உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த உலகின் அதிவேக வீரர் யார் என்பதை தீர்மானிக்கும் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டி உள்ளிட்ட பல விறுவிறுப்பான போட்டிகள் நேற்று டோக்கியோ ஒலிம்பிக்கில் நிறைவுக்கு வந்தன.
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளின் 3ஆவது நாளான நேற்று (01) நான்கு போட்டி நிகழ்ச்சிகளுக்கான இறுதிப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் நேற்று காலை பெண்களுக்கான பரிதி வட்டம் எறிதல் இறுதிப் போட்டி நடைபெற்றதுடன், மாலை வேளையில் ஆண்களுக்கான உயரம் பாய்தல், பெண்களுக்கான முப்பாய்ச்சல் மற்றும் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டி என்பன நடைபெற்றன.
மின்னல் வேக ஜேகப்ஸ்
நேற்று மாலை நடைபெற்ற ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியைச் சேர்ந்த ஜேகப்ஸ் 9.80 செக்கன்களில் ஓடி முடித்து தங்கப்பதக்கத்தை சுவீகரித்தார்.
125 ஆண்டு ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக உலகின் அதிவேக வீரராக இத்தாலி நாட்டைச் சேர்ந்த 26 வயதான மார்ஷெல் ஜேகப்ஸ் மகுடம் சூடினார்.
இதன்மூலம், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் இத்தாலியின் தேசிய சாதனை மற்றும் ஐரோப்பிய சாதனைகளை முறியடித்த ஜேகப்ஸ், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் ஜமைக்கா மற்றும் அமெரிக்காவின் ஆதிக்கத்துக்கு இன்று முற்றுப்புள்ளி வைத்தார்.
அதுமாத்திரமின்றி, இவர் இத்தாலியின் முன்னாள் நீளம் பாய்தல் சம்பியன் என்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஜேகப்ஸ் பிறந்தார். இவரது தாயார் இத்தாலியைச் சேர்ந்தவர். பத்து வயதில் மெய்வல்லுனர் விளையாட்டில் காலடி வைத்த இவர், ஆரம்பத்தில் நீளம் பாய்தல் போட்டியில் பங்கேற்றார்.
இத்தாலி மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் (2016) நீளம் பாய்தலில் தங்கப் பதக்கம் வென்றார். அதன்பின், 100 மீட்டர் ஓட்டத்தின் மீது இவரது பார்வை திரும்பியது. கடந்த மே மாதம் இத்தாலியில் நடைபெற்ற 100 மீட்டர் ஓட்டத்தில் இலக்கை முதன்முறையாக 9.95 செக்கன்களில் கடந்து மிரள வைத்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் நான்கு முறை (2018, 2019, 2020, 2021) இத்தாலியின் தேசிய சம்பியன் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
இதனிடையே, 2016 ரியோ ஒலிம்பிக்கில் 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய அமெரிக்கா வீரர் பிரெட் கேர்லி, இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். இவர் போட்டித் தூரத்தை 9.84 செக்கன்களில் நிறைவுசெய்தார். இதனிடையே, கனடாவின் அன்ட்ரி டி கிரேஸ் (9.89 செக்கன்கள்) வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தார்.
இதனிடையே, இம்முறை ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜமைக்காவின் யொஹான் பிளேக் மற்றும் ட்ரெவின் ப்ரோமல், தென்னாபிரிக்காவின் சிம்பினி, அமெரிக்காவின் ரொன்னி பாக்கர் ஆகிய வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
அதேபோல, ஏழு ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பிறகு முதல் முறையாக இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 100 மீட்டர் இறுதிப் போட்டியில் எந்தவொரு ஜமைக்கா நாட்டைச் சேர்நத் வீரர்களும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>> 33 ஆண்டு ஒலிம்பிக் சாதனையை முறியடித்த எலைன் தோம்சன்
நியூசிலாந்து வீராங்கனை வாலெரி கசநிதா ஆடம்ஸ் (36 வயது) ஒலிம்பிக் அரங்கில் ஐந்து தடவைகள் குண்டு போடுதல் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாக புதிய வரலாறு படைத்தார். இதில் 2008, 2012இல் தங்கம், 2016இல் வெள்ளிப் பதக்கத்தை வென்ற இவர், இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனால் தொடர்ந்து நான்கு ஒலிம்பிக்கில் ஒரே விளையாட்டில் (குத்துச்சண்டை) பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என சாதனை படைத்தார். அப்போது தனது மகன், மகளின் போட்டோவை காட்டி மகிழ்ந்தார்.
