டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதிப்பார்களா இலங்கை நட்சத்திரங்கள்?

2020 Tokyo Paralympics

595

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் வகையில் பாராலிம்பிக் விளையாட்டு விழா ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்பட்டு வருகின்றது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் விளையாட்டு விழா முடிந்தவுடன் பாராலிம்பிக் விளையாட்டு விழா நடத்தப்படும். கடந்த 1948 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் அதிகளவு மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்

அதற்கு அடுத்து 1960இல் 23 நாடுகளில் இருந்து 400க்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். இதன் தொடர்ச்சியாக 2012 லண்டன் பாராலிம்பிக்கில் 100 நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கையிலிருந்து 9 வீரர்கள் பங்கேற்பு

ஒவ்வொரு மாற்றுத்திறனாளியின் உடல்பாதிப்புக்கு ஏற்ப அவர்கள் விளையாட்டுகள் வகைப்படுத்தப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020ஆம் ஆண்டே பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒலிம்பிக் விளையாட்டு விழாவைப் போலவே பாராலிம்பிக் விளையாட்டு விழாவும் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது

டோக்கியோவில் ஏற்கனவே 1964இல் பாராலிம்பிக் விளையாட்டு விழா நடைபெற்றன. இரண்டாவது தடவையாக டோக்கியோவில் நடைபெறவுள்ள இம்முறை பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் புதிதாக தற்போது பெட்மிண்டன், டைக்வொண்டோ உள்ளிட்ட விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

22 விளையாட்டுக்கள்

வில்வித்தை, மெய்வல்லுனர், பெட்மிண்டன், சைக்கிளோட்டம், குதிரையேற்றம், 5 பேர் கால்பந்து, ஜூடோ, பளுதூக்குதல், படகோட்டம், துப்பாக்கி சுடுதல், உட்கார்ந்து விளையாடும் கரப்பந்து, நீச்சல், மேசைப்பந்து, சக்கர இருக்கை கூடைப்பந்து, வாள்சண்டை, ரக்பி, டென்னிஸ் உள்ளிட்ட 22 விளையாட்டுகளில் 540 போட்டிகள் இம்முறை பாராலிம்பிக்கில் நடைபெற உள்ளன.

இலங்கையிலிருந்து 9 பேர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16ஆவது பாராலிம்பிக் விளையாட்டு விழா இன்று முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ளது

இலங்கை உட்பட 160க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4,400 மாற்றுத்திறனாளிகள், 22 வகையான பரா விளையாட்டுக்களில் 540 தங்கப் பதக்கங்களுக்காக டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் போட்டியிடவுள்ளனர்.

பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்க மகேஷ் ஜயகொடி தகுதி

இம்முறை பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கையிலிருந்து நான்கு வகையான விளையாட்டுகளின் கீழ் ஒன்பது மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றவுள்ளனர்.

இந்த 9 பாராலிம்பியர்களும் கடந்த சில மாதங்காக கடும் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன் கடந்த வெள்ளிக்கிழமை இங்கிருந்து ஜப்பான் நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.

இக்குழுவில் 6 பாரா மெய்வல்லுனர்கள், ஒரு பாரா படகோட்ட வீரர், ஒரு பரா வில்லாளர், ஒரு பரா சக்கர இருக்கை டென்னிஸ் வீரர் ஆகியோர் இடம்பெறுகின்றனர்.

மெய்வல்லுனர் 

இம்முறை டோக்கியோ பாராலிம்பிக் மெய்வல்லுனர் விளையாட்டு விழாவில் ஆறு இலங்கை மெய்வல்லுனர்கள் பங்குபற்றவுள்ளதுடன், இவர்கள் அனைவரும் சர்வதேசப் போட்டிகளில் பங்குபற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் சமித்த துலானைத் தவிர்ந்த மற்றைய ஐவரும் சர்வதேசப் பதக்கங்களை வென்றுள்ளனர்

எனவே, பராலிம்பிக்கில் இந்த வீரர்கள் அதிசிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்றெடுக்க முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தினேஷ் நம்பிக்கை

ரியோ 2016 பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற தினேஷ் ப்ரியன்த ஹேரத், டோக்கியோவிலும் பதக்கம் ஒன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் பங்குபற்றவுள்ளார். இவர் ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் பங்குபற்றுகின்றார்.

