இந்திய கட்புலனற்றோர் அணியிடம் தோல்வியை சந்தித்த இலங்கை கட்புலனற்றோர் அணி

217

இந்தியாவில் ஆரம்பமான இந்தியா, இலங்கை, இங்கிலாந்து கட்புலனற்றோர் அணிகள் பங்குபற்றும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடரில், இந்தியாவுடனான முதல் போட்டியில் இலங்கை கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்தது.  

இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடி சவாலான ஓட்ட எண்ணிக்கையை நிர்ணயித்தபோதும் இந்திய துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்டுகளை காத்துக் கொண்டு இலகு வெற்றி ஒன்றை பெற்றனர். இதன் மூலம் இந்த முத்தரப்பு தொடரில் இலங்கை முதல் போட்டியில் புள்ளிகள் பெற தவறியுள்ளது. இந்த தொடரில் மூன்றாவது அணியாக இங்கிலாந்து கட்புலனற்றோர் அணி பங்கேற்றுள்ளது.

துல்ஷான், நுவனிது ஆகியோர் அசத்த இளையோர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை

பங்களாதேஷில் நடைபெற்று வருகின்ற இளையோர் ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், இலங்கையின் 19 வயதுக்கு…

பெங்களூர், SSE மைதானத்தில் வெள்ளிக்கிழமை (05) நடைபெற்ற இந்திய – இலங்கை கட்புலனற்றோர் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தபோதும் அந்த அணியால் வேகமாக ஓட்டங்களை பெற முடிந்தது.   

இலங்கை அணியின் முதல் இரு விக்கெட்டுகளும் 45 ஓட்டங்களுக்கு பறிபோன நிலையில் கே. சில்வா மற்றும் சமிந்த தேஷப்ரிய 3 ஆவது விக்கெட்டுக்கு 38 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று அணியின் ஓட்டங்களை அதிகரித்தனர்.

எனினும் சில்வா 30 ஓட்டங்களை பெற்ற நிலையில் ரன் அவுட் ஆனதோடு சிறப்பாக ஆடி வந்த தேஷப்ரிய 24 பந்துகளில் 33 ஓட்டங்களை பெற்ற நிலையில் எஸ். ரமேஷின் பந்துக்கு அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் எவரும் நின்றுபிடித்து துடுப்பாடாத நிலையில் இலங்கை கட்புலனற்றோர் அணியால் தமது ஓட்டங்களை அதிகரித்துக் கொள்ள முடியாமல் போனது.

இந்நிலையில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. பந்துவீச்சில் இந்திய அணி சார்பில் எஸ். ரமேஷ் மற்றும் துர்கா ராவ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய இந்திய கட்புலனற்றோர் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 32 ஓட்டங்களுக்கு வீழ்த்த இலங்கை அணியால் முடிந்தது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜி. முகுத்கர் மற்றும் எஸ். ரமேஷ் இருவரும் இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தனர்.

இதில் ஜி. முகுத்கர் 38 பந்துகளில் ஆட்டமிழக்காது 55 ஓட்டங்களை பெற்றதோடு மறுமுனையில் எஸ். ரமேஷ் 57 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் இந்திய கட்புலனற்றோர் அணி 14.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கான 146 ஓட்டங்களை அடைந்தது.

 

 

முதலாவது பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று (05) நடைபெற்ற ஒருநாள் பயிற்சிப்…

போட்டியின் ஆட்ட நாயகனாக பந்துவீச்சு மற்றும் துடுப்பாட்டத்தில் சோபித்த சுனில் ரமேஷ் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 புள்ளிகளை பெற்றுள்ளது. இந்த முத்தரப்பு தொடரில் முதலிடத்தை பிடிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதோடு இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு பலப்பரீட்சை நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கட்புலனற்றோர் அணி எதிர்வரும் திங்கட்கிழமை (08) இங்கிலாந்து கட்புலனற்றோர் அணியை எதிர் கொள்ளவுள்ளது. இலங்கை அணி கடந்த நான்கு ஆண்டுகளில் இங்கிலாந்தை எதிர்கொண்டதில்லை. எனினும் இந்த இரு அணிகளும் கடைசியாக சந்தித்தபோது இலங்கை அணி வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 145 (18.5) – கே. சில்வா 30, சமிந்த தேஷப்ரிய 33, சுனில் ரமேஷ் 2/20, துர்கா ராவ் 2/21

இந்தியா – 146/3 (14.4) – கனேஷ் 55*, சுனில் ரமேஷ் 57, சி. சூரியாரச்சி 1/18, சி. பண்டார 1/20

முடிவு – இந்திய கட்புலனற்றோர் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி

 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<