டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் 900 புள்ளிகளைப் பெற்ற முதலாவது நியூசிலாந்து துடுப்பாட்ட வீரராக அவ்வணியின் தலைவர் கேன் வில்லியம்சன் மகத்தான சாதனையொன்றை படைத்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் துடுப்பாட்டத்தில் பிரகாசித்து டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களின் தரப்படுத்தலில் 913 புள்ளிகளோடு இரண்டாமிடத்திற்கு முன்னேறியதன் மூலம் கேன் வில்லியம்சன் இந்த சிறப்பைப் பெற்றுக் கொண்டார்.
இலங்கைக்கு எதிரான நியுசிலாந்து டெஸ்ட் குழாம் அறிவிப்பு
ஐக்கிய அரபு இராச்சியத்தில் வைத்து பாகிஸ்தானை 2-1 என வீழ்த்தி வரலாற்று …
பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் மற்றும் அவுஸ்திரேலிய – இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் என்பவற்றையத் தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் நேற்று (11) வெளியிடப்பட்ட தரவரிசையில், முன்னர் மூன்றாமிடத்திலிருந்த கேன் வில்லியம்சன் ஒரு இடம் முன்னேறி இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் முறையே 89, 139 ஓட்டங்களைக் குவித்து நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த வில்லியம்சன் 37 புள்ளிகளை மேலதிகமாகப் பெற்று துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் 913 புள்ளிகளை முதற்தடவையாகப் பெற்று இந்தப் புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஒருவர் டெஸ்ட் தரப்படுத்தலில் 900 புள்ளிகளுக்கு மேல் பெற்றுக் கொள்வது இதுவே முதல்முறையாகும். அத்துடன் உலக அளவில் இந்த மைல்கல்லை கடந்த 32ஆவது துடுப்பாட்ட வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.
எனினும், நியூசிலாந்து அணிக்காக டெஸ்ட் தரவரிசையில் 900 புள்ளிகள் மைல்கல்லை அந்த அணியின் முன்னாள் வீரரும், வேகப்பந்துவீச்சாளருமான ரிச்சர்ட் ஹேட்லி நிகழ்த்தியிருந்தார். அவர் 1985ஆம் ஆண்டு டெஸ்ட் பந்துவீச்சாளருக்கான தரவரிசையில் 909 புள்ளிகளை பெற்றிருந்தமை நினைவு கூரத்தக்கது.
இதுஇவ்வாறிருக்க, வில்லியம்சனின் முன்னேற்றம் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லியின் முதலிடத்துக்கு ஆபத்தை உருவாக்கியுள்ளது. அடிலெய்ட் டெஸ்டில் விராட் கோஹ்லி எதிர்பார்த்தளவு சோபிக்கவில்லை. இரண்டு இன்னிங்ஸ்களிலும் முறையே 3, 34 ஓட்டங்களை மாத்திரமே அவர் எடுத்தார். இதன்மூலம், 15 புள்ளிகளை பறிகொடுத்த கோஹ்லி, தற்போது 920 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
இருப்பினும் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் கோஹ்லி ஓட்டங்களைக் குவித்தால் மாத்திரமே முதலிடத்தை தக்க வைக்க முடியும். கோஹ்லிக்கும், 2ஆவது இடத்தில் உள்ள கேன் வில்லியம்சனுக்கும் இடையே 7 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.
இதேவேளை, பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி போட்டித் தடையை அனுபவித்து வரும் அவுஸ்திரேலிய முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஒரு இடம் இறங்கி 3ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.
அடிலெய்ட் டெஸ்டில் சதமும் (123 ஓட்டங்கள்), அரைச்சதமும் (71 ஓட்டங்கள்) பெற்றும் இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிக்கு வழிவகுத்த செடிஸ்வர் புஜாரா, இங்கிலாந்து அணித் தலைவர் ஜோ ரூட், அவுஸ்திரேலியாவின் டேவிட் வோர்னர் ஆகியோரை முந்தி 4ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த அபார ஆட்டத்தின் மூலம் 81 புள்ளிகளைப் பெற்ற புஜாரா துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையில் மொத்தம் 846 புள்ளிகள் எடுத்துள்ளார்.
ஒரு வருடத்தில் இரு மடங்காக அதிகரித்த விராட் கோஹ்லியின் வருமானம்
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, சர்வதேச கிரிக்கெட்டை …
இதேபோல் பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2ஆவது இன்னிங்ஸில் 126 ஓட்டங்களைக் குவித்த நியூசிலாந்து வீரர் ஹென்றி நிகெல்ஸ் தனது வாழ்க்கையில் முதல்முறையாக முதல் 10 இடத்திற்குள் நுழைந்துள்ளார். அவர் 17ஆவது இடத்தில் இருந்து 9ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதல் 2 இடங்களில் தென்னாபிரிக்காவின் ரபாடா, இங்கிலாந்தின் ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் தொடருகிறார்கள். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இரண்டு இன்னிங்ஸிலும் 6 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் ஒரு இடம் ஏற்றம் கண்டு 6ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
இதேபோல் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா 5 இடங்கள் முன்னேற்றம் கண்டு 33ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவரது சிறந்த தரவரிசையாகும். அவுஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நெதன் லையன் 2ஆது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். எனினும், அவரது தரவரிசையில் மாற்றமில்லை. ஆனாலும் 19 புள்ளிகள் கூடுதலாக சேகரித்து 725 புள்ளிகளுடன் 14ஆவது இடத்தில் நீடிக்கிறார்.
டெஸ்ட் சகலதுறை வீரர்களின் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மாற்றம் இல்லை. பங்களாதேஷ் அணித் தலைவர் சகிப் அல்–ஹசன், இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா, தென்னாபிரிக்காவின் வெர்ணன் பிலாண்டர் முறையே முதல் 3 இடங்களில் உள்ளனர்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<