டோக்கியோ பாராலிம்பிக்கில் ஒரு தங்கம், ஒரு வெண்கலம் என ஒரே நாளில் இரண்டு பதக்கங்களை வென்று இலங்கை வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஆறாவது நாளான இன்று (30) இலங்கை அணி இரண்டு பதக்கங்களை சுவீகரித்தது. இந்த இரண்டு பதக்கங்களும் ஈட்டி எறிதல் போட்டியில் கிடைக்கப் பெற்றமை சிறப்பம்சமாகும்.
இதன்படி, ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் பிரியன்த ஹேரத் F46 பிரிவில் தங்கப் பதக்கத்தையும், சமித்த துலான் F64 பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றுக்கொண்டனர்.
தங்க மகன் தினேஷ்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் பங்குகொண்ட தினேஷ் பிரியன்த ஹேரத், 67.79 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து புதிய உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
பாராலிம்பிக் வரலாற்றில் இலங்கைக்கு கிடைத்த முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.
போட்டியின் முதலாவது முயற்சியிலேயே 62.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து முன்னிலைபெற்ற தினேஷ், 2ஆவது முயற்சியில் 62.19 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்தார்.
இதனையடுத்து மூன்றாவது முயற்சியில் 67.79 மீட்டர் தூரத்தை வீசிய அவர், புதிய உலக சாதனை படைத்தார்.
பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கம் வென்றார் தினேஷ்
முன்னதாக இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா 2016 ரியோ ஒலிம்பிக்கில் நிகழ்த்திய உலக சாதனையை (63.97 மீட்டர்) நான்கு மீட்டரால் தினேஷ் முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, நான்காவது முயற்சியில் 62.06 மீட்டர் தூரத்தை தினேஷ் பதிவுசெய்தாலும், தினேஷின் 5ஆவது முயற்சி தகுதிநீக்கம் செய்யப்பட்டது.
இறுதியில் தன்னுடைய அதிகபட்சமான 67.79 மீட்டர் தூரத்துடன் இலங்கை வீரர் தினேஷ் பிரியன்த தங்கப் பதக்கத்தை வென்றார்.
தினேஷ் பிரியன்த ஹேரத் இதற்குமுன் 2016 ரியோ பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ரியோ பாராலிம்பிக்கில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, 64.35 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்து வெள்ளிப் பதக்கத்தை வென்றதுடன், சக நாட்டவரான சுந்தர் சிங் குர்ஜார் (64.01 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
சமித்தவுக்கு முதல் பதக்கம்
அதேபோன்று, இன்று இலங்கைக்கான இரண்டாவது பதக்கத்தை சமித்த துலான் கொடிதுவக்கு பெற்றுக்கொடுத்தார். இன்று மாலை நடைபெற்றது இந்தப் போட்டியில் இலங்கை சார்பில் சமித்த துலானும், சம்பத் ஹெட்டியாரச்சியும் பங்குபற்றினர்.
நான்கு வகையான குறைபாடுகளை உடைய F42, F44, F63, F64 ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 9 வீரர்கள் F64 பிரிவுக்கான போட்டியில் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன், இந்த நான்கு பிரிவுகளுக்குமான வீரர்கள் ஒரு தங்கப் பதக்கத்துக்காக போட்டியிடுகின்ற போதிலும், சாதனைகள் நான்கு பிரிவுகளுக்கும் வெவ்வேறாக பதிவுசெய்யப்டுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Photos: Tokyo Paralympic Games 2020 – Day 3
இதன்படி, ஆறு சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதலாவது முயற்சியில் 62.11 மீற்றர் தூரத்தையும், 4ஆவது முயற்சியில் 65.11 மீட்டர் தூரத்தையும் எறிந்த சமித்த, லண்டன் 2012 பாராலிம்பிக்கில் F44 பிரிவில் சீனாவின் மிங்ஜிகாஓவினால் நிலைநாட்டப்பட்டிருந்த 58.53 மீட்டர் என்ற முன்னைய பராலிம்பிக் சாதனையை முறியடித்து இப் பிரிவுக்கான புதிய பாராலிம்பிக் சாதனையை நிலைநாட்டினார்.
இதன்படி, 59.81, 59.81, 63.49, 65.61, 61.64 என 5ஆவது முயற்சிவரை சமித்த துலான் வெள்ளிப் பதக்கத்துக்கான இரண்டாவது இடத்தில் இருந்தார்.
ஆனால், சமித்தவுக்கு பலத்த போட்டியைக் கொடுத்த அவுஸ்திரேலிய வீரர் மைக்கல் புரியன், ஆறாவதும், கடைசியுமான முயற்சியில் 66.29 மீட்டர் தூரம் எறிந்து இரண்டாம் இடத்துக்கு முன்னேறி வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டார். இது குறித்த பிரிவுக்கான உலக சாதனையாகவும் பதிவாகியது.
எனவே, சமித்த துலானுக்கு வெள்ளிப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு துரதிஷ்டவசமாக கடைசி நேரத்தில் தவறிப்போனது. இதன்படி, ஆண்களுக்கான F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 மீட்டர் தூரத்தைப் பதிவு செய்த சமித்த துலான் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, இந்தியாவின் சந்தீப் சுமித் 68.55 மீட்டர் தூரத்துக்கு ஈட்டியை எறிந்து F64 பிரிவுக்கான உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
குறித்த போட்டியில் அவர் மேற்கொண்ட 3 முயற்சிகளிலும், அவரது சொந்த உலக சாதனையை முறியடித்திருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
இதுஇவ்வாறிருக்க, இப்போட்டியில் பங்குபற்றிய மற்றொரு இலங்கையரான சம்பத் ஹெட்டியாரச்சி, தனது 3 முயற்சிகளிலும் 50 மீட்டரை எட்டத் தவறியதால் தொடர்ந்து போட்டியிடும் தகுதியை இழந்தார்.
இதனால் 10 பேர் பங்குகொண்ட இந்தப் போட்டியில் 9ஆவது இடத்தை அவர் பெற்றுக்கொண்டார்.
எனவே, டோக்கியோ பாராலிம்பிக்கின் ஆறாவது நாளான இன்று இலங்கைக்கு வெற்றிகரமான நாளாக அமைந்ததுடன், பதக்கப் பட்டியலில் 45ஆவது இடத்தையும் பெற்றுக்கொண்டது.
>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<