இந்திய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியதுடன், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
ஓல்லி போப் குவித்த 196 ஓட்டங்கள் மற்றும் அறிமுக சுழல்பந்து வீச்சாளர் டொம் ஹார்ட்லி 2ஆவது இன்னிங்ஸில் எடுத்த 7 விக்கெட்டுகள் அந்த அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகியது. இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதன்படி, முதல் இன்னிங்ஸுற்காக ஆடி இங்கிலாந்து அணி 246 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 88 பந்துகளில் 70 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 436 ஓட்டங்களைக் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா என மூவரும் தலா 80 ஓட்டங்களுக்கு மேல் எடுத்து வலுச்சேர்த்தனர். இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 4 விக்கெட்டுகளையும், டொம் ஹார்ட்லி மற்றும் ரெஹான் அஹமட் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 190 ஓட்டங்கள் பின்னிலையில் தமது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 420 ஓட்டங்களைக் குவித்தது. அந்த அணியின் முன் வரிசை வீரர் ஒல்லி போப் 196 ஓட்டங்களை எடுத்து இரட்டைச் சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.
2ஆவது இன்னிங்ஸில் இந்திய தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
- ஆஸியை வீழ்த்தி புதிய சரித்திரம் படைத்த மேற்கிந்திய தீவுகள்
- முதல் இரண்டு டெஸ்ட்களிலும் கோலிக்கு ஓய்வு
இந்த நிலையில், இந்தியாவைக் காட்டிலும் இங்கிலாந்து அணி 230 ஓட்டங்கள் முன்னிலை பெற்றதால் இந்திய அணிக்கு 231 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி, 231 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய இந்திய அணி, 24 வயதான இளம் சுழல்பந்து வீச்சாளர் டொம் ஹார்ட்லியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறியது. இதனால் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக சொந்த மண்ணில் தொடர்ந்து 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றியை தவறவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் ஆடிய டொம் ஹார்ட்லி, 26.2 ஓவர்கள் பந்து வீசி 62 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் வீழ்த்தினார். இந்தப் போட்டியில் மொத்தமாக 9 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியிருந்தார். இந்த நிலையில், இரட்டைச் சத வாய்ப்பை தவறவிட்ட ஒல்லி போப்புக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 2ஆம் திகதி விசாகாப்பட்டணத்தில் ஆரம்பமாகவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<