கொழும்பு ஸாஹிராக் கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி அணிகளுக்கு இடையிலான ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் விறுவிறுப்பான காலிறுதிப் போட்டி 3-3 என சமநிலையில் நிறைவுற பெனால்டி வாய்ப்பில் யாழ் வீரர்கள் 5-4 என வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தெரிவாகினர்.
ஏற்கனவே இடம்பெற்ற குழு மட்டப் போட்டிகளின் நிறைவில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரி C குழுவில் முதல் இடத்தையும் புனித பத்திரிசியார் கல்லூரி B குழுவில் இரண்டாம் இடத்தையும் பெற்று காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியிருந்தன.
கடைசி நிமிட கோல் மூலம் அரையிறுதிக்கு நுழைந்த புனித ஜோசப் கல்லூரி
ஆக்கிரமிப்பு ஆட்டத்தை வெளிப்படுத்திய…
கடும் மழைக்கு மத்தியில் சுகததாஸ அரங்கில் ஆரம்பமான இந்தப் போட்டியின் முதல் 15 நிமிடங்களிலும் இரு தரப்பினரும் மிகவும் வேகமாக சம பலத்துடன் ஆடினர். எனினும், புனித பத்திரிசியார் வீரர்கள் எதிரணியின் கோல் எல்லைக்கு வெளியில் கிடைத்த இரண்டு ப்ரீ கிக் வாய்ப்புக்களையும் சிறந்த நிறைவின்றி வீணடித்தனர்.
அதன் பின்னர் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பப்பட்ட பந்தை அணித் தலைவர் ஆகிப் ஹெடர் செய்ய பந்து கோலின் மேல் கம்பத்தில் பட்டு வந்தது. அடுத்த முறை அவ்வணி வீரர்கள் கோலுக்கு மேற்கொண்ட முயற்சியின்போது பந்து வெளியே சென்றது.
சில நிமிடங்களில் எதிரணியின் கோல் எல்லையில் இருந்து பத்திரிசியார் வீரர் கிறிஸ்டீபன் கோல் நோக்கி உதைந்த பந்தை ஸாஹிரா கோல் காப்பாளர் சாகிர் தடுத்தார்.
அடுத்த நிமிடம் சாந்தன் எடுத்துச் சென்ற பந்தை கோலுக்கு அண்மையில் இருந்து சாகிர் தடுக்கும்போது, அவரிடமிருந்து பந்து கைநழுவியது. மீண்டும் பந்தைப் பெற்ற சாந்தன் அதனை கம்பங்களுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றார்.
தொடர்ந்து ஸாஹிரா வீரர்கள் அடுத்தடுத்த நிமிடங்களில் பத்திரிசியார் தரப்பின் வலது புறத்தில் இருந்து உட்செலுத்திய பந்துகளை அவ்வணியின் முன்கள வீரர்கள் சிறந்த முறையில் கோலுக்கு இலக்கு வைக்கவில்லை.
27 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து ஸாஹிரா வீரர் உயர்த்தி வழங்கிய பந்தை சாஜித் கோல் காப்பாளர் கிஜுமனின் கைகளுக்கே ஹெடர் செய்தார்.
அடுத்த நிமிடம் பத்திரிசியார் முன்கள வீரர்களிடையே நிலவிய பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கோலுக்கான முயற்சியின்போது பந்து வெளியே சென்றது.
பத்திரிசியாரின் இரண்டு புள்ளிகளை பறித்த மாரிஸ் ஸ்டெலாவின் பெரேரா
ThePapare.com இன் அனுசரணையில்….
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஸாஹிரா தரப்பை ஆக்கிரமித்த புனித பத்திரிசியார் வீரர்கள் அடுத்தடுத்த மேற்கொண்ட கோல் முயற்சிகளை கோல் காப்பாளர் சாகிர் தடுத்தார்.
