பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளின் பங்குபற்றலுடன் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் பங்களாதேஷில் ஆரம்பமாகவுள்ள முத்தரப்பு ஒரு நாள் போட்டித் தொடரில் நேரத்தை மாற்றியமைக்க அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
7 போட்டிகளைக் கொண்ட இந்த போட்டித் தொடரின் அனைத்துப் போட்டிகளும் டாக்காவின் ஷெர் ஏ பங்களா மைதானத்தில் (Sher-e-Bangla National Cricket Stadium) பகலிரவு போட்டிகளாக அந்நாட்டு நேரப்படி 2.30 மணிக்கு ஆரம்பமாகவிருந்தன.
எனினும், குறித்த காலப்பகுதியில் அதிக அளவில் குளிரும், பெரும்பாலான இடங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. இதனைக் கருத்திற் கொண்டு அனைத்து போட்டிகளையும் நண்பகல் 12.00 மணிக்கு ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முத்தரப்பு ஒரு நாள் தொடருக்கு முன்னதாக ஜிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை பதினொருவர் அணிகளுக்கு இடையிலான பயிற்சிப் போட்டி நடைபெறவுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜனவரி 15 ஆம் திகதி நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் பங்களாதேஷ் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
எனினும், 13 ஆம் திகதி பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஜிம்பாப்வே அணியை ஜனவரி 17 ஆம் திகதி சந்திக்கவுள்ளது. இந்நிலையில், இப்போட்டித் தொடரில் விளையாடும் மூன்று அணிகளும் தங்களுக்குள் இரண்டு முறை மோதவுள்ளன. இதில் வெற்றி பெற்று முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மோதவுள்ளன.
மாலிங்கவை விடுவித்துள்ள மும்பை அணி
முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் சீரற்ற காலநிலை மற்றும் அதிக குளிர் ஆகியவற்றை கருத்திற்கொண்டு மாற்றியமைப்பதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்கேற்கும் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜனவரி 31 ஆம் திகதி சிட்டகொங்கிலும், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள 2 ஆவது டெஸ்ட் போட்டி டாக்காவிலும் நடைபெறவுள்ளன.இப்போட்டிகள் அந்நாட்டு நேரப்படி காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளன.
அதனைத் தொடர்ந்து இந்த சுற்றுப் பயணத்தின் இறுதி தொடராக 2 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதில் முதலாவது டி20 போட்டி பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதி டாக்காவிலும், 2 ஆவது டி20 போட்டி பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி சில்லெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளதுடன், இவ்விரண்டு போட்டிகளும் மாலை 5 மணிக்கு ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
News source – BCB official Twitter