ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீரர்கள் ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதியில் கம்பளை ஸாஹிரா வீரர்களை 2-1 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி தொடரின் அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.
கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் இடம்பெற்ற இந்தப் போட்டியின் ஆரம்பத்தில் இரு அணியினருக்கும் தொடர்ச்சியான வாய்ப்புக்கள் கிடைத்தும் அவை சிறப்பாக நிறைவுகள் இன்றி வீணாகிப் போனது.
எதிரணியின் மத்திய களத்தில் இருந்து ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக்கை அனுபவ வீரர் பாசித் பெற்றார். அவர் உதைந்த பந்து இடது பக்க கம்பத்தை அண்மித்து வெளியேறியது.
மகாஜனாவை வீழ்த்திய மாரிஸ் ஸ்டெல்லா ThePapare சம்பியன்ஷிப் அரையிறுதியில்
யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரி…
19 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா அணியின் எல்லையின் இடது புறத்தில் இருந்து ஹமீட் அல் ஹுஸைனி வீரர் ஆஷிம் உள்ளனுப்பிய பந்தை அப்கர் ஹெடர் செய்ய பந்து கம்பங்களுக்கு மேலால் வெளியே சென்றது.
தொடர்ந்து ஸாஹிரா வீரர் பாசித் பந்தை முன்னோக்கி எடுத்துச் சென்று கோலுக்கு பந்தை செலுத்துகையில் ஹமீட் அல் ஹுஸைனி கோல் காப்பாளர் சப்ரின் பந்தை தடுத்து வெளியேற்றினார்.
மத்திய களத்தில் இருந்து பந்தைப் பெற்று, கோல் எல்லைக்குள் வந்த அப்கர் கோல் காப்பாளர் இல்லாத திசையினால் பந்தை கோலுக்குள் செலுத்த முயற்சிக்கையில் பந்து வெளியே சென்றது.
தொடர்ந்து எதிரணியின் கோல் எல்லையில் ஸாஹிரா பின்கள வீரர்களைக் கடந்து ஹமீட் அல் ஹுஸைனி வீரர் ரிஷான் உள்ளனுப்பிய பந்தை சக வீரர் நதீர் கோலுக்குள் உதைகையில் கோலின் மேல் கம்பத்தில் பட்டு பந்து மீண்டும் மைதானத்திற்குள் வந்தது.
அதன் பின்னர் கொழும்பு வீரர்கள் அடுத்தடுத்து மேற்கொண்ட கோலுக்கான முயற்சிகளை ஸாஹிரா கோல் காப்பாளர் ரிப்லான் சிறப்பாகத் தடுத்தார்.
40 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோலுக்கு அண்மையில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த கோலுக்கான மிகவும் சிறந்த வாய்ப்பினை மஹ்தி வெளியே அடித்து வீணடித்தார்.
முதல் பாதி: ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 0 – 0 கம்பளை ஸாஹிரா கல்லூரி
இரண்டாவது பாதியின் 5 நிமிடங்களில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களிடையே நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் பந்தைப் பெற்ற ரிஷான் கோலுக்கு உதைகையில், அதனை ரிப்லான் தடுத்தார்.
அதன் பின்னர் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளையும் ரிப்லான் முறியடித்தார்.
ஆட்டத்தின் 60 நிமிடங்கள் கடந்த நிலையில் ரிஷான் வழங்கிய பந்தைப் பெற்ற அப்கர் கோலுக்கு இடது புறத்தில் இருந்து செலுத்திய பந்து கம்பங்களுக்குள் போக, ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் போட்டியின் முதல் கோலைப் பதிவு செய்தனர்.
மேலும் 5 நிமிடங்களின் பின்னர் பெனால்டி எல்லையில் இருந்து பாசித் கோல் நோக்கி வேகமாக செலுத்திய பந்து ஹமீட் அல் ஹுஸைனி கோல் கம்பங்களை விட சற்று உயர்ந்து வெளியே சென்றது.
85 ஆவது நிமிடத்தில் அப்கர் ஸாஹிரா பெனால்டி எல்லையில் அவ்வணி வீரர்களால் முறையற்ற விதத்தில் வீழ்த்தப்பட, ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை அணித் தலைவர் மொஹமட் அமான் கோலாக்கினார்.
பெயார்ஸ்டோவின் சதத்தின் பின் இங்கிலாந்தை கட்டுப்படுத்திய சந்தகன்
தொடர்ந்து ஆட்டத்தின் உபாதையீடு நேரத்தில் ஹமீட் அல் ஹுஸைனி வீரர்களால் அவர்களது பெனால்டி எல்லையில் ஸாஹிரா வீரர் பாசித் வீழ்த்தப்பட, கிடைக்கப்பெற்ற பெனால்டியை பாசித்தே கோலாக்கினார்.
எனவே, எஞ்சிய நேரங்களில் எந்தவித கோல்களும் பெறப்படாத நிலையில், ஹமீட் அல் ஹுஸைனி வீரர்கள் வெற்றியைப் பெற்று தொடரின் அரையிறுதிக்குள் நுழைந்தனர்.
முழு நேரம்: ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி 2 – 1 கம்பளை ஸாஹிரா கல்லூரி
கோல் பெற்றவர்கள்
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி – மொஹமட் அப்கர் 60’, மொஹமட் அமான் 85’
கம்பளை ஸாஹிரா கல்லூரி – மொஹமட் பாசித்
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<