ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான கோலுன்றிப் பாய்தலில் சுவீடனின் ஆர்மண்ட் டுப்லான்டிஸ், பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் நைஜீரிய வீராங்கனை டோபி அமுசான் மற்றும் பெண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டத்தில் அமெரிக்காவின் சிட்னி மெக்லோலின் ஆகியோர் உலக சாதனைகள் நிலைநாட்டினர்.
இதில் பெண்கள் பிரிவில் 2 உலக சாதனைகளும் ஆண்கள் பிரிவில் ஒரு உலக சாதனையும் நிலைநாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமெரிக்காவின் ஒரிகொன் மாநிலத்தில் உள்ள யூஜின் நகரில் நடைபெற்ற 18ஆவது உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடர் வெற்றிகரமாக நிறைவுக்கு வந்தது.
179 நாடுகளைச் சேர்ந்த சுமார் 1700 வீர வீராங்கனைகள் பங்குகொண்ட இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் 29 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பதக்கங்களை வென்று அசத்தியிருந்தனர். அதேபோல, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் வரலாற்றில் லைபீரியா, பாகிஸ்தான், நைஜர், சமோவா, பிலிப்பைன்ஸ் மற்றும் குவாதமாலா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல் தடவையாக இறுதிப் போட்டிக்கு தெரிவாகியிருந்தனர்.
>> உலக மெய்வல்லுனர் 100 மீட்டர் தகுதிச் சுற்றில் யுபுனுக்கு ஐந்தாமிடம்
அதுமாத்திரமின்றி 13 சம்பியன்ஷிப் சாதனைகள், 30 போட்டி நிகழ்ச்சிகளுக்கான உலகின் அதிசிறந்த பெறுபேறுகள், 19 வலய சாதனைகள், 92 தேசிய சாதனைகள் மற்றும் 20 வயதின் கீழ் உலக சாதனையொன்றும் நிலைநாட்டப்பட்டன.
இந்த நிலையில், இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் 3 உலக சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.
பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்ட அரை இறுதிப் போட்டியை 12.12 செக்கன்களில் நிறைவுசெய்ததன் மூலம் நைஜீரிய வீராங்கனை டோபி அமுசான் புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.
அதன் பின்னர் நடைபெற்ற பெண்களுக்கான 100 மீட்டர் சட்டவேலி ஓட்ட இறுதிப் போட்டியிலும் அவர் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
பெண்களுக்கான 400 மீட்டர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவு செய்த அமெரிக்காவின் சிட்னி மெக்லோலின் புதிய உலக சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இதனிடையே, ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் தொடர்ந்து சாதனைகளை நிலைநாட்டி வரும் சுவீடன் நாட்டு வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் 6.21 மீட்டர் உயரம் தாவி தனது சொந்த சாதனையை முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டினார்.
இதன்மூலம் கோலூன்றிப் பாய்தலில் அவர் தொடர்ச்சியாக 5ஆவது முறையாக உலக சாதனை படைத்தார். முன்னதாக கடந்த மார்ச் மாதம் செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெற்ற சர்வதேச மெய்வல்லுனர் போட்டியில் 6.20 மீட்டர் உயரம் தாவி அவர் உலக சாதனை படைத்திருந்தார்.
இது இவ்வாறிருக்க, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பில் இலங்கை சார்பில் 3 வீரர்கள் பங்குபற்றியிருந்தனர். இதில் ஆண்களுக்கான 100 மீட்டர் தகுதிச் சுற்றில் பங்குபற்றிய யுபுன் அபேகோன் (10.19 செக்.) ஒட்டுமொத்த நிலையில் 30ஆவது இடத்தைப் பிடித்தார்.
பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய நிலானி ரத்நாயக (9:54.10) ஒட்டுமொத்த நிலையில் 39ஆவது இடத்தையும், பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய கயன்திகா அபேரட்ன (2:02.35) ஒட்டுமொத்த நிலையில் 29ஆவது இடத்தையும் பிடித்தனர்.
>> உலக மெய்வல்லுனர் 800 மீட்டரில் கயன்திகாவுக்கு ஐந்தாமிடம்
இதேவேளை, இம்முறை உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப் பதக்கங்கள் நிலையில் ஐக்கிய அமெரிக்கா 13 தங்கங்களுடன் முதலிடத்தைப் பிடித்ததுடன், ஒட்டுமொத்த சம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது.
4 தங்கப் பதக்கங்களை வென்ற எதியோப்பியா 2ஆவது இடத்தையும், 2 தங்கப் பதக்கங்களை வென்ற ஜெமெய்க்கா 3ஆம் இடத்தையும் பெற்றன.
இதனிடையே, உலக மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் 19ஆவது அத்தியாயம் அடுத்த ஆண்டு ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க <<