பிஃபா உலகக் கிண்ண தகுதிகாண் மோதலில் இலங்கைக்கு எதிரான முதல் கட்ட மோதலில் (First Leg) துரக்மெனிஸ்தான் அணியின் முக்கிய வீரர்கள் இருவர் விளையாட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஆசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான தகுதிகாண் சுற்று போட்டிகளின் இரண்டாம் கட்டத்தை (Second Stage) இலங்கை கால்பந்து அணி எதிர்வரும் 5ஆம் திகதி துர்க்மெனிஸ்தானுக்கு எதிராக போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.
முக்கியமான போட்டிக்கு முன் இலங்கை கால்பந்து அணியின் மூவருக்கு காயம்
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெற உள்ள…..
இந்தப் போட்டி கொழும்பு குதிரைப்பந்தயத்திடல் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில் துர்க்மெனிஸ்தான் கால்பந்து அணியின் மத்தியகள வீரர்களான ருஸ்லான் மின்கசோவ் மற்றும் அட்யவேவ் ஆகியோர் இலங்கைக்கு எதிராக நடைபெறவுள்ள மோதலில் பங்கெடுக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துர்க்மெனிஸ்தான் கால்பந்து அணிக்கு இவ்வாறாக பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்டிருக்கும் செய்தியினை துர்க்மெனிஸ்தான் நாட்டினை மையமாக கொண்டு செயற்படும் இணையதளம் ஒன்று உறுதி செய்துள்ளது.
இந்த வீரர்களில் மின்காசோவ் தசை உபாதை ஒன்றை எதிர்கொண்டதனாலேயே இலங்கை அணியுடனான மோதலில் விளையாடும் வாய்ப்பினை இழந்திருக்கின்றார். மின்காசோவிற்கு இந்த தசை உபாதை காரணமாக அடுத்த ஒரு மாதத்திற்கு கால்பந்து போட்டிகள் எதிலும் விளையாட முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதேநேரம், மின்காசோவிற்கு பதிலாக அமீர் குர்பானியினை துர்க்மெனிஸ்தான் கால்பந்து அணி பிரதியீடு செய்திருக்கின்றது.
மறுமுனையில் அஹ்மட் அட்யாயேவ், தசைநார் பிரச்சினை ஒன்றினை எதிர்கொண்டிருகின்றார். இந்த தசைநார் பிரச்சினைக்காக அவர் சத்திர சிகிச்சைக்கு முகம்கொடுக்க இருப்பதன் காரணமாகவே இலங்கை அணியுடனான மோதலில் பங்கெடுக்காமல் போயிருக்கின்றார். குறித்த சத்திர சிகிச்சை நிறைவுக்கு பின்னர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு அஹ்மட் அட்யாயேவினால் கால்பந்து போட்டிகள் எதிலும் பங்கெடுக்க முடியாமல் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வீரர்களின் உபாதை ஒருபுறமிருக்க ஐக்கிய அரபு இராச்சியத்தில் இலங்கை கால்பந்து அணியுடனான மோதலுக்காக ஐந்து நாட்கள் கொண்ட பயிற்சிமுகாம் ஒன்றில் பங்கெடுத்துள்ள துர்க்மெனிஸ்தான் கால்பந்து அணி இன்று (3) இலங்கை வருகின்றது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<