இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான நுவன் சொய்ஸா மீது ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 3 குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) அறிவித்துள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்ற T10 லீக் தொடரில் களமிறங்கிய இலங்கை அணியின் பயிற்சியாளராக நுவன் சொய்ஸா செயற்பட்டிருந்தார். இதன்போது அவர் ஊழல் மோசடியில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஐ.சி.சி இன் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நுவன் சொய்ஸா மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, ஐ.சி.சி இனால் நியமிக்கப்பட்ட சுயாதீன நடுவர் தீர்ப்பாயத்தின் முன் விசாரணைக்கு ஆஜராகிய பின்னர் ஐ.சி.சி இன் சட்ட விதிகளான 2.1.1 (சூதாட்டத்தில் ஈடுபடல் அல்லது அதற்கு ஒத்துழைப்பு வழங்குதல், வேறு வழிகளில் போட்டியை முடிவை மாற்றுவதற்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவே உதவி செய்தல்), 2.1.4 ( வீரர்களை சூதாட்டத்துக்கு தூண்டுதல், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர்களை வற்புறுத்தல்), 2.4.4 (பொடுபோக்காக நடந்து கொள்ளல், வேறு வழிகளில் போட்டியின் முடிவை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மாற்றுவதற்கு வற்புறுத்தல்) ஆகிய மூன்று விதிமுறைகளையும் மீறியது உறுதி செய்யப்பட்டமையால் அவர் குற்றவாளி என நிரூபணமாகியது.
>> LPL தொடரில் மாலிங்க இல்லை என்பது உறுதி
இதனிடையே, நுவன் சொய்ஸாவுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடை தொடரும் எனவும், எதிர்வரும் நாட்களில் அவர் மீது இன்னும் பல தடைகள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் ஐ.சி.சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1997ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய நுவன் சொய்ஸா, 30 டெஸ்ட், 95 ஒருநாள் போட்டிகளில் விளையாடி ஒட்டுமொத்தமாக 170 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியுள்ளார்.
இதனிடையே, 2015ஆம் ஆண்டு முதல் இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சியாளளர்கள் குழாத்தில் இணைந்துகொண்ட அவர், பந்துவீச்சுப் பயிற்சியாளராக செயற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<