ஆசியக் கிண்ணத்தில் விக்கெட் வேட்டையாடியவர்கள்

Asia Cup 2022

387

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்ற ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.

ஆசியக் கிண்ண வரலாற்றில் சிறந்த துடுப்பாட்ட வீரர் மற்றும் சிறந்த பந்துவீச்சாளர் என்று இரண்டு பிரிவுகளிலும் இலங்கை அணியே இன்று வரை ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

துடுப்பாட்டத்தில் சனத் ஜயசூரிய மற்றும் குமார் சங்கக்கார ஆகிய இருவரும் முதல் 5 இடங்களுக்குள் இடம்படித்துள்ள நிலையில், பந்துவீச்சை பொறுத்தமட்டில் லசித் மாலிங்க, முத்தையா முரளிதரன் மற்றும் அஜந்த மெண்டிஸ் ஆகிய மூவரும் முதல் மூன்று இடங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிலும், குறிப்பாக ஆசியக் கிண்ணத்தை அதிக தடவைகள் வென்றுள்ள இந்தியாவைச் சேர்ந்த எந்தவொரு வீரரும் முதல் 5 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், ஆசியக் கிண்ணத்தில் அதிக விக்கெட்களை வீழ்த்திய 5 பந்துவீச்சாளர்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்ப்போம்.

லசித் மாலிங்க (33 விக்கெட்)

ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் வெற்றிகரமான பந்துவீச்சாளர்களில் முதன்மையானவராக இலங்கையின் முன்னாள் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் லசித் மாலிங்க விளங்குகிறார்.

2004 முதல் 2008 வரை நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் விளையாடியுள்ள மாலிங்க, இதுவரை 15 இன்னிங்ஸ்களில் 33 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசியக் கிண்ணத்தில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ளார். மேலும் மூன்று ஐந்து 5 விக்கெட் பிரதிகளையும், இரண்டு தடவைகள் 4 விக்கெட் பிரதிகளையும் பதிவு செய்துள்ளார்.

2010ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 34 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்ததே ஆசியக் கிண்ணத்தில் வேகப் பந்துவீச்சாளர் ஒருவரின் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. அதேபோல, அவரது எஞ்சிய இரண்டு 5 விக்கெட் பிரதிகளும் பாகிஸ்தான் அணிக்கெதிராகவே பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதனிடையே, கடந்த 2014ஆம் ஆண்டு ஆசியக் கிண்ணத்தில் மாலிங்க 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியதே இலங்கை அணி சம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக இருந்தது.

அத்துடன், 2010 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத் தொடர்களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தையும் மாலிங்க பிடித்தார். இதில் 2010இல் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் 3 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும், 2014 பங்களாதேஷில் நடைபெற்ற ஆசியக் கிண்ணத்தில் 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

முத்தையா முரளிதரன் (30 விக்கெட்)

இலங்கையின் முன்னாள் சுழல் பந்துவீச்சு ஜாம்பவான் முத்தையா முரளிதரன், ஆசியக் கிண்ண வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் 2ஆவது இடத்தில் உள்ளார்.

1995 முதல் 2010 வரையான காலப்பகுதியில் 24 இன்னிங்ஸ்களில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 2008ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக 31 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரில் சிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்தார். மேலும் அதே ஆண்டில் 5 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியும் அசத்தினார்.

இதனிடையே, 1997, 2004 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் ஆசியக் கிண்ண சம்பியனாக மகுடம் சூடிய இலங்கை அணியில் முரளிதரனும் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அஜந்த மெண்டிஸ் (26 விக்கெட்)

ஆசியக் கிண்ணத்தில் வெறும் 8 போட்டிகளில் 26 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இலங்கையின் மற்றுமொரு நட்சத்திர சுழல் பந்துவீச்சாளரான அஜந்த மெண்டிஸ் மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு கராச்சியில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் 13 ஓட்டங்கள் மட்டுமே விட்டுகொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவாகினார்.

அத்துடன், குறித்த தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தொடர் நாயகன் விருதை அஜந்த மெண்டிஸ் வென்றார். இதனிடையே, ஆசியக் கிண்ண போட்டிகள் வரலாற்றில் அத்தியாயம் ஒன்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராகவும் அவர் இடம்பிடித்தார்.

அதேபோல, 2008 முதல் 2014 வரையான காலப்பகுதியில் அவர் இரண்டு 5 விக்கெட் பிரதிகளையும், இரண்டு 4 விக்கெட் பிரதிகளையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

சயீட் அஜ்மல் (25 விக்கெட்)

ஆசிய கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக விளங்குகின்ற முன்னாள் சுழல் பந்துவீச்சாளரான சயீட் அஜ்மல், 12 இன்னிங்ஸ்களில் 25 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளார். இதில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களை வீழ்த்தினார்.

அத்துடன். 2012இல் பாகிஸ்தான் அணி ஆசியக் கிண்ணத்தை வெற்றி கொள்வதில் முக்கிய பங்குவகித்த சயீட் அஜ்மல், குறித்த தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

சகிப் அல் ஹசன் (24 விக்கெட்)

பங்களாதேஷ் அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான சகிப் அல் ஹசன் 2010 முதல் ஆசியக் கிண்ணப் போட்டிகளில் விளையாடி வருகின்றார்.

ஆசிய கிண்ணத்தில் பங்களாதேஷ் அணியின் வெற்றிகரமான பந்துவீச்சாளராக விளங்குகின்ற சகிப், இதுவரை 18 இன்னிங்ஸ்களில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆசியக் கிண்ணத் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்களில் 5ஆவது இடத்தில் உள்ளார்.

இறுதியாக கடந்த 2018ஆம் ஆண்டு 4 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 42 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் 6 முதல் 10 வரையான இடங்களில் சமிந்த வாஸ் (23 விக்கெட்), மஷ்ரபி முர்தஸா (23 விக்கெட்), ரவீந்திர ஜடேஜா (22 விக்கெட்), இர்பான் பதான் (22 விக்கெட்), சனத் ஜயசூரிய (22 விக்கெட்) ஆகிய வீரர்கள் உள்ளனர்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<