40 ஆவது நிமிடம் பத்திரிசியார் கோல் எல்லையில் இருந்து ரிசா கோல் நோக்கி அடித்த பந்தை பத்திரிசியார் கோல் காப்பாளர் கிஜுமன் தடுக்க, மீண்டும் அவ்வணியின் பின்கள வீரர்கள் அதனை அங்கிருந்து வெளியேற்றினர்.
ஆட்டத்தின் 44 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா மத்திய களத்தில் இருந்து சாந்தனிடமிருந்து பெற்ற பந்தை ஹெய்ன்ஸ் மீண்டும் உயர்த்தி உள்ளனுப்ப பந்தை சாந்தன் ஹெடர் மூலம் கோலுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலைப் பதிவு செய்தார்.
மீண்டும் முதல் பாதியின் உபாதையீடு நேரத்தில் (Injury time) பத்திரிசியார் வீரர் சாந்தன் தமது பகுதியில் இருந்து ஸாஹிரா வீரர்களின் தரப்புக்கு செலுத்திய பந்தை மிகவும் வேகமாக சென்று பெற்ற ஹெய்ன்ஸ் அதனை ஸாஹிரா கோல் எல்லைவரை எடுத்துச் சென்று, தன்னைத் தடுக்க வந்த கோல் காப்பாளருக்கு எதிர் திசையினூடாக பந்தை கோலுக்குள் செலுத்தி முதல் பாதி நிறைவடைவதற்குள் மூன்றாவது கோலையும் பதிவு செய்தார்.
முதல் பாதி: புனித பத்திரிசியார் கல்லூரி 3 – 0 ஸாஹிரா கல்லூரி
இரண்டாம் பாதி ஆரம்பமாகி இரண்டு நிமிடங்களில் ஸாஹிரா வீரர்கள் எதிரணியின் எல்லையில் நிலவிய சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் பின்னர் கோலுக்கு அண்மையில் இருந்து உதைந்த பந்து கம்பங்களை விட உயர்ந்து வெளியே சென்றது.
56 ஆவது நிமிடத்தில் ஹிமாஷ் வழங்கிய பந்தைப் பெற்ற சஹீல் அஹமட், கோல் நோக்கி எடுத்த முயற்சியின் போதும் பந்து வெளியே சென்றது.
இரண்டாம் பாதியில் முதல் 20 நிமிடங்களிலும் ஸாஹிரா வீரர்கள் எதிரணியின் கோல் எல்லையில் சிறந்த பந்துப் பரிமாற்றங்களை மேற்கொண்டு தொடர்ச்சியான முயற்சிகளை எடுத்த போதும், அவை எவற்றையும் அவர்களால் கோலாக்க முடியாமல் போனது.
அதன் பின்னர் கிடைத்த சிறந்த வாய்ப்பாக, 70 நிமிடங்கள் கடந்த நிலையில் பத்திரிசியார் அணியின் கோல் எல்லைக்கு வெளியில் வலது புறத்தில் ஸாஹிரா வீரர்களுக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பின்போது, உள்ளனுப்பிய பந்தை பின்கள வீரர் முஷ்பிர் கோலுக்குள் ஹெடர் செய்து தனது அணிக்கான முதல் கோலைப் பெற்றுக் கொடுத்தார்.
77 ஆவது நிமிடத்தில் மத்திய களத்தில் இருந்து உள்ளனுப்பிய பந்தை ஹிமாஷ் வந்த வேகத்திலேயே கோல் நோக்கி உதைய, அந்தப் பந்தும் வெளியே சென்றது.
மிகவும் விறுவிறுப்படைந்த இந்த ஆட்டத்தின் 84 ஆவது நிமிடத்தில் ஸாஹிரா வீரர்கள் அடுத்த கோலையும் பெற்றனர். மத்திய களத்தில் இருந்து பின்கள வீரர்கள் பலரையும் தாண்டி கோலுக்கு அண்மை வரை பந்தை எடுத்து வந்த ஸாஹிரா வீரர் அதனைப் பரிமாற்றம் செய்ய ரிசா பந்தை வலைக்குள் செலுத்தினார்.
