டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் அபார ஆற்றல்

2020 Tokyo Paralympics

287

ஜப்பானில் நடைபெற்று வருகின்ற டோக்கியோ 2020 பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் 3ஆம் நாளான இன்றைய தினம் இலங்கை சார்பாக மூன்று வீரர்கள் போட்டிளில் பங்குபற்றியிருந்தனர்.

ஆண்களுக்கான வில்வித்தைப் போட்டியில் சம்பத் பண்டார, ஆண்களுக்கான ஒற்றையர் படகோட்டப் போட்டியில் மஹேஷ் ஜயகொடி மற்றும் ஆண்களுக்கான சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியில் சுரேஷ;; தர்மசேன ஆகியோர் களிமிறங்கினர்.

இன்று காலை நடைபெற்ற ஆண்களுக்கான PR1 பிரிவு ஒற்றையருக்கான இரட்டை துடுப்புப் படகோட்டப் போட்டியில் மஹேஷ் ஜயகொடி பங்குகொண்டார்.

ஆறு வீரர்கள் பங்குகொண்ட இரண்டாவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய அவர், கடைசி இடத்தைப் பெற்றார்.

இப்போட்டியை நிறைவு செய்ய மஹேஷ் ஜயகொடி எடுத்துக்கொண்ட நேரம் 12 நிமிடங்கள், 16.80 செக்கன்களாகும்.

எனவே, அவரது சிறந்த நேரப் பெறுதியான 10 நிமிடங்கள், 30.00 செக்கன்களை நெருங்க முடியாமல் போனமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எதுஎவ்வாறாயினும், நாளை நடைபெறவுள்ள ஆண்கள் PR1 ஒற்றையருக்கான இரட்டைத் துடுப்பு படகோட்டத்தில் ரெப்சேஜ் (Repechage) எனும் மறுசுழற்சி தகுதிகாண் சுற்றில் போட்டியிட மஹேஷ் ஜயகொடி தகுதிபெற்றார்.

இப் போட்டியை 9 நிமிடங்கள், 56.47 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்ற யூக்ரெய்ன் நாட்டு வீரர் ரோமன் போலியாஸ்கி A பிரிவு இறுதிப் போட்டியில் நேரடியாக பங்குபற்ற தகுதிபெற்றார்.

அதேபோல, முதலாவது தகுதிகாண் போட்டியில் முதலிடத்தை பிரேசில் நாட்டு வீரர் ரெனே கெம்ப்பொஸ் பெரெய்ரா (9 நிமிடங்கள் 57.59 செக்.) பெற்று A பிரிவு இறுதிப் போட்டிக்கு நேரடி தகுதிபெற்றார்.

இதனிடையே, 12 வீரர்கள் போட்டியிட்ட இரண்டு தகுதிகாண் போட்டிகளின் முடிவில் மஹேஷ் ஜயகொடிக்கு கடைசி இடத்தையே பெற்றுக்கொள்ள முடிந்தது.

பாராலிம்பிக் படகோட்டத்தில் பங்கேற்கும் ஒரே ஆசிய வீரர் மஹேஷ் ஜயகொடி

இதன்படி, இந்த இரண்டு தகுதிகாண் போட்டிகளிலும் 2ஆம் இடத்திலிருந்து 6ஆம் இடம்வரை பெற்றவர்கள் நாளை நடைபெறவுள்ள இரண்டு ரெப்சேஜ் போட்டிகளில் தரநிலை வரிசைப்படி பிரிக்கப்பட்டு போட்டியிடுவர்.

இந்த இரண்டு போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் மேலும் நால்வர் A பிரிவு பதக்க நிலை இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெறுவர்.

மற்றைய 6 வீரர்களும் தரநிலை வரிசைப்படுத்தலுக்கான B பிரிவு இறுதிப் போட்டியில் பங்குபற்றுவார்கள்.