இலங்கை பாராலிம்பிக் அணியின் தலைவராக செயல்படவுள்ள ஹேரத், 2017 உலக பாரா மெய்வல்லுனர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் 2018 ஆசிய பாரா மெய்வல்லுனர் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 2019 உலக பாரா மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றிருந்தார்.

சமித்த, சம்பத் எதிர்பார்ப்பு

தினேஷ் பிரியன்தவுடன் மேலும் இருவர் பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் இலங்கை சார்பாக பங்குபற்றவுள்ளனர். ஆண்களுக்கான F44 பிரிவு ஈட்டி எறிதலில் சமித்த துலானும் ஆண்களுக்கான F64 பிரிவு ஈட்டி எறிதலில் சம்பத் ஹெட்டிஆராச்சியும் பங்குபற்றுகின்றனர்.

வாழ்க்கையே மாறி, இன்று பாராலிம்பிக் செல்லும் சுபசிங்க

இதில் 30 வயதான சமித்த துலான், 2019இல் டுபாயில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனரில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் தகுதிகாண் போட்டியில் 61 மீட்டர் தூரத்தை எறிந்து ஒலிம்பிக் வாய்ப்பை அவர் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பதக்கம் வெல்வாரா பாலித்த

இந்த நிலையில், ஆண்களுக்கான F42 பரிவு குண்டு போடுதலில் பாலித்த பண்டாரவும், ஆண்களுக்கான T45-46 பிரிவு 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் சமன் மதுரங்க சுபசிங்கவும் பங்குபற்றுகின்றனர்.

2018இல் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கம் வென்ற 28 வயதான பாலித்த பண்டார, 2019இல் டுபாயில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனரில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள 30 வயதான சமன் சுகசிங்க, 2018 ஆம் ஆண்டு ஜகார்த்தாவில் நடைபற்ற ஆசிய பாரா விளையாட்டு விழாவில் நான்காவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், 2019இல் டுபாயில் நடைபெற்ற உலக பாரா மெய்வல்லுனர் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். எனவே, முதல் முறையாக பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் எதிர்பார்ப்புடன் அவர் டோக்கியோ சென்றுள்ளார்

சிங்கப் பெண் குமுது

இதனிடையே, இலங்கை சார்பாக இம்முறை பாராலிம்பிக்கில் களமிறங்கவுள்ள ஒரேயொரு வீராங்கனையான குமுது பிரியன்கா T45-46 பிரிவு 100 மீட்டர் ஓட்டப் போட்டியிலும், நீளம் பாய்தல் போட்டியிலும் பங்குபற்றுகின்றார்

இலங்கை சார்பாக இவர் மாத்திரமே இரண்டு போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாராலிம்பிக் செல்லும் ஒரே இலங்கை வீராங்கனை குமுது

ஆசிய பாரா விளையாட்டு விழா மற்றும் உலக பாரா மெய்வல்லுனர் கிரான்ட் பிரிக்ஸ் போட்டியில் பதக்கங்களை வென்ற 33 வயதான குமுது பிரியன்கா, முதல் முறையாக பாராலிம்பிக்கில் களமிறங்கி பதக்கமொன்றை வெல்லும் எதிர்பார்ப்புடன் உள்ளார்

வில்வித்தை

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழா வில்வித்தையில் சம்பத் பண்டார களமிறகுகிறார்

முன்னதாக, தாய்லாந்தின் பங்கொக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற பாரா வில்வித்தைப் போட்டியில் இவர் தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இம்முறை பாராலிம்பிக்கில் சம்பத் பண்டார ஆற்றல்களை வெளிப்படுத்தி பதக்கமொன்றை வெல்வாரா என எதிர்பார்க்கப்படுகின்றது.

