ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்ற டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏழாவது நாளான இன்றைய தினம் (30) மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகின.
இதில் ஆண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் எத்தியோப்பியாவின் செலமன் பரேகா, உலக சம்பியன் உகண்டாவின் ஜோஸுவாவை (27 நிமி. 43.22 செக்.) வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
இதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் மெய்வல்லுனரில் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்ற வீரராக செலமன் பரேகா இடம்பிடித்தார்.
இந்தப் போட்டியில் உகண்டா நாட்டு வீரர்களான ஜோஸுவா செப்டிகே வெள்ளிப் பதக்கத்தையும், ஜேகப் கிப்லிமோ வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி
ஒலிம்பிக் ஆடவர் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நோவாக் ஜோகோவிச் ஜேர்மனி வீரரிடம் தோல்வி அடைந்தார்.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியில் செர்பியாவின் ஜோகோவிச் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரெவிடம் 1-6, 6-3,6-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
இந்தத் தோல்வியின் மூலம் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பெற வேண்டும் என்ற ஜோகோவிச்சின் கனவு தகர்ந்துள்ளது. அதுமாத்திரமின்றி, ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம் என தொடர்ந்து வென்று ‘கோல்டன் ஸ்லாம்‘ சாதனை படைக்கும் வாய்ப்பையும் அவர் தவறவிட்டார்.
இதனிடையே, அலெக்சாண்டர் ஸ்வெரெவ். 2018க்குப் பிறகு முதல் முறையாக ஜோகோவிச்சை வீழ்த்தியுள்ளார்.
வெண்கலப் பதக்கத்துக்காக நாளை சனிக்கிழமை நடைபெறும் போட்டியில் ஜோகொவிச்சும் பஸ்டாவும் மோதவுள்ளனர். தங்கப் பதக்கத்துக்காக ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஸ்வெரெவ்வை காச்சனோவ் எதிர்த்தாடவுள்ளார்.
>> ஒலிம்பிக் 800 மீட்டர் தகுதிச்சுற்றில் நிமாலிக்கு ஏமாற்றம்
தென்னாபிரிக்கா வீராங்கனை உலக சாதனை
தென்னாபிரிக்காவின் 24 வயது வீராங்கனை டட்டியானா ஸ்கூன்மாக்கர் பெண்களுக்கான 200 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சலில் (2 நிமிடங்கள் 18.85 செக்.) தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்தார்.
இம்முறை ஒலிம்பிக்கில் நீச்சல் தனிநபர் பிரிவில் நிகழ்த்தப்பட்ட முதலாவது உலக சாதனை இதுவாகும்.
அத்துடன், இம்முறை ஒலிம்பிக்கில் நிலைநாட்டப்பட்ட 3ஆவது உலக சாதனை இதுவாகும். இதற்கு முன் பெண்களுக்கான அஞ்சலோட்ட நீச்சலில் 2 சாதனைகள் படைக்கப்பட்டன.
இந்தப் போட்டியில் அமெரிக்கா வீராங்கனைகளான லில்லி கிங், வெள்ளிப் பதக்கத்தையும், அனி லய்சர் வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.
>> Video – ஒலிம்பிக்கில் பிரகாசிக்கத் தவறிய இலங்கை வீரர்கள்..! | Sports RoundUp – Epi 17
முதல் வில்வித்தை வீராங்கனை
தென் கொரியாவின் நட்சத்திர வீராங்கனை ஆன் சான், பெண்களுக்கான வில்வித்தை ஒற்றையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும் வென்று புதிய சாதனை படைத்தார்.
இந்த வெற்றியின் மூலம் வில்வித்தை தனிநபர் பிரிவில் மூன்று தங்கப் பதக்கங்கள் வென்ற முதல் வீராங்கனை எனும் சாதனையை ஆன் சான் படைத்திருக்கிறார்.
இவர் டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்கள் அணி, கலப்பு அணி மற்றும் தனிநபர் பிரிவு என மூன்று தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார்.
அதுமட்டுமின்றி, டோக்கியோ 2020 ஒலிம்பிக்கின் போது பெண்களின் தனிப்பட்ட வில்வித்தை தரவரிசை சுற்றில் 680 புள்ளிகளுடன் ஒரு புதிய ஒலிம்பிக் சாதனையையும் படைத்திருக்கிறார்.
கோல்ப் வீராங்கனைக்கு கொரோனா
தென்னாபிரிக்கா கோல்ப் வீரர் ஜோன் ராம் பிரைசன் கொரோனா தொற்று காரணமாக ஒலிம்பிக்கில் இருந்து விலகினர். தற்போது இந்த அணியின் கோல்ப் வீராங்கனை பவுலா ரெடோவுக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகியதால் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகினார்.
>> Photos: Day 7 – 2020 Tokyo Olympic Games
அமெரிக்க வீரருக்கு தடை
டோக்கியோ ஒலிம்பிக்கில் போட்டி நேரம் தவிர விளையாட்டு நட்சத்திரங்கள் ‘மாஸ்க்‘ அணிய வேண்டும். ஊடகவியலாளர் சந்திப்பிலும் இந்த நடைமுறை பின்பற்ற வேண்டும். இந்த விதியை மீறிய அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கல் ஆன்ட்ரூ ஊடகவியலாளர்களிடம் பேச அனுமதிக்கப்படவில்லை.
பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்த சீனா
ஒலிம்பிக் விளையாட்டு விழாவின் ஏழாவது நாள் முடிவில் சீனா 18 தங்கப் பதக்கங்களுடன் முதல் இடத்தில் உள்ளது. இன்றைய நாளில் மாத்திரம் சீனா 4 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியது.
ஜப்பான் 17 தங்கம், 4 வெள்ளி , 7 வெண்கலம் என மொத்தம் 28 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், அமெரிக்கா 14 தங்கம், 16 வெள்ளி, 11 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து ரஷ்யா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் கொரியா, நெதர்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகள் உள்ளன.
>> மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க <<