இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு 02 மாத கால அவகாசம் வழங்குவது பொருத்தமானது என சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) பிரதிநிதிகள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இலங்கை கால்பந்து விளையாட்டின் எதிர்காலம் தொடர்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்ற சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (FIFA) அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது விளையாட்டுத்துறை அமைச்சருக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன் தேர்தலை நடத்த வேண்டும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்திருந்தது.
FFSL இடைக்கால நிர்வாகம் குறித்த செய்திகள் பொய்யானவை – ஜஸ்வர் உமர்
எவ்வாறாயினும், இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் யாப்பு திருத்தங்களுக்கான திகதிகளும், புதிய நிர்வாகத்தினை தெரிவு செய்வதற்கான திகதிகள் குறித்தும் இலங்கை வருகை தரவுள்ள சர்வதேச கால்பந்து சம்மேளன (FIFA) மற்றும் ஆசிய கால்பந்து சம்மேளன (AFC) அதிகாரிகளுடனான சந்திப்பின் பிறகு அறிவிக்கப்படும் என இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் தெரிவித்தார்.
இந்த நிலையில், இலங்கை வருகை தந்த சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் அதிகாரிகளுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.
இதன்போது புதிய நிர்வாகிக்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்கு 02 மாத கால அவகாசம் வழங்குவது பொருத்தமானது என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் யோசனை தெரிவித்துள்ளனர்.
இது இவ்வாறிருக்க, இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தற்போதைய யாப்பை திருத்துவதற்குத் தேவையான அடித்தளத்தை அமைக்க அனைத்து தரப்பினரும் இதன்போது ஒப்புக்கொண்டடுள்ளனர். இதன்மூலம் புதிய யாப்பில் தெளிவான அதிகாரப் பகிர்வுடன் கூடிய வலுவான நிர்வாகத்தை ஸ்தாபிப்பதற்கான சூழல் ஏற்படும்.
அத்துடன், நிதி மற்றும் நிர்வாக விவகாரங்களுக்கு பொறுப்பாக நிரந்தர அதிகாரி ஒருவரைக் கொண்டிருப்பதன் முக்கியத்துவம் குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது. அதற்காக இலங்கை கால்பந்து சம்மேளனத்துக்கு நிரந்தர செயலாளர் அல்லது தலைமை செயல் அதிகாரி ஒருவரை நியமிப்பதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.
இதனிடையே, கால்பந்து விளையாட்டின் முன்னேற்றத்திற்காக, இலங்கை கால்பந்து சம்மேளனத்தை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கும், வீரர்களுக்குத் தேவையான பயிற்சிகள் மற்றும் வீரர்கள் தேர்வை கையாள்வதற்கும் தலையிடுமாறு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளன பிரதிநிதிகளை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
அதுமாத்திரமின்றி, நாட்டில் பாடசாலை மட்டத்தில் கால்பந்து விளையாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அதிக கவனம் செலுத்துமாறும், அதற்கான பூரண பங்களிப்பினை வழங்குமாறும் விளையாட்டுத்துறை அமைச்சர் முன்வைத்த கோரிக்கைக்கு சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தெற்காசிய பிராந்திய அலுவலக அபிவிருத்தி முகாமையாளர் திரு.பிரின்ஸ் ரூஃபஸ் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த விசேட கலந்துரையாலில் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் கலாநிதி அமல் ஹர்ஷ டி சில்வா, சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனத்தின் எம்.ஏ பிரிவின் நிர்வாகத் தலைவர் ரோல்ஃப் டேனர், ஆசிய பிராந்திய பணிப்பாளர் சஞ்சீவ பாலசிங்கம், தெற்காசியாவிற்கான பிராந்திய அலுவலக அபிவிருத்தி முகாமையாளர் திரு பிரின்ஸ் ரூஃபஸ் மற்றும் இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் மற்றும் தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் அர்ஜுன ரணதுங்க, விளையாட்டுப் பணிப்பாளர் நாயகம் திரு.அமல் எதிரிசூரிய மற்றும் மேன்முறையீட்டு ஆலோசனைக் குழுவின் தலைவர் உட்பட பல அதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<