படகோட்டம்

டோக்கியோவில் இந்த வருடம் நடைபெற்ற ஆசிய கண்ட பாரா படகோட்டப் போட்டியில் தங்கம் வென்ற மஹேஷ் பிரியமால் ஜயக்கொடி டோக்கியோ பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லக்கூடிய வீரர்களில் ஒருவராக விளங்குகிறார்

பாராலிம்பிக்கில் களமிறங்கும் இலங்கையைச் சேர்ந்த முதலாவது படகோட்ட வீரராகவும், முதலாவது ஆசிய நாட்டைச் சேர்ந்த வீரராகவும் 34 வயதான மகேஷ் இடம்பிடித்துள்ளார்.

முன்னதாக 2018 ஆம் ஆண்டு பல்கேரியாவில் நடைபெற்ற உலக மாற்றுத்திறனாளிகளுக்கான படகோட்டப் போட்டியில் மகேஷ் பங்கேற்றார். அதில் அரையிறுதிச் சுற்று வரை முன்னேறினார்.

தொடர்ந்து அவர் 2019 இல் கொரியாவில் இடம்பெற்ற ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான படகோட்ட சம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சக்கர இருக்கை டென்னிஸ் 

சக்கர இருக்கை டென்னிஸ் வீரரான சுரேஷ் ரஞ்சன் தர்மசேன முதல் தடவையாக பாராலிம்பிக் போட்டியில் பங்குபற்றவுள்ளார்.

பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

அண்மையில் போர்த்துக்கலில் நடைபெற்ற உலகக் கிண்ண சக்கர இருக்கை டென்னிஸ் தகுதிகாண் போட்டியில் திறமையை வெளிப்படுத்திய ரஞ்சன், இஸ்ரேல், குரேஷியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரபல வீரர்களை வீழ்த்தியிருந்தார்.

இலங்கைக்கு எத்தனை பதக்கங்கள்?

ஈட்டி எறிதல் வீரர் தினேஷ் பிரியன்த ஹேரத், ஆரம்ப விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார்

லண்டன் 2012 பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான T46 பிரிவு 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கத்தையும், 2016 ரியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதலில் தினேஷ் பிரியன்த வெண்கலப் பதக்கதையும் வென்றிருந்தனர்.

எனவே, இம்முறை டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவிலும் இலங்கைக்கு இரண்டு அல்லது மூன்று பதக்கங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாக இலங்கை பாராலிம்பிக் குழுத் தலைவர் மேஜர் ஜெனரல் ரஜித்த அம்ப்பேமொஹொட்டி நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

எனவே, டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் பதக்கங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும் எனக் கருதப்படுகிறது.

டோக்கியோவில்

இலங்கை வீரர்கள் பங்குபற்றும் முதல் போட்டி ஆகஸ்ட் 27 ஆம் திகதி நடைபெற உள்ளது. வில்வித்தை தனிநபர் பிரிவு தகுதிச் சுற்றில் சம்பத் பண்டாரவும், சக்கர இருக்கை டென்னிஸ் தகுதிச் சுற்றில் சுரேஷ் தர்மசேனவும் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே, அதே தினத்தன்று படகோட்டம் தகுதிச் சுற்றில் மஹேஷ் ஜயக்கொடி களமிறங்வுள்ளார்.

இந்த நிலையில், தினேஷ் பிரியன்த, சமித்த துலான் மற்றும் சம்பத் ஹெட்டியாரச்சி ஆகிய மூவரும் பங்கேற்கும் ஈட்டி எறிதல் போட்டி ஆகஸ்ட் 30 ஆம் திகதி நடைபெறும்

அதனைத்தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் திகதி குமுது பரியன்கா பெண்களுக்கான 100 மீட்டரிலும், செப்டம்பர் 3 ஆம் திகதி பெண்களுக்கான நீளம் பாய்தலிலும் களிமறங்கவுள்ளார். அதே தினத்தன்று நடைபெறும் ஆண்களுக்கான 400 மீட்டரில் மதுரங்க சுபசிங்க போட்டியிடவுள்ளார்

இதேவேளை, செப்டம்பர் 4 ஆம் திகதி ஆண்களுக்கான குண்டு போடுதலில் பாலித்த பண்டார பங்குபற்றவுள்ளார்.

எனவே, இம்முறை டோக்கியோ பாராலிம்பிக்கில் போட்டியிடவுள்ள அனைத்து இலங்கை வீரர்களுக்கும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<