ஜப்னா கிங்ஸ் அணியில் 19 வயது இளம் வீரர் இணைப்பு

Lanka Premier League 2023

446

இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரில் களமிறங்கும் நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணியில் இரண்டு புதிய உள்ளூர் வீரர்கள் இணைக்கப்பட்டுள்ளனர்.

வலது கை துடுப்பாட்ட வீரர் பிரியமால் பெரேரா மற்றும் இளம் வலது கை சுழல் பந்துவீச்சாளர் ரவின் டி சில்வா ஆகியோர் தமது அணியில் இணைந்துள்ளதாக ஜப்னா கிங்ஸ் அணி அறிவித்துள்ளது.

28 வயதான பிரியமால் பெரேரா 2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவிற்கு எதிராக சர்வதேச அறிமுகத்தைப் பெற்று 2 ஒருநாள் போட்டிகளில் இலங்கை தேசிய அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். அத்துடன் 62 முதல்தரப் போட்டிகளில் ஆடியுள்ள அவர், 3705 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தலைவராக செயல்பட்ட 20 வயதான ரவின் டி சில்வா, பந்துவீச்சைப் போல துடுப்பாட்டத்திலும் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றார். தமிழ் யூனியன் கழகத்துக்காக ஆடி வருகின்ற அவர், LPL தொடருக்கு முன் நடைபெற்ற கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் ஜப்னா அணிக்காக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஜப்னா கிங்ஸ் அணியில் இடம்பெறுள்ள பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் சொஹைப் மலிக் இம்முறை LPL தொடரில் ஆரம்பப் போட்டிகள் சிலவற்றில் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அவருக்குப் பதிலாக பங்களாதேஷின் இளம் வீரர் தௌஹித் ஹ்ரிடோய்யை தற்காலிகமாக அணியில் இணைத்துக்கொள்ள அந்த அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருந்தது.

அதேபோல, ஜப்னா கிங்ஸ் அணியில் ஏற்கனவே இடம்பெற்ற ஸமான் கான் தனிப்பட்ட காரணங்களுக்காக விலகியதை அடுத்து அவருக்குப் பதிலாக தென்னாபிரிக்காவின் பந்துவீச்சு சகலதுறை வீரர் நெண்ட்ரே பேர்கரை ஜப்னா அணி ஒப்பந்தம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LPL தொடரின் 4ஆவது அத்தியாயம் நடப்பு சம்பியன் ஜப்னா கிங்ஸ் அணிக்கும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்கும் இடையில் ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நாளை மறுதினம் (30) நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<