இந்திய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் பங்கேற்கும் 12 இலங்கையர்கள்

231

இந்தியாவின் சென்னையில் ஜூன் 10 முதல் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள 61ஆவது இந்திய மாநில மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரில் இலங்கையைச் சேர்ந்த 12 பேர் கொண்ட அணியொன்று பங்கேற்கவுள்ளது.

இப்போட்டித் தொடரில் இலங்கை சார்பில் இரண்டு அஞ்சலோட்ட அணிகளையும், தனிநபர் போட்டி நிகழ்ச்சிகளுக்காக 2 வீரர்களையும் பங்குபற்றச் செய்ய இலங்கை மெய்வல்லுனர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்ட அணியும், பெண்களுக்கான 4×100 மீற்றர் அஞ்சலோட்ட அணியும் களமிறங்கவுள்ளதுடன், ஆண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் ரொஷான் தம்மிக்க மற்றும் ஆண்களுக்கான முப்பாய்ச்சலில் சமல் குமாரசிறி ஆகியோர் தனிநபர் நிகழ்ச்சிகளிலும் போட்டியிடவுள்ளனர்.

இதனிடையே, ஆண்களுக்கான 4×400 மீட்டர் அஞ்சலோட்ட அணியில் அருண தர்ஷன, இசுரு லக்ஷான், பாபசர நிகு, தினுக தேஷான் மற்றும் ஆர்.எம் ராஜகருணா ஆகியயோர் இடம்பெற்றுள்ள அதேவேளை, பெண்களுக்கான 4×100 மீட்டர் அஞ்சலோட்ட அணியில் அமாஷா டி சில்வா, ருமேஷிகா ரத்நாயக்க, ஷெலிண்டா ஜென்சன், மேதானி ஜயமான்ன மற்றும் லக்ஷிகா சுகந்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணி இம்மாதம் 9ஆம் திகதி இந்தியாவுக்குப் புறப்படவுள்ளதுடன், இலங்கை விளையாட்டு வீரர்களுக்கு தமது திறமைகளை வளர்த்துக் கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<