ஜப்பானில் நடைபெற்றுவருகின்ற 32ஆவது கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று (24) நடைபெற்ற போட்டிகளில் இலங்கை வீரர்களான டெஹானி எகொடவெல, அனிக்கா கபூர் மற்றும் நிலூக கருணாரத்ன ஆகியோர் முதல் சுற்றுடன் ஏமாற்றம் அளித்தனர்.
டோக்கியோ ஒலிம்பிக் விழா கோலாகலமாக ஆரம்பமாகியது
இதில் பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் கலந்துகொண்ட அனிக்கா கபூர் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார். எனினும், அரை இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கான காலத்தை அவரால் பதிவுசெய்ய முடியாமல் போனது.
தகுதிச்சுற்றில் டெஹானி 49ஆவது இடம்
இம்முறை ஒலிம்பிக்கின் முதல் தங்கப் பதக்கத்துக்கான போட்டியாக பெண்களுக்கான 10 மீட்டர் எயார் ரைபல் துப்பாக்கி சுடுதல் போட்டி இன்று காலை நடைபெற்றது.
இதன் தகுதிச்சுற்றில் பங்குபற்றிய 50 வீராங்கனைகளில் இலங்கையின் டெஹானி எகொடவெல, 611.5 புள்ளிகளுடன் 49ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
எவ்வாறாயினும் ஒலிம்பிக்கில் முதல் தடவையாக பங்குபற்றிய டெஹானி, தகுதிச்சுற்றில் மிகத்திறமையாகப் போட்டியிட்டே இறுதிச் சுற்றுக்கான வாய்ப்பை தவறவிட்டார்.
இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான எயார் ரைபல் குழு நிலைப் போட்டியில் டெஹானி வெண்கலப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனிக்காவுக்கு இரண்டாமிடம்
இன்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியின் முதல் சுற்றில் கலந்துகொண்ட அனிக்கா கபூர், போட்டியை 1.05.33 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
Photos : Opening Ceremony- 2020 Tokyo Olympic Games
எனினும், 33 பேர் கலந்துகொண்ட இப்போட்டியில் அனிக்கா கபூர் ஒட்டுமொத்த நிலையில் 32ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதால் 16 வீரர்கள் பங்குபற்றும் அரை இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் வாய்ப்பை இழந்தார்.
17 வயதான அனிக்கா, இறுதியாக 2019இல் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டு விழாவில் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிலூகவுக்கு தோல்வி
இலங்கை சார்பாக மூன்றாவது தடவையாக ஒலிம்பிக்கில் களமிறங்கிய நிலூக கருணாரத்ன, இன்று இரவு நடைபெற்ற ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு பெட்மிண்டன் போட்டிகளின் முதல் சுற்று ஆட்டத்தில் களமிறங்கினார்.
உலக பெட்மிண்டன் தரவரிசையில் 117ஆவது இடத்தில் உள்ள நிலூக, உலக தரவரிசையில் 10ஆவது இடத்தில் உள்ள சீன தாய்ப்பே வீரர் சூ வெய் வேனை எதிர்த்து போட்டியிட்டார்.
இந்தப் போட்டியின் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தியிருந்த சீனா தாய்ப்பே வீரர் வெய் வேன், 21-12, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
17 தடவைகள் இலங்கையின் பெட்மிண்டன் சம்பியனாக மகுடம் சூடிய 36 வயதான நிலூக, இறுதியாக 2012 லண்டல் ஒலிம்பிக்கில் உலக தரவரிசையில் 8ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் கொனிசிக்கோவை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதுஎவ்வாறாயினும், நிலூக கருணாரத்னவின் கடைசி ஒலிம்பிக் போட்டி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பெட்மிண்டன் தரவரிசைக்காக நடைபெறவுள்ள போட்டியில் எதிர்வரும் திங்கட்கிழமை அயர்லாந்து வீரர் என்குயன் நாத்தை நிலூக கருணாரத்ன சந்திக்கவுள்ளார்.
இதேவேளை, டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் இரண்டாவது நாளான நாளை காலை பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில் மில்கா கெஹானி களமிறங்கவுள்ளார்.
மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…