இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான T20I கிரிக்கெட் தொடரின் எஞ்சிய இரண்டு போட்டிகளுக்குமான அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.
அதன்படி, தம்புள்ளை மற்றும் கொழும்பில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள டிக்கெட் கரும பீடங்களை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக டிக்கெட் கரும பீடங்களுக்கு ரசிகர்கள் செல்வதை தவிர்க்குமாறு இலங்கை கிரிக்கெட் சபை இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்குடையிலான முதலாவது T20I போட்டி நேற்று (17) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றதுடன், இலங்கை அணி 4 ஓட்டங்களால் த்ரில் வெற்றியைப் பதிவு செய்தது.
- த்ரில்லர் வெற்றியோடு முதல் T20I போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை
- முதல் T20I போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன!
இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது T20I போட்டியை சுமார் 18 ஆயிரம் பார்வையாளர்கள் கண்டுகளித்ததாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது T20I போட்டி நாளை (19) நடைபெறவுள்ளதுடன், 3ஆவது மற்றும் கடைசி T20I போட்டி 21ஆம் திகதி தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<