சஹீனுக்கு Dive செய்ய வேண்டாம் என்று சொன்னேன் – சஹீட் அப்ரிடி

Asia Cup 2022

338

வேகப்பந்து வீச்சாளராக உள்ள நீங்கள் காயமடையக்கூடும் என்பதால் Dive செய்ய வேண்டாம் என்று சஹீன் ஷா அப்ரிடியிடம் தான் கூறியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவரும், நட்சத்திர வீரருமான சஹீட் அப்ரிடி தெரிவித்துள்ளார்.

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 27 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது. இதில் 28 ஆம் திகதி நடைபெறும் போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதவுள்ளன.

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் இந்தப் போட்டியைக் காண மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றது.

இந்தநிலையில், இந்த போட்டியில் இந்திய அணிக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சஹீன் ஷா அப்ரிடி காயம் காரணமாக ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து முழுமையாக விலகுவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது களத்தடுப்பில் வைத்து வலது முழங்காலில் தசைநார் காயத்துக்கு உள்ளனார்.

எனவே, காயம் காரணமாக அவதிப்பட்டு வரும் சஹீன் அப்ரிடிக்கு இன்னும் குறைந்தது 5 முதல் 6 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் இம்முறை ஆசியக் கிண்ணத் தொடரில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் பாகிஸ்தான் அணி தெரிவித்துள்ளது.

இம்முறை ஆசியக் கிண்ணத்தில் எல்லா அணிகளுக்கும் அச்சுறுத்தலாக சஹீன் அப்ரிடி விளங்குவார் என பல முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே கருத்து வெளியிட்டு வந்த நிலையில், தற்போது சஹீன் அப்ரிடி காயம் காரணமாக ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இருந்து முழுமையாக விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் சஹீட் அப்ரிடி ட்விட்டரில் கேள்வி – பதில் நிகழ்ச்சி ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார். இதன்போது சஹீன் அப்ரிடியின் காயம் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.

குறிப்பாக சஹீன் அப்ரிடி காயம் அடைந்துள்ளதால், சஹீட் அப்ரிடிக்கு தனது ஓய்வை திரும்பப் பெறுமாறு ரசிகர் கேட்டுக் கொண்டார். இந்தக் கேள்விக்கு அவர் வெளியிட்ட பதிலில்,

நான் அவருக்கு டைவ் செயய் வேண்டாம் என்று முன்பே சொன்னேன், காயம் மகிழ்ச்சியாக இருக்கும், நீங்கள் ஒரு வேகப்பந்து வீச்சாளர். ஆனால், அவரும் ஒரு அப்ரிடிதான் என்பதை பின்னர் தான் உணர்ந்தேன்’ என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

சஹீட் அப்ரிடியும் கிரிக்கெட் களத்தில் பிடிவாதமாக இருப்பவர் .எனவே அவரது பெயரில் உள்ள வீரர்களும் பிடிவாதமாகத் தான் இருப்பார்கள் என்பதை அவர் இந்தப் பதில் மூலம் கேலியாக குறிப்பிட்டுள்ளார்.

இது இவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் நஜீபுல்லா சூம்ரோ, சஹீன் அப்ரிடியின் காயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,

நான் சஹீனுடன் பேசினேன், காயம் காரணமாக ஆசியக் கிண்ணத்தில் விளையாட முடியாது என்று வெளியான செய்தியால் அவர் மிகவும் வருத்தமடைந்தார், ஆனால் அவர் துணிச்சலான இளைஞர், அவர் தனது நாட்டிற்கும் அணிக்கும் சேவை செய்ய வலுவாக திரும்பி வருவேன் என்று சபதம் செய்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார்.

22 வயதான சஹீன் அப்ரிடி, பாகிஸ்தான் அணிக்காக 25 டெஸ்ட், 32 ஒருநாள் மற்றும் 40 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 208 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<