் ஷெரிடான் (அவுஸ்திரேலியா), க்ளயார் போலோசக் (அவுஸ்திரேலியா), ஜெக்குலின் வில்லியம்ஸ் (மேற்கிந்திய தீவுகள்), கிம் கொட்ன் (நியூசிலாந்து), லோரென் ஏஜென்பேர்க் (தென்னாப்பிரிக்கா), அனா ஹெரிஸ் (இங்கிலாந்து), விரிண்டா ரத்தி (இந்தியா), என். ஜனனி (இந்தியா), நிமாலி பெரேரா (இலங்கை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<