பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகளின் கிரிக்கெட் தொடர்களை இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) இரத்துச் செய்தது பாதுகாப்பு தொடர்பான தமது அறிவுரைக்கு அமைய அல்ல என பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து உயர் ஸ்தானிகர் கிறிஸ்டியன் டேர்னர் குறிப்பிட்டிருந்தார்.
>> பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தை இரத்துச் செய்த இங்கிலாந்து கிரிக்கெட் சபை
நியூசிலாந்து கிரிக்கெட் அணி, பாதுகாப்பு காரணங்கள் கருதி பாகிஸ்தானுக்கான தமது சுற்றுப்பயணத்தினை இரத்துச் செய்து மூன்று நாட்களின் பின்னர் இங்கிலாந்து கிரிக்கெட் சபையும், அடுத்த மாதம் இங்கிலாந்தின் ஆடவர், மகளிர் கிரிக்கெட் அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்காக பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணங்களை இரத்துச் செய்தது.
இவ்வாறு பாகிஸ்தான் உடனான இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளின் சுற்றுப்பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் தமது குழுவின் அறிவுரைக்கு ஏற்ப கிரிக்கெட் தொடர்கள் இரத்துச் செய்யப்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் இரசிகர்கள் இடையே இன்னும் பரபரப்பினை ஏற்படுத்தியிருக்கின்றது.
இதேவேளை, Cricbuzz செய்தி இணையதளம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் பாதுகாப்பு விடயங்களை அவதானிக்கும் நிறுவனமான ESI Risk உம் இங்கிலாந்தின் பாகிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவித்திருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது.
இன்னும் இங்கிலாந்தின் உயர் ஸ்தானிகர் கிறிஸ்டியன் டேர்னர் தனது ட்விட்டர் கணக்கு மூலமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், இங்கிலாந்து கிரிக்கெட் சபையின் முடிவு தமது நாட்டு அரசின் முடிவுக்கு அமைய மேற்கொள்ளப்படாமல், வீர, வீராங்கனைகளின் மனநிலையினை கருத்திற்கொண்டு சுயாதீனமாக எடுக்கப்பட்ட ஒரு முடிவு என்றும் 2022ஆம் ஆண்டில் இடம்பெறவிருக்கும் பாகிஸ்தானுக்கான இங்கிலாந்து அணியின் சுற்றுப்பயணம் வெற்றிகரமாக நடைபெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.
>> IPL போட்டிகளை நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி
இதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய தலைவராக மாறியிருக்கும் ரமீஸ் ராஜா, பாகிஸ்தானுக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணங்களை இரத்துச் செய்து இங்கிலாந்து கிரிக்கெட் சபை இரட்டை நிலைப்பாட்டுடன் செயற்படுவதாக விமர்சனங்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
விடயங்கள் எவ்வாறு இருந்த போதும், 2009ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலின் பின்னர் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை தமது தாயகத்தில் நடாத்த முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு இவ்வாறாக கிரிக்கெட் தொடர்கள் இரத்துச் செய்யப்படுவது பாரிய பின்னடைவு ஒன்றினை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<