முதல் சுற்றில் சுரேஷ் தோல்வி

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான ஒற்றையர் சக்கர இருக்கை டென்னிஸ் போட்டியின் முதலாவது சுற்றில் பங்குகொண்ட இலங்கை வீரர் சுரேஷ் தர்மசேன தோல்வி அடைந்தார்.

இதன்படி, WT பிரிவுக்கான போட்டியில் சிலி வீரர் அலெக்ஸாண்டர் கெட்டல்டோவை சுரேஷ் தர்மசேன எதிர்கொண்டார்.

புரபரப்பாக நடைபெற்ற முதலாவது செட்டின் ஒரு கட்டத்தில் இருவரும் தலா 3 புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தனர்.

ஆனால் அதன் பின்னர் தடுமாற்றத்தை சந்தித்த ரஞ்சன் தொடர்ச்சியாக 3 புள்ளிகளைக் விட்டுக்கொடுத்து 3 – 6 என தோல்வி அடைந்தார்

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டில் 1 – 3 என பின்னிலையில் இருந்த சுரேஷ், அதன் பின்னர் அபாராமாக விளையாடி புள்ளிகள் நிலையை 4 – 4 என சமப்படுத்தினார். எனினும் கடைசி 2 புள்ளிகளை விட்டுக்கொடுத்ததால் 4 – 6 என தோல்வி அடைந்தார்.

இதன்படி, குறித்த போட்டியில் சுரேஷ் தர்மசேன 2 நேர் செட்களில் தோல்வி அடைந்தார்.

பாராலிம்பிக் பதக்க கனவுடன் உள்ள சுரேஷ்

இந்தத் தோல்வியுடன் சுரேஷ் தர்மசேனவின் பாராலிம்பிக் பதக்க எதிர்பார்ப்பு ஏமாற்றத்துடன் நிறைவுக்கு வந்தது.

சம்பத் பண்டாரவுக்கு 23ஆவது இடம்

பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான தனிநபர் ரீகேர்வ் (Recurve) பகிரங்க தரவரிசைப்படுத்தல் வில்வித்தைப் போட்டியில் சம்பத் பண்டார பங்குபற்றினார்

31 வீரர்கள் பங்குபற்றிய தரவரிசைப்படுத்தல் போட்டியில் சம்பத் பண்டார 589 புள்ளிகளைப் பெற்று ஒட்டுமொத்த நிலையில் 23ஆம் இடத்தைப் பெற்றார்.

12 சுற்றுக்களைக் கொண்ட இந்தப் போட்டியின் முதலாவது பகுதிக்கான 6 சுற்றுகளில் தலா 6 முயற்சிகளில் 49, 49, 46, 47, 45, 53 என மொத்தமாக 289 புள்ளிகளைப் பெற்றுக்கொண்ட சம்பத் பண்டார, இரண்டாவது பகுதிக்கான 6 சுற்றுகளில் தலா 6 முயற்சிகளில் 47, 48, 52, 46, 51, 56 என மொத்தமாக 300 புள்ளிகளைப் பெற்றார். இதன்மூலம் ஒட்டுமொத்தமாக 589 புள்ளிகளை அவர் பெற்றுக்கொண்டார்.

இந்த இரண்டு பகுதிகளிலும் சம்பத் பண்டார 16 தடவகள் முழுமையான 10 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டதுடன், 27 தடவைகள் 9 புள்ளிகளைப் பெற்றார். இதில் ஏழு தடவைகள் மாத்திரமே அவருக்கு குறி தவறியது.

டோக்கியோ பாராலிம்பிக்கில் சாதிப்பார்களா இலங்கை நட்சத்திரங்கள்?

இதன்படி, தரவரிசைப்படுத்தல் நிலைகளின் பிரகாரம் 23ஆம் இடத்தைப் பெற்றுக்கொண்ட சம்பத் பண்டார, எதிர்வரும் செப்டெம்பர் 3ஆம் திகதி நடைபெறவுள்ள தகுதிநீக்கம் சுற்றுப் போட்டியில் இந்தியாவில் சக்காரா விவேக்கை எதிர்த்து போட்டியிடவுள்ளார்.

>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<