ஜப்பானில் நடைபெற்றுவந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இன்றுடன் (08) நிறைவுக்கு வந்ததுடன், 39 தங்கப் பதக்கங்களை வென்ற அமெரிக்கா 32ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகளில் முதலிடத்தை பிடித்துக்கொண்டது.
நேற்றைய தினத்தில் 38 தங்கங்களுடன் முதலிடத்தை வகித்த சீனா, இறுதி நாளான இன்று, எந்தவொரு தங்கப் பதக்கங்களையும் பெற்றிருக்காத நிலையில், முதலிடத்தை இழந்துள்ளது. அமெரிக்கா இன்றைய தினம் பெண்களுக்கான கூடைப்பந்தாட்டம், குத்துச்சண்டை மற்றும் உள்ளக அரங்கு சைக்கிளோட்டம் என்பவற்றில் தங்கங்களை வென்று முதலிடத்தை பிடித்துக்கொண்டது.
109 ஆண்டுகால ஒலிம்பிக்கில் புது வரலாறு படைத்த இத்தாலி அணி
அதன்படி, 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்கா 39 தங்கம், 41 வெள்ளி மற்றும் 33 வெண்கலம் என 113 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், சீனா 38 தங்கம், 32 வெள்ளி மற்றும் 18 வெண்கலம் என 88 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் 27 தங்கம், 14 வெள்ளி மற்றும் 17 வெண்கலம் என 58 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டது.
குறித்த இந்த மூன்று நாடுகளுக்கு அடுத்தப்படியாக, பிரித்தானியா 22 தங்கம், ரஷ்ய ஒலிம்பிக் குழு 20 தங்கம் மற்றும் அவுஸ்திரேலியா 17 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன.
இவ்வாறான நிலையில் மிகவும் கோலகலமான கொண்டாட்டங்களுடன், ஆரம்பமான 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கொவிட்-19 தொற்றை கடந்து வெற்றிகரமான நிறைவுக்கு வந்தது. டோக்கிய ஒலிம்பிக்கின் நிறைவும், கோலாகல கொண்டாட்டங்கள், இசைநிகழ்ச்சிகள் என அரங்கேற்றப்பட்டு ஒலிம்பிக் கொடி இறக்கப்பட்டது.
அத்துடன், 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பரிஸில் நடைபெறவுள்ள நிலையில், ஒலிம்பிக் கொடியானது, பரிஸின் மேயரிடம் ஒப்படைக்கப்பட்டு, 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் இனிதே நிறைவுபெற்றது.
பெண்கள் கூடைப்பந்தாட்டத்தில் அமெரிக்காவுக்கு தங்கம்
அமெரிக்கா மற்றும் ஜப்பான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற கூடைப்பந்தாட்ட இறுதிப் போட்டியில், ஜப்பான் அணியை 90-75 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா தங்கப் பதக்கத்தை வென்றது.
முதல் கால் பகுதியை அமெரிக்கா 23-14 என இலகுவாக கைப்பற்ற, அடுத்த கால்பகுதி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. எனினும், தொடர்ந்தும் முன்னேற்றத்தை காட்டிய அமெரிக்க மகளிர் அணி இரண்டாவது மற்றும் மூன்றாவது கால் பகுதிகளை முறையே 27-25, 25-17 என கைப்பற்றியது. இறுதி கால்பகுதியை 19-15 என ஜப்பான் கைப்பற்றிய போதும், அமெரிக்க அணி மொத்தமாக 90-75 என போட்டியின் வெற்றியை உறுதிசெய்தது.
ஒலிம்பிக் மெய்வல்லுனரில் முதன்முறை தங்கம் வென்ற இந்தியா
ஆண்களுக்கான மரதனில் தங்கம் வென்ற கென்யா
டோக்கியோ ஒலிம்பிக்கின் இறுதிநாளான இன்று, முக்கிய நிகழ்வான ஆண்களுக்கான மரதன் ஓட்டம் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான மரதனில் உலக சாதனையை தம்வசம் வைத்திருக்கும் கென்யாவின் கிப்சோஜ் எலியட் தங்கப் பதக்கத்தை வென்றார்.
இவர் போட்டித்தூரத்தை 2 மணித்தியாலயம் 08.38 நிமிடங்களில் நிறைவுசெய்து தங்கம் வென்றதுடன், நெதர்லாந்து வீரர் நாகீ அப்தி 2 மணித்தியாலயம் 09.58 நிமிடங்களில் போட்டியை நிறைவுசெய்து வெள்ளிப் பதக்கத்தையும், பெல்ஜியத்தின் அப்தி பஷீர் 2 மணித்தியாலயம் 10.00 நிமிடங்களில் போட்டித்தூரத்தை நிறைவுசெய்து வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
பெண்களுக்கான கரப்பந்தாட்டத்தில் தங்கம் வென்ற அமெரிக்கா
டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று நடைபெற்ற பெண்களுக்கான கரப்பந்தாட்ட இறுதிப் போட்டியில், பிரேசில் அணியை 3-0 என வீழத்திய அமெரிக்க மகளிர் அணி தங்கப் பதக்கத்தை வென்றது.
போட்டி முழுவதும் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்திய அமெரிக்க அணி 25-21, 25-20 மற்றும் 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் மூன்று செட்களையும் கைப்பற்றி வெற்றியை தமதாக்கிக்கொண்டது. போட்டியின் இரண்டாமிடத்தை பெற்ற பிரேசில், வெள்ளிப் பதக்கத்தை வெற்றிக்கொண்டது.
அதேநேரம், வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில், கொரிய குடியரசு அணியை 3-0 என வீழ்த்திய சேர்பியா, பதக்கத்தை வென்றது. போட்டியின் மூன்று செட்களையும், 25-18, 25-15 மற்றும் 25-15 என சேர்பிய அணி வெற்றிக்கொண்டது.
>>மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க<<