டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 3ஆவது நாளான இன்று (26) சாதனைகளையும் கடந்து உலகின் கவனத்தை ஈர்த்த பல முக்கிய வரலாற்று சாதனைகளும், சம்பவங்களும் அரங்கேறின.
இதில் இம்முறை ஒலிம்பிக்கில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானின் 13 வயது இளம் வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கப் பதக்கம் வென்று உலக சாதனை படைக்க, மறுபுறத்தில் குவைத் நாட்டின் 58 வயதான அப்துல்லாஹ் அல்–ரஷிதி ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ‘ஸ்கீட்‘ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தோல்வியுடன் ஒலிம்பிக்கிலிருந்து விடைபெற்றார் நிலூக கருணாரத்ன
அதுமாத்திரமின்றி, ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது தங்கப் பதக்கத்தை பிலிப்பைன்ஸ் இன்று பெற்றுக்கொண்டது. அந்த நாட்டின் சார்பில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் களமிறங்கிய ஹைடலன் டியாஸ் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இதனிடையே, கடந்த இரண்டு நாட்களாக பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த சீனாவைப் பின்தள்ளி முறையே ஜப்பான், அமெரிக்கா நாடுகள் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டன.
13 வயதில் ஒலிம்பிக் தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் முதன்முதலாக அறிமுகம் செய்யப்பட்ட பெண்களுக்கான அங்குரார்ப்பண ஸ்கேட்போர்டிங் போட்டியில் ஜப்பானின் 13 வயது வீராங்கனை மோமிஜி நிஷியா தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்ற மூன்றாவது வீராங்கனையாக அவர் இடம்பிடித்தார்.
தங்கம் வென்றபோது அவரது வயது 13 வருடங்கள், 330 நாட்களாகும். அதேவேளை, மிகக் குறைந்த வயதில் ஜப்பானுக்கு ஒலிம்பிக் தங்கம் வென்றுகொடுத்தவர் என்ற சாதனைக்கு நிஷியா உரித்தானார்.
முதலிரண்டு இடங்களில் அமெரிக்க ‘டைவிங்‘ வீராங்கனை மார்ஜோரி ஜெஸ்ட்ரிங் (13 வருடங்கள், 268, 1936 பேர்லின் ஒலிம்பிக்), ஜேர்மனி படகு போட்டி (‘காக்ஸ் பேர்ஸ்‘) வீரர் கிளாஸ் ஜெர்டா (13 வருடங்கள், 283 நாட்கள், 1960 ரோம் ஒலிம்பிக்) உள்ளனர்.
ஏரியேக் பார்க்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான ஸ்கேட்போர்டிங் போட்டியில் 7 வீராங்கனைகள் பங்குபற்றியிருந்ததுடன், மொத்தமாக 15.26 புள்ளிகளைப் பெற்று நிஷியா தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
Photos: Day 3 – 2020 Tokyo Olympic Games
இந்தப் போட்டியில் பிரேசிலைச் சேர்ந்த 13 வருடங்கள், 203 நாட்கள் வயதுடைய ரேசா லீல் 2.31 புள்ளிகள் வித்தியாசத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஒருவேளை இவர் வெற்றிபெற்றிருந்தால் ஒலிம்பிக் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் தங்கம் வென்றவர் என்ற சாதனையை ரேசா லீல் தனதாக்கிக் கொண்டிருப்பார்.
இதனிடையே, இப்போட்டியில் 16 வயதுடைய ஜப்பான் வீராங்கனை ஃபியூனா நக்காயாமா வெண்கலப் பதக்கத்தை வென்றார்.
எனவே, ஒலிம்பிக் வரலாற்றில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை ஒரே போட்டியில் வென்ற இளவயது வீரர்கள் என்ற பெருமையையும் இந்த வீராங்கனைகள் பெற்றுக்கொண்டனர்.
முன்னதாக ஆண்களுக்கான அங்குரார்ப்பண ஒலிம்பிக் ஸ்கேட்போர்டிங் போட்டியிலும் ஜப்பான் தான் முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
58 வயதில் வெண்கலம்
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் ‘ஸ்கீட்‘ பிரிவில் குவைத் நாட்டைச் சேர்ந்த 58 வயதான அப்துல்லாஹ் அல்–ரஷிதி வெண்கலப் பதக்கம் வென்றார்.
தொடர்ச்சியாக ஏழாவது முறையாக (1996–2020) ஒலிம்பிக்கில் பங்கேற்ற இவர், தொடர்ந்து 2ஆவது முறையாக பதக்கம் வென்றார்.
