2023 LPL தொடரை ஆக்கரமித்த பந்துவீச்சாளர்கள்

383

லங்கா பிரீமியர் லீக் (LPL) தொடரின் 4ஆவது அத்தியாயத்தில் வனிந்து ஹஸரங்க தலைமையிலான பி-லவ் கண்டி அணி முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தது.

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற மிகவும் பரபரப்பான இந்த தொடரின் இறுதிப் போட்டியில் தம்புள்ள ஓரா அணியை ஒரு பந்து மீதமிருக்க 5 விக்கெட்டுகளால் வெற்றிகொண்டு பி-லவ் கண்டி அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற 3 அத்தியாயங்களை விட இந்த பருவம் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்றே கூறலாம். ஏனென்றால், இந்த பருவத்தில் இலங்கை வீரர்களைப் போல வெளிநாட்டு வீரர்களும் அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்தனர்.

இம்முறை சம்பியன் பட்டம் வென்ற பி-லவ் கண்டி அணியின் பந்துவீச்சை பற்றி சொல்லியே ஆகவேண்டும். அந்த அளவிற்கு மிகவும் அருமையாக கண்டி அணியின் பந்துவீச்சாளர்கள் எதிரணியை திணறடித்திருந்தனர். அந்த அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்கவும், நுவன் பிரதீப்பும் அதிக விக்கெட் எடுத்த வீரர்கள் பட்டியலில் முறையே முதல் 2 இடங்களைப் பிடித்தமை சிறப்பம்சமாகும்.

இதுஇவ்வாறிருக்க, இம்முறை LPL தொடரில் மொத்தம் 286 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டன. எனினும், எந்தவொரு பந்துவீச்சாளரும் ஹெட்ரிக் விக்கெட் எடுக்கவில்லை. ஆனால், பி-லவ் கண்டி அணியின் வனிந்து ஹஸரங்க 9 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இம்முறை LPL தொடரில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியை பதிவு செய்தார். அதேபோல, LPL போட்டிகள் வரலாற்றில் வீரரொருவரினால் பதிவு செய்யப்பட்ட அதி சிறந்த பந்துவீச்சுப் பிரதியாகவும் இது இடம்படித்தது.

>> LPL புதிய சம்பியன்களாக நாமம் சூடிய பி-லவ் கண்டி

மேலும், வனிந்துவைத் தவிர எந்தவொரு வீரரும் 5 விக்கெட் குவியலை பெற்றுக்கொள்ளாவிட்டாலும், 6 வீரர்கள் 4 விக்கெட் பிரதியை எடுத்திருந்தனர்.

அத்துடன், இம்முறை 6 ஓட்டமற்ற ஓவர்கள் மாத்திரமே வீசப்பட்டு இருந்தன. இதில் கோல் டைட்டன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர்

லஹிரு குமார அதிகபட்சமாக 2 ஓட்டமற்ற ஓவர்களை வீசியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் 10 பந்துவீச்சாளர்களில் 6 பேர் வேகப் பந்துவீச்சாளர்களாவும், 4 பேர் சுழல் பந்துவீச்சாளர்களாகவும் இடம்பிடித்தனர். அதிலும், 7 வீரர்கள் இலங்கை பந்துவீச்சாளர்கள் என்பதும் மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

எனவே, இந்த ஆண்டு LPL தொடரில் பந்துவீச்சில் எதிரணி வீரர்களை திணறடித்து அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய முதல் 5 வீரர்கள் குறித்த பட்டியலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

வனிந்து ஹஸரங்க (பி-லவ் கண்டி)

நடப்பு சீசனில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய பந்துவீச்சாளராக பி-லவ் கண்டி அணியின் தலைவர் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துளார். 10 போட்டிகளில் விளையாடிய அவர் 5.51 என்ற சராசரியுடன் 19 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்திய வீரருக்கான செம்மஞ்சள் நிற தொப்பியை தனதாக்கிக் கொண்டுள்ளார்.

இதில் ஜப்னா கிங்ஸ் அணிக்கெதிரான எலிமினேட்டர் போட்டியில் 4 ஓவர்கள் பந்து வீசி 9 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வனிந்து, LPL போட்டிகள வரலாற்றில் அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்த வீரராக இடம்பிடித்தார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரின் 3ஆவது அத்தியாயத்தில் கண்டி பெல்கொன்ஸ் அணிக்காக ஆடிய வனிந்து, 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 10ஆவது இடத்தைப் பிடித்தார். எனினும், இம்முறை போட்டித் தொடரில் சிறப்பாக செயல்பட்ட அவர். அதிக விக்கெட் வீழ்த்திய வீரராக இடம்பிடித்து அசத்தியுள்ளார்.

