இலங்கை கிரிக்கெட் அணியின் பணிப்பாளர் டொம் மூடி, இங்கிலாந்து தொடருக்கான இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் விளையாடும் முகமாக இலங்கை அணி, இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்த தொடர் எதிர்வரும் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இந்தநிலையில் டொம் மூடி, இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபம் மற்றும் பயிற்றுவிப்பாளராக இருந்த அனுபவம், இலங்கை அணியின் இளம் வீரர்களுக்கு சாதகமாக அமையும் என்ற நோக்கில், பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்படவுள்ளார்.
டொம் மூடி கடந்த மார்ச் முதலாம் திகதியிலிருந்து மூன்று வருட ஒப்பந்தத்தில், இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இலங்கை கிரிக்கெட்டின் உள்ளூர் போட்டியின் வரைவு, வீரர்கள் நலன், கல்வி மற்றும் திறமை அபிவிருத்தி, பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் வரைவு, உயர் செயற்திறன் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற விடங்களை கண்கானித்துவருகின்றார்.
அதேநேரம், டொம் மூடி இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2005ம் ஆண்டு தொடக்கம் 2007ம் ஆண்டுவரை செயற்பட்டதுடன், 2007ம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி, மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிவரை முன்னேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<