இலங்கை கிரிக்கெட்டிலிருந்து விடைபெறும் டொம் மூடி ; பதவியில் நீடிக்கும் மஹேல!

Sri Lanka Cricket

3557

இலங்கை கிரிக்கெட்டின் பணிப்பாளராக செயற்பட்டுவந்த அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரர் டொம் மூடி அவருடைய பதவியிலிருந்து விலகிக்கொள்வார் என இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

மூன்று வருட ஒப்பந்தத்தில் இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்திருந்த டொம் மூடி, தற்போது ஒன்றரை வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

SA20 தொடர் ஏலத்தில் வாங்கப்பட்ட இலங்கை வீரர்கள்!

எனினும் இலங்கை கிரிக்கெட்டின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளதாக சண்டே டைம்ஸ் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரவிந்த டி சில்வா தலைமையிலான இலங்கை கிரிக்கெட் தொழிநுட்ப குழு, கடந்த வருடம் மார்ச் மாதம் டொம் மூடியை கிரிக்கெட் பணிப்பாளராக நியமித்தது. டொம் மூடி இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட், உள்ளூர் போட்டிகளின் கட்டமைப்பு, வீரர்களின் திறனாய்வு மற்றும் சர்வதேச கிரிக்கெட் என அனைத்தையும் மேம்படுத்தும் முகமாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

டொம் மூடியின் மூலமாக இலங்கை கிரிக்கெட்டில் இணைந்துள்ள முன்னணி 26 கழகங்களுக்கான போட்டிகளை தொடர்ந்து, மாகாணங்களுக்கான 5 அணிகளை உருவாக்கி, அதன்மூலம் வீரர்களை தெரிவுசெய்வதற்கான படிமுறையை செயற்படுத்தியிருந்தார்.

எனினும் மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட்டை மேம்படுத்துவதற்கான பணிகளை தீவிரமாக செய்துவருவதன் காரணமாக, டொம் மூடிக்கு விடைகொடுக்க இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. எனவே இவருக்கு 42 ஆயிரம் அமெரிக்க டொலர்களை நட்ட ஈடாக வழங்கவும் இலங்கை கிரிக்கெட் சபை முடிவுசெய்துள்ளது.

டொம் மூடியின் 3 வருட ஒப்பந்தத்தின்படி அவர் 300 நாட்கள் இலங்கையில் தங்கியிருந்து வீரர்களுக்கான திறனாய்வு, வீரர்களை கண்டறிதல், கிரிக்கெட் கட்டமைப்பு, வீரர்களின் திறமைகளை மேம்படுத்தல், உயர் செயற்திறன் மையம் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான கட்டமைப்புடன் கூடிய ஆலோசனைகளை வழங்குவார் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அத்துடன் அவர் தங்கியிருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் 2000 அமெரிக்க டொலர்கள் அவருக்கு வழங்கப்படும் என்பதுடன், அவர் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கான செலவை இலங்கை கிரிக்கெட் சபை ஏற்கவேண்டும்.

எனவே, அவரை பதிவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும், தற்போது இரண்டு தரப்புகளும் ஒரு நிலைப்பாடுக்கு வந்துள்ளதாகவும் அதனால் டொம் மூடி பதவி விலகுவார் எனவும் இலங்கை கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

“டொம் மூடியை பாதி ஒப்பந்தத்தில் பதவியிலிருந்து நீக்குவதன் காரணமாக அவருக்கு நட்ட ஈடு வழங்ப்படுகின்றது. அவரை மேலும் ஒன்றரை ஆண்டுகள் வைத்திருப்பதற்கு, தற்போது அவரை பதவி நீக்குவது சிறந்ததாக இருக்கும்” என குறித்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை மஹேல ஜயவர்தன மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பதவியை பெற்றுள்ளபோதும், அவர் இலங்கையின் அனைத்து வயது கிரிக்கெட்டுக்கும் அளப்பரிய பங்கு வகிப்பதன் காரணமாக, அவர் தொடர்ந்தும் அணியுடன் இருப்பார் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மஹேல ஜயவர்தன தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கை கிரிக்கெட் சபையின் தலைவர் சம்மி சில்வா, “மஹேல ஜயவர்தன அற்புதமான பணிகளை செய்துவருகின்றார். அவருக்கான பெருமையை நாம் கொடுக்கவேண்டும். தேசிய அணி மாத்திரமல்ல, அனைத்துவயது அணிகளும் தற்போது சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவருகின்றன. அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் செய்துவரும் புதிய பணியில் எமக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை.” என்றார்.

இலங்கை கிரிக்கெட் அணி கடந்த சில வருடங்களாக எதிர்பார்த்தளவு பிரகாசிப்புகளை வழங்காதபோதும், தற்போது சிறந்த பிரகாசிப்புகளை வழங்கிவருகின்றது. இறுதியாக 8 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசியக்கிண்ணத்தை வென்றுள்ளதுடன், ஒருநாள், டெஸ்ட் மற்றும் T20I என அனைத்து வகை கிரிக்கெட்டிலும் முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<