எவ்வாறாயினும், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற அங்குரார்ப்பண LPL தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் அதிக விக்கெட் வீழ்திய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்கது.

ICC இன் T20i பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் 3ஆவது இடத்தில் உள்ள வனிந்து, ஒட்டுமொத்த LPL தொடரிலும் 57 விக்கெட்டுகளை வீழ்த்தி

அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர்களில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

இதனிடையே, கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 2ஆவது தகுதிகாண் போட்டியின் போது உபாதைக்குள்ளாகிய வனிந்துவிற்கு இறுதிப் போட்டியில் ஆடுகின்ற வாய்ப்பு கிடைக்கவில்லை. இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணம் மற்றும் உலகக் கிண்ணம் என்பவற்றை கருத்தில் கொண்டு தேர்வாளர்களின் கோரிக்கைக்கு அமைய இம்முறை LPL தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடுவதை அவர் தவிர்த்துக் கொண்டார்.

எனினும், அவருக்கு ஆசியக் கிண்ண தொடரில் ஆட முடியாத ஒரு நிலையே ஏற்பட்டுள்ளது.

நுவன் பிரதீப் (பி-லவ கண்டி)

LPL போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ள 36 வயதுடைய வேகப் பந்துவீச்சாளரான நுவன் பிரதீப், இந்த ஆண்டு LPL தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 2ஆவது இடத்தைப் பிடித்தார்.

இம்முறை LPL தொடரில் 7 போட்டிகளில் ஆடிய அவர், 8.88 என்ற சராசரியுடன் 14 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதில் கோல் டைட்டன்ஸ் அணிக்கெதிரான 12ஆவது லீக் போட்டியில் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து இம்முறை போட்டித்தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவுசெய்தார்.

கடந்த ஆண்டு LPL தொடரில் 11 விக்கெட்டுகளுடன் 6ஆவது இடத்தைப் பிடித்த நுவன், இம்முறை LPL தொடரில் சிறப்பாக செயல்பட்டார். அதிலும் குறிப்பாக, தனது காலில் ஏற்பட்ட உபாதையையும் பொருட்படுத்தாமல் தம்புள்ள ஓரா அணியுடனான இறுதிப் போட்டியில் விளையாடி அவிஷ்க பெர்னாண்டோவை 5 ஓட்டங்களுக்கு வீழ்த்தியிருந்தார்.

ஒரு காலத்தில் இலங்கை அணிக்காக மூவகை கிரிக்கெட்டிலும் ஆடி வந்த நுவன் பிரதீப், அடிக்கடி உபாதைகளுக்கு முகங்கொடுத்ததால் இலங்கை

அணியில் அவருக்கு நிரந்தர இடத்தைப் பிடிக்க முடியவில்லை. எவ்வாறாயினும், LPL போட்டிகளில் கடந்த 4 அத்தியாயங்களிலும் 4 அணிகளுக்காக ஆடிய அவர், இம்முறை LPL தொடரில் பி-லவ் கண்டி அணிக்காக ஆடியிருந்ததுடன், அந்த அணிக்கு சம்பியன் பட்டம் வென்று கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் ஆடிய நுவன், 2022ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார். அதேபோல, 2021ஆம் ஆண்டு இங்கிலாந்துடனான T20i தொடரில் ஆடியிருந்த நுவன் பிரதீப்புக்கு இனிவரும் காலங்களில் இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்குமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியாக உள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளரான துஷ்மன்த சமீர, இம்முறை LPL தொடரின் போது மீண்டும் உபாதைக்குள்ளாகியுள்ளதால், ஆரம்பமாகவுள்ள ஆசியக் கிண்ணத் தொடரில் நுவன் பிரதீப்புக்கு இலங்கை அணியில் வாய்ப்பு கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நூர் அஹ்மட் (தம்புள்ள ஓரா)

இந்த ஆண்டு LPL தொடரில் தம்புள்ள ஓரா அணியை இறுதிப் போட்டி வரை அழைந்து வந்த பந்துவீச்சாளர் தான் நூர் அஹ்மட். இம்முறை LPL தொடரில் 12 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்களை எடுத்த 3ஆவது பந்துவீச்சாளராக அவர் இடம்பிடித்தார்.