ரியோ ஒலிம்பிக்கில் (2016) குவைத் பங்கேற்க சர்வதேச ஒலிம்பிக் சங்கம் தடை விதித்திருந்ததால், ஒலிம்பிக் கொடியின் கீழ் களமிறங்கிய இவர், வெண்கலம் வென்றார்.
இதுகுறித்து அல் ரஷிதி கூறுகையில், ஒலிம்பிக்கில் மீண்டும் வெண்கலம் வென்றது மகிழ்ச்சி. அடுத்த ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
ஒலிம்பிக்கில் பிலிப்பைன்ஸுக்கு முதல் தங்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 55 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் பிலிப்பபைன்ஸ் வீராங்கனை ஹைடலன் டியாஸ் தங்கப் பதக்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
இப்போட்டியில், 224 கிலோ எடையைத் தூக்கி தங்க பதக்கத்தை வென்றது மட்டுமல்லாமல், இரண்டு ஒலிம்பிக் சாதனைகளையும் படைத்தார்.
அதுமாத்திரமின்றி, ஒலிம்பிக் வரலாற்றில் பிலிப்பைன்ஸுக்கு முதலாவது தங்கப் பதக்கத்தையும் வென்று கொடுத்தார்.
ஜிம்னாஸ்டிக்கில் சாதித்த ரஷ்யா
டோக்கியோ ஒலிம்பிக் ஆண்கள் ஜிம்னாஸ்டிக் இறுதிப் போட்டியில் ரஷ்யா தங்கப் பதக்கம் வென்றது.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான ஜிம்னாஸ்டிக் இறுதிச் சுற்று இன்று நடைபெற்றது. இதில் அணிகள் பிரிவில் நிகிதா நகோர்னி தலைமையிலான ரஷ்ய அணி தங்கப் பதக்கத்தை தட்டிச்சென்றது.
ஒலிம்பிக் இரண்டாம் நாள் முடிவில் பல சாதனைகள்
இதன்மூலம் 1996-க்குப் பிறகு அதாவது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஜிம்னாஸ்டிக்கில் ரஷ்யா தங்கம் வென்று சாதனை படைத்தது.
அதுமாத்திரமின்றி, ஜிம்னாஸ்டிக்கில் ஆசிய நாடுகளில் வெற்றிக்கு முதல்முறையாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் முதலிடத்தை பிடித்த ரஷ்யா 262.500 புள்ளிகளை எடுத்தது. இரண்டாவதாக ஜப்பான் 262.397 புள்ளிகள் பெற்று வெள்ளி தங்கம் வென்றது. 261.397 புள்ளிகள் பெற்ற சீனா வெண்கலம் வென்றது.
பிரிட்டனுக்கு முதல் தங்கம்
2020 டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் முதல் தங்கத்தை பிரித்தானியா இன்று வென்றது.
நீச்சல் போட்டியில் பிரித்தானியா வீரர் ஆடம் பேட்டி வெற்றி பெற்று தங்கம் வென்றார். உலகில் தற்போது தலைசிறந்த நீச்சல் வீரர்களில் ஒருவராக ஆடம் பேட்டி வலம்வந்து கொண்டு இருக்கிறார்.
100 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் பிரிவில் உலகின் பல்வேறு சர்வதேச போட்டிகளில் ஆடம் பேட்டி சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக்கில் இலங்கைக்கு பெருமை சேர்த்த மில்கா
இறுதியாக 2016 ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியில் தங்கம் வென்றார். தற்போது தங்கப் பதக்கத்தை தக்க வைத்து சாதனை படைத்துள்ளார்.
இன்று நடைபெற்ற போட்டியில் ஆடம் பேட்டி 100 மீட்டர் பின்நோக்கிய நீச்சல் போட்டியை 57.37 செக்கன்களில் நீந்தி முடித்து சாதனை படைத்தார்.
பதக்கப் பட்டியலில் ஜப்பானுக்கு முதலிடம்
டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் ஜப்பான் முதலிடத்திலும், அமெரிக்கா 2ஆவது இடத்திலும், சீனா 3ஆவது இடத்திலும் உள்ளது.
இதனிடையே, ஒலிம்பிக்கின் 3ஆவது நாள் நிறைவடையும் போது 48 நாடுகள் ஏதாவது ஒரு பதக்கத்தை வென்று பதக்கப்பட்டியலில் இடம்பிடித்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…