இலங்கை இளம் தேசிய அணி வீரர் ஹசித போயகொட மற்றும் புபுது பண்டாரவின் அதிரடி ஆட்டத்தின் உதவியால் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு எதிராக நேற்று(29) நிறைவுக்கு வந்த அரையிறுதிப் போட்டியில் திரித்துவக் கல்லூரி அணி, 0.03 புள்ளிகள் வித்தியாசத்தில்(போனஸ் புள்ளி) வெற்றியைப் பதிவுசெய்து இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/18 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டி மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி மற்றும் கண்டி திரித்துவக் கல்லூரி அணிகளுக்கிடையில் நேற்று முன்தினம்(28) ஆரம்பமாகியது.
தர்ஸ்டன் கல்லூரியை வீழ்த்தி அரையிறுதிக்கு நுழைந்த பேதுரு கல்லூரி
சிங்கர் நிறுவன அனுசரணையில்..
குருநாகல் – புனித ஏன்ஸ் கல்லூரி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
போட்டியின் முதல் நாள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டதனால், உரிய நேரத்தில் போட்டியை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து மதிய நேர இடைவேளையின் பிறகு ஆரம்பமாகிய இப்போட்டியின் முதல் நாளில் வெறும் 32 ஓவர்கள் மாத்திரமே பந்துவீசப்பட்டது. முதல் நாள் ஆட்ட நிறைவில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, 2 விக்கெட்டுக்களை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இந்நிலையில், போட்டியின் 2ஆவது நாள் ஆட்டமான நேற்றைய தினம் துடுப்பாட்டத்தில் அதிரடி காட்டிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, போட்டியின் முழு ஆதிக்கத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
இதன்படி, 120 ஓவர்களுக்கு முகங்கொடுத்த அவ்வணி, 9 விக்கெட்டுக்களை இழந்து 248 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணிக்காக சுவத் மெண்டிஸ்(64) மற்றும் சனோஜ் தர்ஷிக்க(57) ஆகியோர் அரைச் சதங்களைக் குவித்தனர்.
பந்துவீச்சில் திரித்துவக் கல்லூரியின் கவிஷ்க சந்தீர மற்றும் விமுக்தி நெதுமால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
இதனையடுத்து போட்டியின் கடைசிப் பாதியில் 30 ஓவர்கள் எஞ்சியிருக்க, தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த திரித்துவக் கல்லூரிக்கு அணித் தலைவர் ஹசித போயகொட மற்றும் புபுது பண்டார ஆகியோர் அதிரடியான ஆரம்பத்தைப் பெற்றுக்கொடுத்து ஓட்டக்குவிப்பில் ஈடுபட்டனர்.
ஸ்மித், வோர்னர் மீதான தடை அனைவருக்கும் ஒரு முன் உதாரணம் – சங்கக்கார
தென்னாபிரிக்காவுக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு..
இதனால், அவ்வணி ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 50 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், மழை குறுக்கிட போட்டி சமநிலையில் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி அணி, 2.73 புள்ளிகள் வித்தியாசத்தில் தமது ஓட்ட வேகத்தினை பெற்றிருந்தாலும், திரித்துவக் கல்லூரி அணியினர் 2.76 புள்ளிகள் வித்தியாசத்தில் ஓட்ட வேகத்தினை முன்னெடுத்திருந்தனர்.
இதன்படி, இம்முறை 2017/18 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில், நிகரப் புள்ளிகள் அடிப்படையில் 0.03 புள்ளிகள் முன்னிலை பெற்ற திரித்துவக் கல்லூரி அணி, இப்போட்டியில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
துடுப்பாட்டத்தில் அசத்தியிருந்த பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சியது.
இதேவேளை, இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் மருதானை புனித ஜோசப் மற்றும் கொழும்பு மஹானாம கல்லூரிகள் மோதவுள்ளன. இதில் வெற்றிபெறும் அணி திரித்துவக் கல்லூரி அணியுடனான இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.
போட்டியின் சுருக்கம்
பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 248/9d (120.1) – சுவத் மெண்டிஸ் 64, சனோஜ் தர்ஷிக்க 57, அவிந்து பெர்னாண்டோ 26, சந்துன் பெர்னாண்டோ 24, சவிந்து பீரிஸ் 20, திஸரு டில்ஷான் 2/27, கவிஷ்க சந்தீர 2/41, விமுக்தி நெதுமால் 2/80
திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 51/1 (12) – புபுது பண்டார 26*
முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.