ஜெப் வீரசிங்க, திசரு ரஷ்மிகவின் அபார துடுப்பாட்டம் மற்றும் அவிஷ்க சேனாதீரவின் அதிரடிப் பந்துவீச்சு என்பவற்றின் உதவியால் இன்று நிறைவுக்கு வந்த நாலந்த கல்லூரிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் கண்டி திரித்துவக் கல்லூரி முதல் இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவுசெய்து அரையிறுதிக்குத் தெரிவாகியது.
சகல துறையிலும் பிரகாசித்த மஹிந்த கல்லூரி காலிறுதிக்குத் தகுதி
சிங்கர் நிறுவன அனுசரணையில் நடைபெற்றவரும் 19 வயதுக்குட்பட்ட …
சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதின் கீழ் பிரிவு ஒன்றுக்கான (டிவிசன் 1) பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரின் மற்றுமொரு காலிறுதிப் போட்டி இவ்விரு கல்லூரிகளுக்கும் இடையில் நேற்று(20) ஆரம்பமாகியது.
கொழும்பு புனித ஜோசப் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அந்த அணி சார்பாக ஜெப் வீரசிங்க 62 ஓட்டங்களையும், திசரு ரஷ்மிக 52 ஓட்டங்களையும் பெற்று வலுச்சேர்த்திருந்தனர். பந்துவீச்சில் நாலந்த கல்லூரியின் மதுஷான் ஹசரங்க மற்றும் கவீஷ் மதுரப்பெரும ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.
பின்னர் முதல் நாள் ஆட்ட நிறைவு நேரத்தில் தமது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த கொழும்பு வீரர்கள் நேற்றைய ஆட்ட நேர நிறைவின்போது 2 விக்கெட்டுக்களை இழந்து 21 ஓட்டங்களைப் பெற்றுள்ளனர்.
இதனையடுத்து போட்டியின் 2ஆவது நாளான இன்றைய தினம் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த நாலந்த கல்லூரி அணியினர், எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களுக்கு சுருண்டனர். அவ்வணி சார்பாக வலதுகை துடுப்பாட்ட வீரரான சுஹங்க விஜேவர்தன 72 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் திரித்துவக் கல்லூரியின் வலதுகை சுழற்பந்து வீச்சாளர் கவிஷ்க சேனாதீர 32 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி அசத்தியிருந்தார்.
இதன்படி, பலோவ் ஒன் முறையில் இரண்டாம் இன்னிங்ஸில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட நாலந்த கல்லூரி அணியினர் ஒரு விக்கெட்டினை இழந்து 3 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில், போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.
கடைசிப் பந்தில் போட்டியின் முடிவை மாற்றிய வீரர்கள்
சமூக வலைத்தளங்களில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பரபரப்பாகப் பேசப்படும் …
இதன்படி, 2017/2018 பருவகாலத்திற்கான 19 வயதுக்குட்பட்ட பிரிவு ஒன்றுக்கான பாடசாலைகளுக்கிடையிலான 2 நாட்கள் கொண்ட கிரிக்கெட் தொடரில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற 3ஆவது அணியாக திரித்துவக் கல்லூரி இணைந்து கொண்டது.
முன்னதாக கொழும்பு சென்.ஜோசப் கல்லூரி மற்றும் மஹானாம ஆகிய கல்லூரி அணிகள் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கொழும்பு ஆனந்த கல்லூரிக்கும், மொறட்டுவை பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரிக்கும் இடையில் இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் வெற்றிபெறுகின்ற அணியுடன் திரித்துவக் கல்லூரி அரையிறுதியில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
போட்டியின் சுருக்கம்
திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 267/10 (75.2) – ஜெப் வீரசிங்க 62, திசரு ரஷ்மிக 56, ட்ரெவன் பேர்சிவால் 32, புபுது பண்டார 27, ஹசித போயகொட 22, மதுஷான் ஹசரங்க 3/53, கவீஷ் மதுரப்பெரும 3/56
நலாந்த கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 151/10 (33.1) – சுஹங்க விஜேவர்தன 72, சமிந்து விஜேசிங்க 23, அவிஷ்க சேனாதீர 4/32, திஸரு டில்ஷான் 2/32, விமுக்தி நெதுமால் 2/45
நாலந்த கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 3/1 (2)
முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது. முதல் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற திரித்துவக் கல்லூரி அரையிறுதிக்குத் தெரிவு.