வெனிசுவேலா வீராங்கனை உலக சாதனை
பெண்களுக்கான முப்பாய்ச்சலில் 25 ஆண்டுகள் நீடித்த உலக சாதனையை முறியடித்து வெனிசுவேலாவின் 25 வயது வீராங்கனை யுலிமர் ரொஜர்ஸ் தங்கப் பதக்கம் வென்றார்.
நேற்று மாலை நடைபெற்ற பெண்களுக்கான முப்பாய்ச்சல் இறுதிப் போட்டியின் முதல் வாய்ப்பில் 15.39 மீட்டர் தூரத்தைப் பாய்ந்து 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் கெமரூன் நாட்டு வீராங்கனை எம்பாங்கோவின் நிகழ்த்திய ஒலிம்பிக் சாதனையை யுலிமர் முறியடித்தார்.
தொடர்ந்து போட்டியின் மூன்றாவதும், இறுதியுமான வாய்ப்பில் 15.67 மீட்டர் தூரம் பாய்ந்து புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். முன்னதாக 1995இல் உக்ரைன் வீராங்கனை இனெஸ்ஸா க்ரவெட்ஸ் நிலைநாட்டிய உலக சாதனையை 25 ஆண்டுகளுக்குப் பிறகு யுலிமர் ரொஜர்ஸ் முறியடித்தார்.
இதனிடையே, குறித்த போட்டியில் போர்த்துக்கல் வீராங்கனை பெட்ரிக்லா மமோனா (15.01 மீட்டர்) வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்பெய்னின் அனா பிலிடெய்ரோ (14.87 மீட்டர்) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
உயரம் பாய்தலில் இரட்டை தங்கங்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கின் 9ஆவது நாளான நேற்றைய தினம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த மற்றுமொரு போட்டி தான் ஆண்களுக்கான உயரம் பாய்தல்.
இப்போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சம்பியனான கட்டாரின் முடாஸ் பர்ஷிம், ஐரோப்பிய கனிஷ்ட சம்பியனான இத்தாலியின் கியள்மார்கோ தம்பெரய் ஆகிய இருவரும் 2.37 மீட்டர் உயரத்தை தாவி சமநிலையில் இருந்தனர்.
இறுதியில் போட்டியின் வெற்றியாளரைத் தீர்மானிப்பதற்கு போட்டியின் பிரதான நடுவர் குறித்த போட்டியில் முன்னிலை பெற்ற முடாஸ் பர்ஷிமிடம் அடுத்த சுற்று பாய்தலுக்கு போவதா அல்லது இருவருக்கும் தங்கப் பதக்கத்தை பகிர்ந்தளிப்பதா என வினவினார்.
அதற்கு அவர் அடுத்த சுற்று தேவையில்லை பதக்கத்தை பகிர்ந்தளிக்கும்படி தன்னுடைய மனிதாபிமான செயலை வெளிப்படுத்தினார். இறுதியில் இருவரும் வெற்றியாளர்கள் என அறிவிக்கப்பட்டனர்.
இதன்மூலம் ஒலிம்பிக் வரலாற்றில் உயரம் பாய்தலில் தங்கம் வென்ற இரண்டாவது இத்தாலி வீரராக தம்பெரய் இடம்பிடித்தார். முன்னதாக 1980 மொஸ்கோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான உயரம் பாய்தலில் சாரா சிமேனி தங்கப் பதக்கம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, குறித்த போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெலரூஸ் வீரர் மெக்சிம் நெடசெகு தட்டிச் சென்றார்.
டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகின் நான்காம் நிலை வீரரான ஜேர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷ்யாவின் கச்சானோவை 6–3, 6–1 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
ஏழு பதக்கங்களை வென்ற நீச்சல் மங்கை
ஒரே ஒலிம்பிக்கில் ஏழு பதக்கங்களை வென்ற முதலாவது நீச்சல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனையை அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை எம்மா மெக்கியோன் இன்று படைத்தார்.
நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 4x100 மீட்டர் மெட்லி அஞ்சலோட்ட நீச்சலில் நடப்பு சம்பியனான அமெரிக்காவை வீழ்த்தி அவுஸ்திரேலிய பெண்கள் அணி, புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தது.
ஏம்மா மெக்கியோன் தலைமையிலான அவுஸ்திரேலிய அணி போட்டித் தூரத்தை 3 நிமிடங்கள் 51.60 செக்கன்களில் கடந்தது.
