இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடருக்கான வீரர்கள் ஏலம் இம்மாதம் 23ம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது.
குறித்த இந்த வீரர்கள் ஏலத்தில் வீரர்களை பதிவுசெய்வதற்கான இறுதி திகதி நவம்பர் 30ம் திகதியுடன் நிறைவடைந்திருந்தது. அதன்படி மொத்தமாக 991 வீரர்கள் IPL ஏலத்தில் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர்.
>> ராஜஸ்தான் றோயல்ஸ் அணியில் மேலும் இரு இலங்கை வீரர்கள்!
குறித்த இந்த ஏலத்தில் இலங்கை அணியைச் சேர்ந்த 23 வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளனர். இதில் இலங்கை அணியின் அனுபவ சகலதுறை வீரர் அஞ்செலோ மெதிவ்ஸ் தன்னுடைய குறைந்தபட்ச தொகையாக 2 கோடி ரூபாவை நிர்ணயித்துள்ளார.
இம்முறை IPL தொடரில் அதிகூடிய நிர்ணய தொகையாக 2 கோடி அறிவிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த இந்த தொகையை அஞ்செலோ மெதிவ்ஸ் நிர்ணயித்துள்ளார். அதேநேரம் மற்றுமொரு இலங்கை வீரரான குசல் பெரேரா ஒரு கோடியை நிர்ணயத்தொகையாக பதிவுசெய்துள்ளார்.
ஏனைய இலங்கை வீரர்கள் மற்றும் அவர்களின் நிர்ணயத்தொகை தொடர்பில் தகவல்கள் வெளியாகவில்லை என்பதுடன், சர்வதேசத்தில் அதிகூடிய நிர்ணயத்தொகையான 2 கோடியை செம் கரன், பென் ஸ்டோக்ஸ், கிரிஸ் ஜோர்டன், ஆதில் ரஷீட், கெமரூன் கிரீன், கேன் வில்லியம்சன், ஜேசன் ஹோல்டர் மற்றும் நிக்கோலஸ் பூரன் போன்ற முன்னணி வீரர்களும் பதிவுசெய்துள்ளனர்.
IPL தொடரின் ஏலத்தில் 87 வீரர்களுக்கான இடங்கள் மாத்திரமே உள்ளதுடன், இதில் வெளிநாட்டு வீரர்களுக்கான 30 இடங்கள் உள்ளன. இந்தநிலையில் ஏலத்துக்கு 277 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 714 இந்திய வீரர்கள் தங்களுடைய பெயர்களை பதிவுசெய்துள்ளளனர்.
வெளிநாட்டு வீரர்களில் 91 வீரர்கள் இன்னும் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவில்லை என்பதுடன், இந்தியாவைச் சேர்ந்த 604 அறிமுக வீரர்களும் (IPL தொடரில் விளையாடாத வீரர்கள்) இந்த ஏலத்தில் பங்கேற்கவுள்ளனர்.
இதேவேளை ஏலத்துக்கு பதிவுசெய்துள்ள வெளிநாட்டு வீரர்களில் அதிகமாக 57 அவுஸ்திரேலிய வீரர்கள், 52 தென்னாபிரிக்க வீரர்கள், 33 மே.தீவுகள் வீரர்கள் மற்றும் 31 இங்கிலாந்து வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<