இலங்கை அணியின் அதிரடித் துடுப்பாட்ட வீரரும், ஆரம்பத் துடுப்பாட்ட வீரருமான குசல் ஜனித் பெரேரா மற்றும் சகலதுறை வீரரான திசர பெரேரா ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் ராங்பூர் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சில காலங்களாக உபாதைகளுக்கு முகங்கொடுத்து வருகின்ற குசல் பெரேரா, அண்மையில் நிறைவடைந்த சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளின்போது தசைப்பிடிப்புக்கு உள்ளாகி குறித்த போட்டித் தொடரிலிருந்து வெளியேறினார். தற்போது ஓய்விலிருக்கும் அவர், இம்மாத இறுதியில் ஆரம்பமாகவுள்ள இந்திய தொடரிலும் பங்கேற்க மாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் பரீமியர் லீக் தொடரில் களமிறங்கவுள்ள நிரோஷன் திக்வெல்ல
எனினும், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் குசல் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ள நிலையில், அதன்பிறகு ஆரம்பமாகவுள்ள பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் பங்கேற்பார் என்று குறிப்பிடப்படுகின்றது.
தற்பொழுது 26 வயதான குசல் பெரேரா, இதுவரை 27 T-20 போட்டிகளில் பங்குபற்றி 716 ஓட்டங்களைக் குவித்துள்ளார். அது போன்றே T-20 போட்டிகளில் அவரது துடுப்பாட்ட வேகம் 132.10 ஆகவும் உள்ளது.
இதேவேளை, தற்போது இங்கிலாந்தில் நடைபெற்றுவருகின்ற நெட்வெஸ்ட் T-20 போட்டித் தொடரில் க்ளொஸ்டர்ஷெயார் அணிக்காக விளையாடி வருகின்ற திஸர பெரேரா, முதற்தடவையாக பங்களாதேஷ் பிரிமீயர் லீக் தொடரில் விளையாடவுள்ளார்.
கிரிக்கெட் உலகில் பல்வேறு நாடுகளினால் நடத்தப்படுகின்ற T-20 தொடர்களில் அண்மைக்காலமாக விளையாடி வரும் 28 வயதான திஸர, இதுவரை 56 T-20 போட்டிகளில் விளையாடி 654 ஓட்டங்களையும், 36 விக்கெட்டுக்களையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த வருடத்தைப் போல இவ்வருடமும் ராங்பூர் ரைடர்ஸ் அணியில் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சாமுவேல் பத்ரி, ஜொன்சன் சார்லஸ் மற்றும் இங்கிலாந்தின் ரவி பொபாரா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார, தற்பொழுது அணியில் உள்ள அசேல குனரத்ன மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகிய வீரர்கள் ஏற்கனவே டாக்கா டைனமைட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க