திரித்துவக் கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரி அணிகள் மோதிக் கொள்ளும் மலையகத்தின் நீலங்களின் சமர் எனப்படும் 100ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி மழையின் இடையூறினால் கடந்த வாரம் சமநிலையில் நிறைவடைந்தது. இதன் காரணமாக இவ்விரண்டு அணிகளுக்கு இடையிலான வருடாந்த ஒரு நாள் போட்டி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாக அமைந்திருந்தது.
37ஆவது வருடமாக இடம்பெறும் இப்போட்டி அஸ்கிரிய மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற புனித அந்தோனியார் கல்லூரி எதிரணியை முதலில் துடுப்பெடுத்தாடும்படி பணித்தது.
ஆரம்பத்தில் பின்னடைவை சந்தித்த திரித்துவக் கல்லூரி ஒரு கட்டத்தில் 86 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போதிலும், கீழ்வரிசை வீரர் திசரு டில்ஷானின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் அவ்வணி 200 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
[rev_slider dfcc728]
.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திசரு டில்ஷான் ஆட்டமிழக்காது 49 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் தியாகராஜா பானுகோபன் 33 ஓட்டங்களையும், ஹசித போயகொட 29 ஓட்டங்களையும் குவித்து சிறந்த பங்களிப்பினை வழங்கினர். புனித அந்தோனியார் கல்லூரி சார்பாக பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளரான விராஜித ஜயசிங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
201 என்ற சவாலான இலக்கை நோக்கி களமிறங்கிய புனித அந்தோனியார் கல்லூரியும் ஆரம்பத்தில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது. சதீஷ் விக்ரமாராச்சி மற்றும் ஜனிது ஹிம்சர 32 ஓட்டங்களையும் மொஹமட் அல்பர் 29 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு நம்பிக்கையளித்த போதிலும் ஏனைய வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, புனித அந்தோனியார் கல்லூரி 153 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.
பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட திரித்துவக் கல்லூரியின் ஹசித போயகொட மற்றும் கலன டி சொய்சா 3 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றியிருந்தனர். இதன்படி திரித்துவக் கல்லூரி 47 ஓட்டங்களினால் வெற்றியை சுவீகரித்துக் கொண்டது.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி: 200 (49.3) – திசரு டில்ஷான் 49*, தியாகராஜா பானுகோபன் 33, ஹசித போயகொட 29, கலன டி சொய்சா 24, விராஜித ஜயசிங்க 3/25
புனித அந்தோனியார் கல்லூரி: 153 (45.2) – சதீஷ் விக்ரமாராச்சி 32, ஜனிது ஹிம்சர 22, மொஹமட் அல்பர் 29, கலன டி சொய்சா 3/17, ஹசித போயகொட 3/26
முடிவு: திரித்துவக் கல்லூரி 47 ஓட்டங்களினால் வெற்றி