27 வயதான எம்மா மெக்கியோன் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெறும் 7ஆவது பதக்கம் இதுவாகும். இம்முறை ஒலிம்பிக்கில் 50 மீட்டர் சாதாரண நீச்சல், 100 மீட்டர் சாதாரண நீச்சல், 4×100 மெட்லி அஞ்சலோட்டம், 4x100 சாதாரண அஞ்சலோட்டம் சாதாரண நீச்சல் ஆகியவற்றில் மெக்கியோன் தங்கம் வென்றார்.
கலப்பு இரட்டையர் 4x100 கலப்பு மெட்லி அஞ்சலோட்டம், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி, 4x200 சாதாரண நீச்சல் ஆகியவற்றில் வெண்கலப் பதக்கத்தையும் அவர் கைப்பற்றினார்.
அமெரிக்கா வீரருக்கு 5 தங்கங்கள்
டோக்கியோ ஒலிம்பிக்கில் அமெரிக்க நீச்சல் வீரர் கெலிப் டிரெஸ்சல் 5ஆவது தங்கப் பதக்கத்தை நேற்று சுவீகரித்தார்.
நேற்று நடைபெற்ற 50 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியை 21.07 செக்கன்களில் நிறைவுசெய்த டிரெஸ்சல், புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்றார்.
ஏற்னவே 100 மீட்டர் சாதாரண நீச்சல், 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல், 4x100 சாதாரண அஞ்சலோட்டம் மற்றும் 4x100 மெட்லி அஞ்சலோட்டம் ஆகிய போட்டிகளில் அவர் தங்கம் வென்றார்.
ஒட்டுமொத்தத்தில் ஒலிம்பிக்கில் டிரெஸ்சல் 6ஆவது தங்கத்தை கைப்பற்றினார். ரியோ ஒலிம்பிக்கில் அவர் 2 தங்கப் பதக்கங்களை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> Photos: Day 8 – 2020 Tokyo Olympic Games
இந்தியாவுக்கு இரண்டாவது பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் பெட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.
ஒலிம்பிக்கில் மகளிர் பெட்மிண்டன் பிரிவில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் பிவி சிந்து – சீனாவைச் சேர்ந்த ஹி பி ஜியா ஆகியோர் மோதினர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து முதல் செட்டை 21-13 என எளிதாக கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டை கைப்பற்ற இருவரும் கடுமையாக போராடினர்.
பிவி சிந்து புள்ளிகளில் முன்னிலை பெற்றாலும் நெருங்கி வந்தார் ஹி பி ஜியா. இதனால் இரண்டாவது செட் விறுவிறுப்பாக சென்றது. ஆனால் அற்புதமாக விளையாடிய பிவி சிந்து 21 – 15 என்ற கணக்கில் சீன வீராங்கனையை வீழ்த்தினார். இதனையடுத்து டோக்கியோ ஒலிம்பிக்கில் பெட்மிண்டனில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
2016 இல் ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பிவி சிந்து இம்முறை தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் டோக்கியோ ஒலிம்பிக்கின் அரை இறுதிப் போட்டியில் சிந்து தோல்வியடைந்ததார்.
>> டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆதிக்கம் செலுத்தும் சீன வீரர்கள்
ஒலிம்பிக் வரலாறு படைக்கவுள்ள கானா
ஒலிம்பிக் வரலாற்றில் ஆபிரிக்கா நாடான கானா முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை இன்று பெற்றுக்கொண்டது.
இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 52-57 கிலோ எடைப்பிரிவு குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் கொலம்பியாவின் டேவிட் செய்பர் அவிலாவை வீழ்த்திய கானா நாட்டு வீரர் சாமுவெல் டக்கியி அரை இறுதி சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
இதன்மூலம் 29 வருடகால கானாவின் ஒலிம்பிக் வரலாற்றில் முதலாவது ஒலிம்பிக் பதக்கத்தை சாமுவெல் உறுதி செய்தார்.
பதக்கப் பட்டியலில் சீனா தொடர்ந்து ஆதிக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் 9ஆவது நாள் நிறைவடையும் போது பதக்கப் பட்டியலில் சீனா 24 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தமாக 51 பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
அமெரிக்கா 20 தங்கம், 23 வெள்ளி, 16 வெண்கலம் என 59 பதக்கங்கள் வென்று 2ஆவது இடத்தில் உள்ளது. ஜப்பான் 17 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 3ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.
அவுஸ்திரேலியா 14 தங்கம், 3 வெள்ளி, 14 வெண்கலம் என 31 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது.
>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<