உலகின் பல்வேறு லீக் தொடர்களில் ஆடிய அனுபவத்தைக் கொண்ட வீரரான இவர், LPL தொடரிலும் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்து வருகின்றார். கடந்த ஆண்டு நடைபெற்ற LPL தொடரில் கோல் கிளெடியேட்டர்ஸ் அணிக்காக ஆடிய அவர், இம்முறை குசல் மெண்டிஸ் தலைமையிலான தம்புள்ள ஓரா அணிக்காக ஆடினார்.

குறிப்பாக, இம்முறை LPL தொடரில் ஆரம்பத்தில் இருந்து பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்த வந்த இவர், 8 போட்டிகளில் ஆடி 7.09 என்ற சராசரியுடன் 12 விக்கெட்டுக்களை எடுத்தார்.

இதில் பி-லவ் கண்டி அணிக்கெதிரான இறுதிப் போட்டியில் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார்.

மதீஷ பத்திரன (கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ்)

இலங்கையின் வேகப் பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மாலிங்கவின் பாணியில் பந்துவீசி குட்டி மாலிங்க என்றழைக்கப்படுகின்ற 20 வயதுடைய வேகப் பந்துவீச்சாளரான மதீஷ பத்திரன, இம்முறை LPL தொடரில் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக ஆடியிருந்தார்.

கொழும்பு அணியின் முக்கிய துருப்புச் சீட்டாக விளங்கிய மதீஷ, அந்த அணிக்காக முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததுடன், அதிக விக்கெட் எடுத்த வீரர்களில் 12 விக்கெட்டுகளுடன் 4ஆவது இடத்தைப் பிடித்தார்.

இம்முறை LPL தொடரில் தான் ஆடிய 8 போட்டிகளில் 2 போட்டிகளைத் தவிர மற்றைய 6 போட்டிகளிலும் 8.76 என்ற சராசரியுடன் குறைந்தபட்சம் ஒன்று மேற்பட்ட விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதில் பி-லவ் கண்டி அணிக்கெதிரான 3ஆவது லீக் போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை எடுத்து இம்முறை போட்டித்தொடரில் தனது சிறந்த பந்துவீச்சுப் பிரதியையும் பதிவு செய்தார்.

எனவே, லசித் மாலிங்கவின் இடத்தை நிரப்பக் கூடிய அனைத்து தகுதிகளையும் கொண்ட பந்துவீச்சாளராக அண்மைக்காலமாக லீக் தொடர்களைப் போல இலங்கை அணியிலும் இடம்பிடித்து பிரகாசித்து வருகின்ற மதீஷ பத்திரன, இம்முறை ஆசியக் கிண்ணம் மற்றும் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக சாதிப்பார் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகும்.

தப்ரைஸ் ஷம்சி (கோல் டைட்டன்ஸ்)

இந்த ஆண்டு LPL தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களில் 5ஆவது இடத்தை கோல் டைட்டன்ஸ அணிக்காக ஆடிய

தென்னாபிரிக்கா வீரர் தப்ரைஸ் ஷம்சி பெற்றுக் கொண்டார். 9 போட்டிகளில் விளையாடிய அவர் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

உலகின் பல்வேறு லீக் தொடர்களில் ஆடிய அனுபவத்தைக் கொண்ட இவர், முதல் தடவையாக LPL தொடரில் களமிறங்கியிருந்ததுடன், கோல் டைட்டன்ஸ் அணியை பிளே-ஓப் சுற்று வரை அழைத்துச் சென்ற முக்கிய வீரர்களில் ஒருவராகவும் இடம்பிடித்தார்.

இதனிடையே, இம்முறை LPL தொடரில் அதிக விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர்களில் 6 முதல் 10 வரையான இடங்களில் முறையே ஜப்னா கிங்ஸ் வீரர் நுவன் துஷார (11 விக்கெட்), கோல் டைட்டன்ஸ் வீரர் கசுன் ராஜித (11 விக்கெட்), ஜப்னா கிங்ஸ் வீரர் துனித் வெல்லாலகே (10 விக்கெட்), தம்புள்ள ஓரா வீரர் பினுர பெர்னாண்டோ (10 விக்கெட்) மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் வீரர் நசீம் ஷா (10 விக்கெட்) ஆகியோர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<