தம்புள்ள அணியில் இணையும் பாகிஸ்தான் வேகப் புயல்

Lanka Premier League 2023

166

இம்முறை லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் தம்புள்ள அவுரா அணியில் இரண்டு புதிய வெளிநாட்டு வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானின் வேகப் பந்துவீச்சாளர் ஹசன் அலி மற்றும் அவுஸ்திரேலியாவின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் பென் மெக்டேர்மட் ஆகிய இருவரே தம்புள்ள அவுரா அணியில் இணைந்துள்ளனர்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற LPL வீரர்கள் ஏலத்தில் அவுஸ்திரேலியாவின் முன்னணி விக்கெட் காப்பாளரான மெதிவ் வேட் மற்றும் தென்னாபிரிக்காவின் வேகப் பந்துவீச்சாளர் லுங்கி எங்கிடி ஆகிய இருவரும் தம்புள்ள அவுரா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.

எனினும், குறித்த 2 வீரர்களும் தனிப்பட்ட காரணங்களுக்காக இம்முறை LPL தொடரில் இருந்து விலகியுள்ளனர். இதன் காரணமாக ஹசன் அலி மற்றும் பென் மெக்டேர்மட் ஆகிய இருவரையும் மாற்றீடு வீரர்களாக தம்புள்ள அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

இலங்கை அணிக்கெதிராக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடிய பாகிஸ்தான் குழாத்தில் ஹசன் அலி இடம்பிடித்திருந்தார். எனவே தற்போது இலங்கையில் இருப்பதால் பெரும்பாலும் நாளை (29) தம்புள்ள அணியுடன் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுபுறத்தில் ஜிம்பாப்வேயில் தற்போது நடைபெற்று வருகின்ற Zim-Afro T10 லீக் தொடரில் புலவாயோ பிரேவ்ஸ் அணிக்காக பென் மெக்டேர்மட் ஆடி வருவதால், குறித்த தொடர் நிறைவடைந்த பிறகு தம்புள்ள அணியுடன் அவர் இணைந்து கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இம்முறை தம்புள்ள அவுரா அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் செயல்படவுள்ளதுடன், அந்த அணியில் தனன்ஜய டி சில்வா, குசல் பெரேரா, சதீர சமரவிக்ரம உள்ளிட்ட முன்னணி இலங்கை வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, LPL தொடரின் 4ஆவது அத்தியாயம் நாளை மறுதினம் (30) ஆரம்பமாகவுள்ள நிலையில், முதல் போட்டியில் நடப்புச் சம்பியன் ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<