சீரற்ற காலநிலையினால் மலையக நீல பெரும் சமர் சமநிலையில் நிறைவு

318
TCK vs SACK

இரண்டு தினங்களிலும் பிற்பகல் நேரத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறைந்தளவு ஓவர்களே வீசப்பட்ட நிலையில், புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் திரித்துவக் கல்லூரி அணிகளுக்கிடையிலான 100ஆவது மலையக நீல பெரும் சமர் சமநிலையில் முடிவடைந்தது.

முதல் நாள் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி முதலில் துடுப்பெடுத்தாடி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ஓட்டங்களை பெற்று வலுவான நிலையிலிருந்தது. போதிய வெளிச்சமின்மை மற்றும் அதனை தொடர்ந்து பெய்த அடைமழை காரணமாக முதல் தினம் 61 ஓவர்களே வீசப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று ஆட்டம் சற்று முன்கூட்டியே ஆரம்பமானது. ஆரம்பத்திலேயே திரித்துவக் கல்லூரி விக்கெட் ஒன்றினை இழந்து மந்தமான கதியில் ஓட்டங்களை குவித்த போதிலும், அதனை தொடர்ந்து தியாகராஜா பானுகோபன் மற்றும் ட்ரெவோன் வீரசூரிய சிறப்பான இணைப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி இன்றைய தினம் 17 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய திரித்துவக் கல்லூரி 5 விக்கெட்டுகளை இழந்து 270 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது. துரிதமாக ஓட்டங்கள் குவித்த பானுகோபன் ஆட்டமிழக்காது 40 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

[rev_slider dfcc728]
.

முதல் இன்னிங்ஸ் வெற்றிக்காக 271 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரி ஆரம்பம் முதலே சரிவை சந்தித்தது. இலங்கை 19 வயதிற்கு உட்பட்ட கனிஷ்ட அணி வீரர் திசரு டில்ஷான், எதிரணியின் தொடக்க வீரர்களான மொஹமட் அப்சார் மற்றும் சுனேர ஜயசிங்க ஆகியோரது விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார்.

அணித்தலைவர் மொஹமட் அல்பர் தொடர்ந்து ட்ரெவோன் வீரசூரியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பொறுமையாக அணியை வழிநடத்திய ஜனிது ஹிம்சர அணியின் ஓட்ட எண்ணிக்கையை மெதுவாக உயர்த்தினார்.

எவ்வாறாயினும் அடுத்து பந்துவீச ஆரம்பித்த சுழற்பந்து வீச்சாளரான விமுக்தி கொடிகாவத்த குறுகிய இடைவெளியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு அதிர்ச்சியளித்தார். அவரது பந்துவீச்சில் தீக்ஷ குணசிங்க, தமாஷன அபேகோன் மற்றும் ஜனிது ஹிம்சர ஆகியோர் ஆட்டமிழக்க, புனித அந்தோனியார் கல்லூரி 99 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும் அவ்வணியை காப்பாற்றும் வகையில் அடைமழை பெய்யத் தொடங்கியதன் காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது. மாலை வரை மழைத்தூறல் தொடர்ந்ததனால், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டது.

பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இலங்கையின் முன்னணி கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான 100ஆவது மலையக நீல பெரும் சமர் ஆரம்பமான போதிலும், சீரற்ற காலநிலையின் குறுக்கீட்டினால் வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்து அனைவரையும் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது.

  • போட்டியின் ஆட்ட நாயகன் : ஹசித போயகொட (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த துடுப்பாட்ட வீரர் : ஷனோகீத் சண்முகநாதன் (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த பந்துவீச்சாளர் : விமுக்தி கொடிகாவத்த (திரித்துவக் கல்லூரி)
  • சிறந்த களத்தடுப்பாளர் : சந்தருவன் தர்மரத்ன (புனித அந்தோனியார் கல்லூரி)

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி: 270/5d – ஹசித போயகொட 90, ஷனோகீத் சண்முகநாதன் 83, தியாகராஜா பானுகோபன் 40*, மொஹமட் அலவி 3/57, விரஜித ஜயசிங்க 1/60

புனித அந்தோனியார் கல்லூரி: 99/6 – ஜனிது ஹிம்சார 39, விமுக்தி கொடிகாவத்த 3/28, திசரு டில்ஷான் 2/09

முடிவு: போட்டி வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.