பகிரங்கமாக மன்னிப்புக்கோரிய அவுஸ்திரேலிய அணித்தலைவர்!

India tour of Australia 2020-21

301
espncricinfo

அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவர் டிம் பெய்ன், மைதானத்தில்  மோசமான நடத்தையை வெளிக்காட்டிய காரணத்தால் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில், சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று முடிந்த மூன்றாவது  டெஸ்ட் போட்டியில், அஸ்வின் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின் மிகச்சிறந்த துடுப்பாட்டத்தின் ஊடாக போட்டி சமநிலையில் முடிவடைந்தது. 

டிம் பெய்னுக்கு அபராதம் விதித்த ஐசிசி

போட்டியின் போது அஸ்வினின் மூன்றாவது பிடியெடுப்பை தவறவிட்ட டிம் பெய்ன், தகாத  வார்த்தைகளால் (“இந்த முட்டாளை பாருங்கள்”) அவரைத் திட்டியுள்ளார். இந்தநிலையில் போட்டி முடிந்த பின்னர், இவை அனைத்துக்காகவும்  பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். 

அதுமாத்திரமின்றி போட்டியில், ரிஷப் பண்ட் மற்றும் ஹனுமா விஹாரி ஆகியோரின், முக்கியமான பிடியெடுப்புகளை தவறவிட்டதன் காரணமாக போட்டி முடிவில் மாற்றம் ஏற்பட்டது. எனவே, அணியின் வெற்றிக்கு தான் தடையாக இருந்ததாகவும் டிம் பெய்ன் சுட்டிக்காட்டினார்.

இதுதொடர்பில் மேலும் குறிப்பிட்ட இவர், “தற்போது உயிரியல் பாதுகாப்பு வளையத்துக்குள் வாழ்வதால், நாம் செய்த விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்கு நேரம் கிடைத்துள்ளது. இந்தநிலையில், நேற்று நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முடிந்த விடயங்கள் தொடர்பில் சிந்தித்தேன். எனவே, நேற்று நான் செய்த விடயங்களுக்காக மன்னிப்பினை கேட்டுக்கொள்கின்றேன். இதுபோன்ற அணியை வழிநடத்துவதை பெருமையாக நினைக்கும் நான், நேற்று நடந்துக்கொண்ட விதம், ஒரு மோசமான பிரதிபலிப்பாகும்.

இந்தப் போட்டியில் எனது தலைமைத்துவம் சிறப்பாக இல்லை. போட்டியின் அழுத்தத்தை உணர்ந்தமையால், எனது பிரகாசிப்பு மோசமாக அமைந்துவிட்டது. குறிப்பாக எனது விக்கெட் காப்பு தொடர்பில் சிந்தித்தேன். அதுமாத்திரமின்றி, வீரர்களுக்கு கூறிய விடயங்களிலும், நான் ஒரு சிறந்த தலைவராக செயற்படவில்லை என நினைக்கிறேன்.

குறிப்பாக நான் போட்டியை ரசித்து விளையாடும் தலைவர். அத்துடன், முகத்தில் சிரிப்புடன் விளையாடும் தலைவர். ஆனால், நேற்றைய தினம் இவற்றை தவறவிட்டிருந்தேன். நான் சாதாரண மனிதன். நான் தவறுகள் செய்யலாம். எனவே, அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

அதேநேரம், டிம் பெய்னுக்கு ஏற்பட்ட அதிகமான அழுத்தம் காரணமாக, அவரது முதல் பணியான விக்கெட் காப்பினை சரியாக செய்யவில்லை என உணர்ந்துள்ளார். 

“சாதாரணமாக நான் ஒரு விக்கெட் காப்பாளர். பிடியெடுப்பை தவறவிட்டால், எனது விக்கெட் காப்பு முறையை கணிக்கவேண்டும். ஆனால், விக்கெட்காப்பு முறை சரியாக இருந்தது. எனவே, என்னை உளவியல் ரீதியாக தயார்படுத்தியிருக்க வேண்டும். நான் அழுத்தமாக இருந்ததால், எனது முதற்தர பணியான விக்கெட்காப்பினை சரியாக செய்யமுடியவில்லை. நான் ஏனைய விடயங்களில் கவனம் செலுத்தியதால் சரியாக விக்கெட் காப்பில் ஈடுபட முடியவில்லை. டிம் பெய்ன் என்றால், முகத்தில் சிரிப்புடன் விளையாடும் வீரர். எனவே, போட்டியை ரசித்து விளையாடவேண்டும் ” என சுட்டிக்காட்டினார்.

சுற்றுலா இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின், 3 போட்டிகள் நிறைவுக்கு வந்துள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒவ்வொரு போட்டிகளில் வெற்றியீட்டி 1-1 என தொடர் சமனிலையில் இருப்பதுடன், இறுதி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் எதிர்வரும் 15ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<