இங்லீஷ் பிரீமியர் லீக் தொடரில் சட்டன் யுனைடட் அணியுடனான போட்டியில் 2-௦ என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றியீட்டிய ஆர்சனல் அணி, அனைவரும் எதிர்பார்த்தவாரே காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
FA கிண்ணப் போட்டிகளில் நான்காவது சுற்றுப் போட்டிகளுக்காக ஏற்கனவே மூன்று தடவைகள் தகுதி பெற்றிருந்த சட்டன் யுனைடட் கால்பந்து அணி, இம்முறை முதல் முறையாக ஐந்தாவது சுற்றுக்கும் தகுதி பெற்றிருந்தது. எனவே, முதல் முறையாக தொடரின் காலிறுதிச் சுற்றுக்குத் தெரிவாகும் கனவுடன் களமிறங்கிய ஐக்கிய சட்டன் அணிக்கு ஏமாற்றமே எஞ்சியது.
எனவே, மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஐந்தாவது சுற்றுப் போட்டியில் முதல் பாதி நேரத்தில் 26ஆவது நிமிடம் தியோ வால்காட் குறுக்காக உள்செலுத்திய பந்தை லூக்காஸ் பெரேஸ் கோலாக மாற்றினார். அதேநேரம், தொடர்ந்து போராடிய சட்டன் வீரர்களுக்கு, சில இலகுவான வாய்ப்புகள் கிடைக்கப்பெற்ற போதும் அவையனைத்தும் வீணடிக்கப்பட்டன.
முதல் பாதி நேர முடிவின்போது 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்ற ஆர்சனல் அணி, இரண்டாவது பாதி நேரத்தின் 55ஆவது நிமிடம் தியோ வால்காட் மூலம் தனது இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டது. இந்த கோலைப் பெற்றதால், தியோ வால்காட் தனது 100ஆவது கோலையும் பதிவு செய்தார்.
எனவே, இந்த வெற்றியின்மூலம் ஆர்சனல் அணி எதிர்வரும் மார்ச் மாதம் 11ஆம் திகதி நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் லிங்கன் சிட்டி அணியை எதிர்கொள்ளவுள்ளது.