இலங்கை அணிக்கு எதிராக நடைபெறவுள்ள ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் வீரர் டிராவிஷ் ஹெட் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிராவிஷ் ஹெட் இலங்கை அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபடும்போது தொடை தசைப்பிடிப்பு உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார். இதன்காரணமாகவே, நாளை நடைபெறவுள்ள போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
MCA சுபர் T20 தொடரின் இறுதிப் போட்டியில் ஜோன் கீல்ஸ், MODE அணிகள்
குறித்த இந்த விடயத்தினை அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவர் ஆரோன் பின்ச் உறுதிப்படுத்தியுள்ளார். டிராவிஷ் ஹெட்டின் உபாதை தொடர்பில் குறிப்பிட்ட பின்ச், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் ஐந்தாவது ஒருநாள் போட்டியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் அவர் எவ்வாறு களமிறக்கப்படுவார் என தெரியவில்லை. ஆனால், கட்டாயமாக அவர் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் விளையாடமாட்டார்” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் 5ம் இலக்க துடுப்பாட்ட வீரரான டிராவிஷ் ஹெட், காலியில் நடைபெறவுள்ள முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவது தொடர்பிலும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மிச்சல் ஸ்டார்க் ஆகியோர் ஏற்கனவே உபாதைக்கு முகங்கொடுத்திருந்தனர்.
இதில் மிச்சல் ஸ்டார்க் டெஸ்ட் போட்டிகளுக்கான தயார்படுத்தல்களுக்காக அடுத்த ஒருநாள் போட்டியிலும் விளையாடமாட்டார் என்பதுடன், உபாதையிலிருந்து குணமடைந்துள்ள ஸ்டீவ் ஸ்மித் இறுதி ஒருநாள் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை டிராவிஷ் ஹெட்டுக்கு பதிலாக ஜொஷ் இங்லிஸ் அடுத்தப்போட்டியில் ஒருநாள் போட்டிகளுக்கான அறிமுகத்தை பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ள போதும், அவுஸ்திரேலிய அணியானது பந்துவீச்சை பலப்படுத்துவதற்காக மேலும் ஒரு பந்துவீச்சாளரை அணியில் இணைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நான்கு போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கை அணி 3-1 என தொடரை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<