த்ரில் ஆட்டத்தில் கம்பளை ஸாஹிராவை வீழ்த்தி அரையிறுதிக்கு சென்றது ஹமீட் அல் ஹுஸைனி
ஹமீட் அல் ஹுஸைனி கல்லூரி வீரர்கள்….
அதே வேகம் மற்றும் அரங்கில் நிறைந்திருந்த தமது ஆதரவாளர்களின் கோசத்திற்கு மத்தியில் ஆடிய ஸாஹிரா வீரர்கள் அடுத்த 5 நிமிடங்களில் ஆட்டத்தை சமப்படுத்துவதற்கான கோலையும் பெற்றனர். மத்திய களத்தில் பந்தைப் பெற்ற ஆகிப், எந்வொரு வீரருக்கும் பந்தைப் பரிமாற்றம் செய்யாமல் கோலின் இடதுபுற கம்பத்தை அண்மித்த வகையில் கோலுக்குள் பந்தை செலுத்தினார்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் ஸாஹிரா அணியின் கோலுக்கு அண்மையில் இருந்து சம்சன் கோல் நோக்கி எடுத்த முயற்சியின்போது கோல் காப்பாளரையும் தாண்டி சென்றுகொண்டிருந்த பந்தை பின்கள வீரர் அங்கிருந்து வெளியே உதைந்தார்.
இதன்போது கிடைத்த கோணர் உதையின்போது உள்ளனுப்பிய பந்தை பத்திரிசியார் வீரர்கள் ஹெடர் செய்ய பந்து மேல் கம்பத்தில் பட்டு மீண்டும் மைதானத்திற்கு திரும்பியது.
எனவே, இரண்டாவது பாதியின் இறுதித் தருவாயில் பெற்ற 3 கோல்களினால் முழு நேர நிறைவில் ஸாஹிரா வீரர்கள் ஆட்டத்தை சமப்படுத்தினர்.
முழு நேரம்: புனித பத்திரிசியார் கல்லூரி 3 – 3 ஸாஹிரா கல்லூரி
ஆட்டம் சமநிலையடைய வெற்றியாளரைத் தீர்மானிக்க பெனால்டி வாய்ப்பு இரு அணிகளுக்கும் வழங்கப்பட்டது.
இதன்போதான வாய்ப்புக்களில் புனித பத்திரிசியார் வீரர்கள் 5 உதைகளை கோலுக்குள் செலுத்தினர். சாந்தன் பந்தை கம்பங்களுக்கு வெளியே அடித்தார்.
அல் அக்ஸா கல்லூரியை வீழ்த்தி பலத்தை நிரூபித்த ஸாஹிரா
ThePapare.com இன் அனுசரணையில்….
ஸாஹிரா அணியின் சஹீல் அஹமட் மற்றும் ஹசன் ரிசா அடித்த பந்துகளை கிஜுமன் தடுக்க 4 உதைகளை மாத்திரமே அவ்வணியினரால் கோலுக்குள் செலுத்த முடிந்தது.
எனவே, பெனால்டி நிறைவில் புனித பத்திரிசியார் வீரர்கள் 5-4 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று ThePapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்குத் தெரிவாகினர்.
கோல் பெற்றவர்கள்
புனித பத்திரிசியார் கல்லூரி – ரஜிகுமார் சாந்தன் 21’&44′, ஹமின்டன் ஹெய்ன்ஸ் 45+2′
ஸாஹிரா கல்லூரி – மொஹமட் முஷ்பிர் 73′, மொஹமட் ரிசா 84′, மொஹமட் ஆகிப் 89′
மஞ்சள் அட்டை
புனித பத்திரிசியார் கல்லூரி – A. ப்ரீசன் 65′, J.A அன்தனி 75′
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<